949 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் மாயம்: அமைச்சர் சேகர்பாபுவுக்கு பொன்மாணிக்கவேல் புகார்!

949 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் மாயம்: அமைச்சர் சேகர்பாபுவுக்கு பொன்மாணிக்கவேல் புகார்!

Share it if you like it

949 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை காணவில்லை என்றும், அக்கோயிலில் இருந்த சிலைகள் அனைத்தும் களவுபோய்விட்டது என்றும், அவற்றை கண்டுபிடித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அமைச்சர் சேகர்பாபுவுக்கு புகார் அனுப்பி இருக்கிறார்.

ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் 2012-ம் ஆண்டு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு, தமிழகத்தில் களவுபோன ஏராளமான சுவாமி சிலைகளை கண்டுபிடித்தார். குறிப்பாக, 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜசோழன், உலகமகாதேவி ஐம்பொன் சிலைகளை, குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்தும், நடராஜர் சிலையை ஆஸ்திரேலியாவிலுள்ள அருங்காட்சியகத்தில் இருந்தும் மீட்டார். இதுவரை, 155 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை மீட்டிருக்கும் பொன்மாணிக்கவேல், சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறார். அதோடு, இந்து சமய அறநிலையத்துறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, சில அதிகாரிகளையும் கைது செய்தார்.

இந்த நிலையில்தான், 949 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை காணவில்லை என்றும், அக்கோயிலில் இருந்து சிலைகள் களவுபோய் விட்டதாகவும் கூறியிருக்கும் பொன்மாணிக்கவேல், மேற்படி சிலைகளை கண்டுபிடிப்பதோடு, அக்கோயில் குறித்த கல்வெட்டை தமிழகத்துக்கு கொண்டுவந்து பொக்கிஷமாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவுக்கு புகார் அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுப்பி இருக்கும் புகாரில் கூறியிருப்பதாவது:-

“கர்நாடக மாநிலம் தும்குர் மாவட்டம் குனிகல் தாலுகாவிலுள்ள கோட்டேகிரி என்கிற கிராமத்தில் அண்மையில் கட்டப்பட்ட சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. இந்த கோயிலுக்கு அருகில் பழமையான அரச மரம் ஒன்று இருக்கிறது. இதன் அடியில் இருந்து ஒரு பழைய கருங்கல் பலகை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது ராஜராஜசோழனின் முதல் பேரனாகிய ஸ்ரீ உடையார் ராஜாதி ராஜ சோழரால் பொறிக்கப்பட்டதாகும். இந்த கல்வெட்டு மூலம் பல்வேறு வரலாற்று உண்மைகள் வெளிவந்திருக்கிறது. அதாவது, ராஜாதி ராஜ சோழ மன்னரால் சோழீஸ்வரம் என்ற பெயரில் கோட்டேகிரியில் ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயில் 949 ஆண்டுகள் பழமையானது. ஆனால், அந்தக் கோயிலை தற்போது காணவில்லை. மேலும், இக்கோயிலில் இருந்த சிலைகள் அனைத்தும் திருட்டு போயிருக்கிறது. அதேசமயம், அங்கு வெட்டப்பட்ட ஏரி தற்போதுவரை அப்படியே இருக்கிறது. ஆகவே, காணாமல் போன சிவன் கோயிலையும், களவுபோன சிலைகளையும் கர்நாடக அரசுடன் இணைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரச மரத்தடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கருங்கல் கல்வெட்டை, தமிழகத்துக்குக் கொண்டு வந்து, அரிய பொக்கிஷமாக பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.


Share it if you like it