மீண்டும் கிடப்பில் போனதா? பாலாறு மேம்பாலம் – வெள்ள காலங்களில் முடங்கும் வேலூர் – திருப்பத்தூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை

மீண்டும் கிடப்பில் போனதா? பாலாறு மேம்பாலம் – வெள்ள காலங்களில் முடங்கும் வேலூர் – திருப்பத்தூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை

Share it if you like it

தற்போதைய வேலூர் மாவட்டத்தின் எல்லையான அழிஞ்சி குப்பம் ஊராட்சியும், பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் வட புதுப்பட்டு ஊராட்சி எல்லையான பச்ச குப்பம் கிராம எல்லையும், பாலாற்றின் இரு கரைகளாக இருக்கிறது. இரண்டு மாவட்டங்களை பிரிக்கும் பாலாறு பெருக்கெடுக்கும் போதெல்லாம் பழுதுபட்ட பழைய தரைப்பாலம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிப்பது வழக்கமாகிவிட்டது. இந்தத் தரைப்பாலம் அமைந்திருக்கும் பாலாற்று பகுதியானது வெறும் பாலாற்றின் வெள்ளத்தை மட்டும் கடத்தும் ஆற்றுப்பகுதி அல்ல. இந்தத் தரைப்பாலத்தில் இருந்து சில மீட்டர் இடைவெளியில் மேற்கில் மலட்டாறு என்னும் ஒரு காட்டாறு பாலாற்றோடு சங்கமிக்கும். அந்த மலட்டாறு கர்நாடக – ஆந்திர – தமிழக எல்லையின் வனப்பகுதியில் புறப்பட்டு வரும் ஒரு சிற்றாறு என்றாலும் பெரும் காட்டாற்று வெள்ளத்தை அவ்வப்போது உருவாக்கும் ஒரு சிறு நதி. அரவட்லா- பேர்ணாம்பட்டு- நரியம்பட்டு வழியாக பாய்ந்து ரெட்டி மாங்குப்பம் எல்லையில் பாலாற்றில் கலக்கிறது.இதே பாலாற்றில் ஆம்பூர் நகருக்கு வெளியே ஆம்பூர் மலைப்பகுதியின் ஆனை மதகு கண்மாயில் இருந்து உருவாகும் ஒரு சிறு காட்டாறும் பாலாற்றில் கலக்கிறது.

பாலாறு தமிழக எல்லையில் நுழையும் கொடையாஞ்சி எல்லைக்கு அடுத்து வாணி தேக்கம் என்ற ஒரு சிறு தடுப்பணை மட்டுமே வாணியம்பாடி அருகே இருக்கிறது. ஆகையால் வாணி தேக்கம் நிரம்பும் பட்சத்தில் பாலாற்றில் வெள்ளம் தவிர்க்க முடியாததாகிவிடும். பெருமழை காரணமாக மலட்டாறு – ஆனை மதகு காட்டாறு உள்ளிட்டவற்றில், பெருக்கெடுக்கும் வெள்ளமும் பாலாற்றில் சேரும்போது , பச்சை குப்பம் பகுதியில் பெரும் வெள்ளமாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்குகிறது. இதில் பச்சை குப்பம் தரைப்பாலம் பாலாறு- மலட்டாறு இரண்டின் வெள்ளத்தையும் கடத்தும் வகையிலான தரைப்பாலமாகத்தான் இருந்தது. 1991 ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது பாலம் சேதம் அடைந்து அதன் பிறகு அது முழுமையாக சீரமைக்கப்படவே இல்லை. 2015 ல் பாலம் முழுவதுமாக பழுதடைந்த காரணத்தால் ,தற்போது சிறிய அளவில் வெள்ளம் வந்தால் கூட பாதுகாப்பு கருதி பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

மலட்டாறில் வெள்ளம் பெருக்கெடுக்கும் பட்சத்தில் காட்டாம்பூர்- நரியம்பட்டு இடையே இருக்கும் தரைப்பாலமும் நீரில் மூழ்கி அந்த வழியிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. அந்த தரைப்பாலமும் முழுமையாக பழுதடைந்திருந்ததே. காட்டாம்பூர்- நரியம்பட்டு சாலை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டதால் அதில் மேம்பாலம் கட்டும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது உயர் மேம்பாலம் கட்டும் பணிகள் முடிவுற்று பயன் பாட்டிற்கு வந்த நிலையில் கால் நூற்றாண்டு காலம் கிடப்பில் இருக்கும் இந்த மேம்பால பணி அரசின் பாரபட்சத்தையே காட்டுகிறது.

கடந்த காலங்களில் இது போன்ற வெள்ளப் பெருக்கு காலத்தில் போக்குவரத்து தடை செய்யும் பட்சத்தில் மாற்றுப் பாதையாக உள்ளி- வளத்தூர் – மாதனூர் வழியான பாலாற்று தரைப்பாலம் வழியிலான பாதை இந்த சுற்று பக்கத்தில் இருக்கும் கிராம மக்களுக்கு ஒரே வழியாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பாலமும் முழுமையாக சேதம் அடைந்த காரணத்தால் பாதுகாப்பு கருதி பல நேரங்களில் அந்தப் பாலத்திலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பாலாறு- மலட்டாறு உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தால் திருப்பத்தூர் -வேலூர் மாவட்ட எல்லைகளில் இருக்கும் கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு , அவசர உதவிகள்- அசாதாரண சூழலுக்கு கூட உதவிகள் கிடைக்க பெறாத நிலையே நீடிக்கிறது.

இந்த சுற்று வட்டார கிராமங்கள் அனைத்தையும் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோடு நேரடியாக இணைக்கும் சாலைகள் பச்சை குப்பம் தரைப்பாலமும், உள்ளி – மாதனூர் தரைப்பாலமும் தான். இந்த இரண்டும் வெள்ள காலங்களில் போக்குவரத்து தடை செய்யப்படும் பட்சத்தில் 20 கிலோமீட்டர் வரை குடியாத்தம் பயணம் செய்து அங்கிருந்து பள்ளி கொண்டான் வழியாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைவது ஒன்றே வழி. திருமணம் – துக்க நிகழ்வுகள் என்ற தவிர்க்க முடியாத சூழலில் இந்த தரைப்பால போக்குவரத்து தடையால் மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. அரை கிலோ மீட்டர் அளவில் மேம்பாலம் இல்லாத காரணத்தால் குடியாத்தம் – பள்ளி கொண்டான் என்று 50 கிமீ வரை பயணிக்கும் மக்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் கூடுதல் செலவு – கால விரயம் – அதனால் ஏற்படும் அலைக்கழிப்பு இதன் காரணமாக நேரிடும் இடர்ப்பாடுகள் – இழக்கும் வாய்ப்புகள் பற்றிய மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு?.

இந்த சுற்றுவட்டார கிராமங்களுக்கெல்லாம் ஆம்பூர்,ரயில் நிலையம்- பேருந்து நிலையம் தான் முக்கிய போக்குவரத்து முனைமங்கள். அரசு மருத்துவமனை- வங்கிகள்- அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலானவற்றிற்கு மக்களின் முதல் தேர்வு அருகில் இருக்கும் ஆம்பூர் நகரமே.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள்- உத்தியோகம் -தொழில்- வியாபாரம் காரணமாக தினசரி பிரயாணம் செய்வோர் என்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு போக்குவரத்தில் பெரும் உதவியாக இருப்பது பச்சை குப்பம்-அழிஞ்சிகுப்பம் தரைப்பாலம் ஒன்றே. அது ஆண்டுதோறும் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடை என்பதெல்லாம் இம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கிறது.

ஆம்பூர் முழுமையான தோல் நகரமாகும். அதன் சுற்றுப்பக்கங்களில் இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் பணியாளர்களாக இருப்பவர்கள் பெரும்பாலான மக்கள் அழிஞ்சி குப்பம் – ராஜக்கல்- மேல்வழி துணையாங் குப்பம் – மேல்பட்டி வரையிலான ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களே.. இந்தத் தரைப்பால போக்குவரத்து தடையாகும் பட்சத்தில் இம் மக்கள் யாவரும் பள்ளிகொண்டா வழியாக மிகவும் சிரமப்பட்டு வேலைக்குப் போகும் நிலை. அதோடு வருடம் முழுவதும் பெரும் பணிச்சுமையோடு இயங்கும் தோல் தொழிற்சாலைகளிலும் பணிகள் பாதித்து தேக்கம் அடையும் நிலை.

நரியம் பட்டு தொடங்கி வளத்தூர் வரையிலும் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் எல்லாம் தங்களின் தினசரி தொழில் புழக்கத்திற்கு ஆம்பூர் நகரை சுற்றி இருக்கும் பெரிய அளவிலான தோல் தொழிற்சாலைகளையே, முற்றிலும் சார்ந்திருக்கிறது. இந்த வெள்ள கால போக்குவரத்து தடை என்பது அந்த தொழிற்சாலைகளையும் முற்றிலும் பாதிக்கிறது.

நரியம் பட்டு முதல் குடியாத்தம் வரையில் இருக்கும் பல்வேறு தனியார் அரசு பள்ளிகளிலும், திருப்பத்தூர் முதல் காட்பாடி வரையில் இருக்கும் பல்வேறு பள்ளிகள் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் தினசரி போக்குவரத்திற்கு பச்சை குப்பம்- அழிஞ்சிகுப்பம் தரைப்பாலம் ஒன்றே தீர்வு. இந்தப் பாலம் போக்குவரத்து தடை செய்யப்படும் நேரங்களில் மாணவர்களும்- ஆசிரியர்களும் – பெற்றோர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாவதும், அதிலும் இதுபோன்ற தேர்வு சமயங்களில் போக்குவரத்து பாதிப்பு என்பது அவர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.

தென் மாவட்டங்களில் இருந்தும் , கேரளா – கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆந்திரா- தெலுங்கானா -முதல் வட இந்திய – வடகிழக்கு மாநிலங்கள் வரை பயணிக்கும் நெடுந்தூர போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்கள் எல்லாம் பயண தூரத்தை குறைக்கவும், சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றை தவிர்க்கவும் குறைந்த செலவில் உணவு -,ஓய்வு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் பச்சை குப்பம் – தேசிய நெடுஞ்சாலையின் இறக்கத்தில் இருந்து இந்த பச்சை குப்பம் – அழிஞ்சிகுப்பம் தரைப்பாலம் வழியாக அழிஞ்சிகுப்பம் – மேல்பட்டி – குடியாத்தம் வழியாக ஆந்திர எல்லையை சென்றடையும். இதனால் இந்த தரைப்பாலம் கனரக மற்றும் சுற்றுலா போக்குவரத்திற்கும் அத்தியாவசிய தேவையாகிறது.

முழுவதுமாக கிராமங்கள் – கிராம நெடுஞ்சாலைகள் என்றாலும் கூட நல்ல கல்வி அறிவும், தொழில்- வியாபார வளர்ச்சியும் இருக்கும் பகுதிகள் என்பதால் போக்குவரத்திற்கும் சிக்கனமாகவும் வசதியானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் காரணத்தால் திருப்பதி – திருமலை யாத்திரை, பழனி- சபரிமலை யாத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக சுற்றுலா யாத்திரிகர்களின் பாதுகாப்பான வழித்தடமாக இந்த பச்சை குப்பம்-அழிஞ்சிகுப்பம் மேம்பாலமும், ஆம்பூர் – குடியாத்தம் கிராம சாலையும் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் இந்த சுற்று வட்டாரத்தில் இயங்கும் அத்தனை கிராமங்களில் பணம் வழங்கும் இயந்திரம் உட்பட கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் பூர்த்தி செய்வதற்கு ஆம்பூர்- வேலூர் வங்கிகளும் – அரசு மருத்துவமனைகளே பிரதானம் என்பதால் இந்த கிராமங்களை எல்லாம் சென்னை-& பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் இந்த பச்சை குப்பம்- அழிஞ்சிகுப்பம் தரைப்பாலம் போக்குவரத்து என்பதை கடந்து மருத்துவம் – பாதுகாப்பு – மீட்பு- அவசரம் உள்ளிட்ட அத்தனை அசாதாரண சூழல்களுக்கும் அத்தியாவசிய தேவையாகிறது.

இந்த கிராமப் பகுதிகளில் கரும்பு- தென்னை விளைச்சல் அமோகமாக இருக்கும். இதை பிரதானமாக வைத்து பல்வேறு சிறு தொழில்களும் இயங்கும் சென்னை- பெங்களூரு தேசிய,நெடுஞ்சாலையில் இருக்கும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தை இணைப்பது இந்த தரைப்பாலமே. விவசாயம் – தொழில் தேவையான நுகர்வுக்கும் சந்தைப்படுத்துதலுக்கும் பிரதான போக்குவரத்தாக இருப்பது இந்த தரைப்பால சாலையே.

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோடு அருகில் இணைவதாகவும், அரசு- தனியார் போக்குவரத்து , சரக்கு வாகன கையாளுகை , கல்வி -மருத்துவம்- சுற்றுலா -ஆன்மீகம் என்று அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் சாலையாக இருக்கும் இந்த பச்சை குப்பம்- அழிஞ்சிகுப்பம் தரைப்பாலம் வழியிலான சாலை தான் மாநில நெடுஞ்சாலையாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் .

ஆனால் அதிக அளவிலான தோல் தொழிற்சாலைகள் நிரம்பி இருந்த காட்டாம்பூர் – நரியம்பட்டு பகுதியும், அதன் வாக்கு வங்கி அரசியலும் இந்த சாலையை பின்னுக்கு தள்ளி நரியம்பட்டு- காட்டாம்பூர் வழியான இணைப்பு சாலையை மாநில நெடுஞ்சாலையாக அங்கீகரித்து விட்டது. ஆனால் அந்த சாலையை விட அதிக அளவில் பயன்பாடும் முக்கியத்துவமும் இருக்கும் அழிஞ்சி குப்பம் – பச்சை குப்பம் இணைப்பு சாலையில் இருக்கும் இந்த பாலாறு தரைப்பாலம் , புதிய மேம்பால கட்டுமானத்திற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமலும் கால் நூற்றாண்டிற்கும் மேலாக இந்த பகுதி மக்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருப்பதும் ஏற்புடையது அல்ல.

அரை, நூற்றாண்டுக்கு முன்பாக குறைந்த மக்கள் தொகையும் போக்குவரத்தும் இருந்த காலத்தில் கட்டப்பட்ட தரைப்பாலமே இன்றளவிலும் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் இந்த பாலத்தின் வழியான போக்குவரத்து பல நூறு மடங்கு கூடிவிட்டது என்பதே உண்மை. பழுதடைந்த இந்த தரைப்பாலம் மக்களின் நலன் – பாதுகாப்பு கருதி சீரமைக்கப்படுவதோடு எதிர்வரும் வெள்ள காலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அழிஞ்சி குப்பம் ஊராட்சி எல்லை முதல் பச்சை குப்பம் ஊராட்சி எல்லை வரை பாலாற்றின் குறுக்கே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை நேரடியாக சென்றடையும் வகையிலான ஒரு உயரமான மேம்பாலம் கட்டப்படுவது ஒன்றே இந்த வெள்ளத்திற்கும் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நிரந்தர தீர்வாக இருக்கும்.

சேலம் – திருப்பதி ஆறு வழி சாலையில் அழிஞ்சிகுப்பம் முதல் குடியாத்தம் வரையிலான இணைப்பு சாலை இடம்பெறுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிறது. அந்த சாலை பணி தொடங்கும் பட்சத்தில் இந்த உயர் ரக மேம்பாலம் ஒன்றே தடையில்லா மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு நிரந்தரமான தீர்வாக இருக்கும். 50 ற்கும் மேற்பட்ட கிராம மக்களை அவர்களின் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான போக்குவரத்தில் முதன்மையும் முன்னுரிமையாகவும் விளங்கும் அழிஞ்சிகுப்பம்- பச்சை குப்பம் பாலாறு தரைப்பாலம் உடனடியாக பழுது பார்க்கப்பட வேண்டும். பாலாற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலையை இணைத்து ஒரு பாதுகாப்பான உயர் ரக மேம்பாலும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே இரண்டு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.


Share it if you like it