தமிழகத்தில் யார் யாருக்கு பத்ம விருது?!

தமிழகத்தில் யார் யாருக்கு பத்ம விருது?!

Share it if you like it

நிகழாண்டுக்கான பத்ம விருதுகள் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கலை, சமூக சேவை, அறிவியல், மருத்துவம் என பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் நபர்கள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில், நிகழாண்டு 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்ரமணியம், நடராஜன், முத்துகண்ணம்மாள், சௌகார் ஜானகி, எஸ்.தாமோதரன், வீராசுவாமி சேஷையா, எஸ்.பல்லேஸ் பஜந்திரி ஆகிய 7 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சிற்பி பாலசுப்பிரமணியன், கோவை மாவட்டம் ஆத்துப்பொள்ளாச்சி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இலக்கியம், கல்விக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

சௌகார் ஜானகி, பழம் பெரும் திரைப்பட நடிகை. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர். தமிழ்த்திரைப்பட உலகில் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர். கலை பிரிவுக்காக இவருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு வழங்கப்படுகிறது.

முத்துக்கண்ணம்மாள், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர். சதிர் நாட்டியக் கலைஞர். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தார். கடந்த 75 ஆண்டுகளாக தன்னை கலைக்காக அர்ப்பணித்தவருக்கு நிகழாண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏ.கே.சி.நடராஜன், திருச்சியைச் சேர்ந்தவர். கிளாரினெட் கலைஞர். கர்நாடக இசைக்கேற்ப பக்கவாத்தியமாக கிளாரினெட்டை மாற்றி, ரசிகர்களை கிறங்கடித்தவர். இவரின் கலைத் திறமையை அங்கீகரிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டாக்டர் சேஷய்யா, சென்னையைச் சேர்ந்தவர். 1957-ல் சென்னை மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, இந்திய ராணுவத்தில் மருத்துவ சேவையாற்றியவர். பி.சி.ராய் உட்பட பல விருதுகளை பெற்றவர். மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்லேஷ் பஜந்திரி, கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர். கஜல் பாடகர், செனாய் இசை கலைஞர். தமிழகத்தின் கலைமாமணி, கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். ஹிந்துஸ்தானி இசையில் தன்னிரகற்று விளங்கும் இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தாமோதரன், திருச்சியைச் சேர்ந்தவர். கிராமாலயா என்ற சேவை நிறுவனத்தின் வழியாக கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக உழைத்து வருபவர். சமூக சேவைக்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it