பயங்கரவாத அமைப்பின் மாஜி தளபதி சுட்டுக்கொலை!

பயங்கரவாத அமைப்பின் மாஜி தளபதி சுட்டுக்கொலை!

Share it if you like it

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான அல் பத்ர் அமைப்பின் முன்னாள் தளபதி சையத் காலித் ராசாவை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்களில் தொடர்புடை நபர்கள், ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன், அல் பத்ர், ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய எல்லையில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வந்தவன் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி இம்தியாஸ் ஆலம் என்கிற பஷீர் அகமது பீர் . இவனை இந்திய அரசு தேடப்படும் குற்றவாளியாக கடந்தாண்டு அறிவித்தது. இந்த சூழலில், இம்தியாஸ் ஆலம் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டியில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் இம்தியாஸ் ஆலமை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இந்த நிலையில், அதே பாணியில் அல் பத்ர் பயங்கரவாத குழுவின் தளபதியாக இருந்தவன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் அல் பத்ர் என்கிற பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவன் சையத் காலித் ராசா. இவன், பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள குலிஸ்தான்-இ-ஜோஹர் 7-வது பிளாக்கில் வசித்து வந்தான். இந்த சூழலில், இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்ட காலித் ராசா, வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது காரை நோக்கி நடந்து சென்றிருக்கிறான். அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், சையத் காலித் ராசாவை நோக்கி சரமாரியாகச் சுட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில், ஒரு குண்டு தலையில் பாய்ந்த நிலையில், காலித் ராசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இவன், 1990 முதல் சுமார் 8 ஆண்டு காலம் அல் பத்ர் பயங்கரவாதக் குழுவின் தளபதியாக இருந்தவன்.

1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது பங்களாதேஷ்) வங்காள மொழி பேசும் மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதரவுடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த அல் பத்ர் பயங்கரவாத இயக்கம். இவர்கள், வங்காள மொழி பேசும் ஹிந்துக்களை படுகொலை செய்தது நினைவிருக்கலாம். பின்னர், குல்புதீன் ஹெக்மத்யார் தலைமையில் ஆப்கானிஸ்தானில் செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஹிஸ்ப்-இ-இஸ்லாமியின் ஒரு பகுதியாக அல் பத்ர் மாறியது. இதன் பிறகு, இந்த அமைப்பு 1990-ல் ஜம்மு காஷ்மீருக்கு வந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுடன் இணைந்து காஷ்மீர் பண்டிட்களை கொன்று குவித்தது. 1998-ல் இரு அமைப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பிலிருந்து அல் பத்ர் பிரிந்து தனி பிரிவினைவாத அமைப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it