கடன் கேட்ட பாகிஸ்தான்… கைவிரித்த ஐ.எம்.எஃப்.: திவாலாகிறதா?!

கடன் கேட்ட பாகிஸ்தான்… கைவிரித்த ஐ.எம்.எஃப்.: திவாலாகிறதா?!

Share it if you like it

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, அமெரிக்கா, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்ட நிலையில், அக்கோரிக்கையை ஐ.எம்.எஃப். நிராகரித்து விட்டது. மாறாக பாகிஸ்தான் நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தும்படி வலியுறுத்தி இருக்கிறது.

நமது அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இலங்கை திவாலாகி விடும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்த நிலையில், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் உதவியுடன் தப்பிப் பிழைத்தது. தற்போது, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த சூழலில், நமது மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானில் கோதுமை, பால் பொருட்கள், ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அத்தியாவசிப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. பணவீக்கம், பொருளாதார நெருக்கடி ஆகிய பாதிப்புகளுக்கு மத்தியில், கடந்தாண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. மேலும், அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது.

இதையடுத்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்டிருக்கிறது. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு கடனாக நிதியுதவி வழங்க முன்வந்தது. அதேபோல, சர்வதேச நாணய நிதியத்திடமும் (ஐ.எம்.எஃப்.) கடன் வாங்கும் முயற்சியிலும் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக, சி.டி.எம்.பி. எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து ஐ.எம்.எஃப்.க்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த திட்டத்தை ஆய்வு செய்த ஐ.எம்.எஃப்., அத்திட்டத்தினை ஏற்காமல் நிராகரித்து விட்டது. மாறாக, மின் கட்டணத்தை உயர்த்தும்படி பாகிஸ்தான் அரசை ஐ.எம்.எஃப். வலியுறுத்தி இருக்கிறது. இதனால், கூடுதலான மானிய தொகையான 33,500 கோடி பாகிஸ்தான் கரன்சி மதிப்பிலான தொகையை ஈடுகட்ட முடியும். இந்த, மின் கட்டண அதிகரிப்பானது, பணபற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் மின் துறையின் இழப்பை குறைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், பாகிஸ்தான் நாட்டில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகவே, இதை சுட்டிக்காட்டி மின் கட்டண உயர்வு நடைமுறையை அமல்படுத்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுத்து விட்டார். எனினும், கடந்த சில நாட்களாக அந்நாட்டுக்கான நெருக்கடி அதிகரித்து வருகிறது. காரணம், வேறெந்த நட்பு நாடுகளும் குறைந்த அளவிலான உதவியைக்கூட அளிக்க முன்வரவில்லை. இதனிடையே, பாகிஸ்தான் அரசுக்கும், ஐ.எம்.எஃப். அமைப்புக்கும் இடையே சுமுக ஒப்பந்தம் எட்டப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக, ஐ.எம்.எஃப். குழு ஒன்று பாகிஸ்தானில் முகாமிட்டு ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறது. அதேசமயம், சி.டி.எம்.பி. திட்டத்தில் உண்மையில்லை என்றும், பாகிஸ்தான் பெறக்கூடிய நிதியுதவி அனைத்தும் அந்நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் கைக்கே போய்ச் சேருகிறது என்றும் ஐ.எம்.எஃப். குறிப்பிட்டிருக்கிறது. இதன் எதிரொலியாகவே, சி.டி.எம்.பி. திட்டம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Share it if you like it