பாகிஸ்தானில் இருந்து இலங்கை, மாலத்தீவு, இந்தியா ஆகிய நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட, 25,000 கோடி ரூபாய் மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளை இந்த கடற்படையினர் கொச்சியில் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய கடற்பகுதி வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுக்க, இந்திய கடற்படையினரும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் ‘சமுத்திர குப்தா’ என்கிற பெயரில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில், இந்திய கடற்பகுதி வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக, இந்திய கடற்படைக்கும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கும் (என்.சி.பி.) கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இரு பிரிவினரும் இந்திய கடல் எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சி அரபிக் கடலில் இரு பிரிவினரும் இணைந்து நடத்திய சோதனையில், 2,500 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இது மெத்தபெட்டமைன் என்கிற அதிக போதை தரும் போதைப் பொருளாகும். மொத்தம் 134 மூட்டைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதன் மதிப்பு 25,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் இதுதான் அதிகபட்ச மதிப்பு என்று கூறப்படுகிறது. இக்கப்பலில் இருந்து பாகிஸ்தானி ஒருவரை அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து கடற்படை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கூறுகையில், “தாய் கப்பல் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய கப்பல் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறது. இந்த தாய் கப்பல் வரும் கடலில் பயணித்து வரும் வழிகளில் பல்வேறு சிறு படகுகளுக்கு போதைப் பொருள் மாற்றப்படுகிறது. அந்த சிறிய படகுகள் வழியாக வெவ்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தப்படுகிறது. தற்போது பிடிபட்டிருக்கும் மூட்டைகளில் பாகிஸ்தான் நாட்டு அடையாளங்கள் இருக்கின்றன. இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த போதைப் பொருளை கடத்த திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது” என்றார்கள்.