எல்லை தாண்டி மீன் பிடித்தது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 200 இந்திய மீனவர்கள், பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், வாகா எல்லையில் நமது நாட்டு பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எல்லை பாதுகாப்பு, பயங்கரவாத ஊடுருவல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், நமது எல்லையில் நம் நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும், பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல, கடல் எல்லை பகுதியிலும் இரு நாட்டு கடற்படையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இரு நாட்டு பாதுகாப்புப் படையினரும் எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்களையும் கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நமது நாட்டு மீனவர்கள் ஏராளமானாரோ பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில், பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 200 பேரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்திருப்பதாகவும், விடுதலை செய்யப்பட்டவர்கள் வாகா எல்லையை அடைந்ததும், குடியுரிமை உள்ளிட்ட சோதனைகளுக்குப் பிறகு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் நமது ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, விடுதலை செய்யப்பட்ட 200 மீனவர்களையும் பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில், நமது நாட்டு ராணுவத்திடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். கடந்த மே மாதம் 198 மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்திய மீனவர்களை விடுதலை செய்து வருகிறது. இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டமாக ஜூலை மாதம் 100 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,188 படகுகள் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பின் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவற்றை விரைவில் மீட்டுத் தருமாறும் மத்திய அரசுக்கு மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.