துப்பாக்கி முனையில் சீக்கிய சிறுமியை கடத்தி மதமாற்றம்: போராட்டத்தில் குதித்த சீக்கியர்கள்!

துப்பாக்கி முனையில் சீக்கிய சிறுமியை கடத்தி மதமாற்றம்: போராட்டத்தில் குதித்த சீக்கியர்கள்!

Share it if you like it

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் சீக்கிய சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, கட்டாய மதமாற்றம் செய்து, திருமணம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, நீதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணம் புனர் மாவட்டத்தில் ஏராளமான சீக்கிய சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சூழலில், கடந்த 20-ம் தேதி மாலை இங்கு வசித்து வரும் குருசரண் சிங் மகள் தினா கவுர் என்பவரை, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது நண்பர்கள் சிலருடன் வந்து, துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றிருக்கிறார். பின்னர், அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி, திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உதவியாக இருந்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான சீக்கியர்களும், உள்ளூர் மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து நசுக்கப்படுகிறோம். தாக்கப்படுகிறோம். உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் எங்களது மகள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டிருக்கிறார். பின்னர், அவளை சித்ரவதைப் படுத்தி, மதமாற்றம் செய்து, திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். மேலும், உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன், எங்களுடைய குழந்தையை கட்டாயப்படுத்தி ஆவணங்களில் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். போலீஸார் எங்களது புகாரைக் கூட பதிவு செய்யாமல் நாள் முழுவதும் எங்களை தவறாக வழிநடத்தி அலைக்கழித்தனர்.

நாங்கள் அதிகாரிகளை சென்று பார்த்தபோதும், அவர்களும் எங்களுக்கு திருப்தியான பதிலளிக்கவில்லை. இந்த குற்ற சம்பவத்தில் எல்லாரும் கூட்டுக் களவாணிகளாக இருக்கிறார்கள். ஆகவே, பாகிஸ்தான் மக்களுக்கும், உலகில் உள்ள சீக்கிய சமூகத்தினருக்கும் நான் வேண்டுகோள் வைக்கிறேன். இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக எங்களுடன் இணைந்து போராட வாருங்கள். எங்களது குழந்தை எங்களிடம் ஒப்படைக்கப்படும் வரை நாங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம்” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு சீக்கியரோ, “எங்களுடைய அண்டை வீடுகளில் வசிக்கும் முஸ்லிம் மக்களுடன் நல்ல முறையிலான உறவிலேயே பழகி வருகிறோம். இதுபோன்ற தாக்குதல்கள், சித்ரவதை செய்தல் மற்றும் கட்டாயப்படுத்தி எங்களுடைய குழந்தைகளை மதம் மாற்றுதல் என்பது எங்களால் ஏற்க முடியாது. முஸ்லிம் மற்றும் பாஸ்டுன் சகோதரர்களுக்கு நான் விடும் வேண்டுகோள் என்னவென்றால், எங்களுக்காக குரலெழுப்பி, நீதி கிடைக்க எங்களுக்கு உதவுங்கள். எங்களுக்கு நீங்கள் துணை நிற்கவில்லை என்றால், நாங்கள் இனி இந்த பகுதியில் வசிக்கப் போவதில்லை” என்றார்.

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சீக்கியர்கள், ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினர் தொடர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இச்சமூகத்தினரின் சிறுமிகள் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்டு, கடத்தியவர்களுக்கே திருமணம் செய்து வைக்கும் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக, இக்கும்பலிடம் இருந்து தங்களது மகள்கள் மற்றும் குடும்பத்தினரை பாதுகாக்க, பாகிஸ்தானில் இருந்து பல குடும்பங்கள் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.


Share it if you like it