பாகிஸ்தானில் 12 தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் 12 தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Share it if you like it

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தெஹ்ரீக்-இ-தாலிபான் (டி.டி.பி.) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 12 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொலை செய்தனர்.

பாகிஸ்தானில் சன்னி முஸ்லீம்களே பெரும்பான்யினராக இருக்கின்றனர். இவர்களுக்கும் பாகிஸ்தான் பழங்குடியைச் சேர்ந்த ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஷியா முஸ்லீம்களுக்கும் ஏழாம் பொறுத்தமாக இருந்து வருகிறது. ஆகவே, ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபான்கள் பாகிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தானில் இருக்கும் சன்னி முஸ்லீம்களின் மசூதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர். அந்த வகையில், 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தினர். அதேபோல, ராணுவத் தளங்கள் மீதும், இஸ்லாமாபாத்தில் உள்ள மேரியட் ஹோட்டலிலும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி மதிய தொழுகை நேரத்தின்போது தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான். இதில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 97 போலீஸ்காரர்களும், மசூதியின் இமாம் உட்பட 4பேரும் என மொத்தம் 101 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலை நடத்திய ஒரு தாலிபான் பயங்கரவாதியாகும். இதையடுத்து, சட்டவிரோத குழுக்களுக்கு எதிரான தாக்குதலை பாகிஸ்தான் அரசு முடுக்கிவிட்டது. இதன் ஒரு பகுதியாக தெற்கு வஜிரிஸ்தானின் எல்லையான கைபர் பக்துன்வா மாகாணத்தின் லக்கி மார்வாட் மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையின்போதுதான், 12 தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து பயங்கரவாத எதிர்ப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பயங்கரவாதிகளின் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். பதிலுக்கு அவர்களும் திருப்பிச் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஆப்கானிஸ்தான் கரன்சிகள் கைப்பற்றப்பட்டன” என்று தெரிவித்தனர். டி.டி.பி. போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய முடிவிற்கு மத்தியில், முந்தைய உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணம்தான் பெரும்பாலும் பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it