பாகிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் அரசு @GovtofPakistan என்கிற பெயரில் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கை வைத்திருக்கிறது. இந்த ட்விட்டர் கணக்கு மூலம் இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டுவது, வதந்திகளை பரப்புவது, பொய் செய்திகளை வெளியிடுவது, நாட்டுக்கு எதிராக மக்களை திசைதிருப்பி விடுவது என முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து, இந்தியாவில் பாகிஸ்தான் ட்விட்டர் கணக்கை முடக்கும்படி இந்திய அரசு சட்டபூர்வமான கோரிக்கையை ட்விட்டர் நிர்வாகத்திடம் வைத்தது.
இதை ஏற்றுக்கொண்ட ட்விட்டர் நிர்வாகம் பாகிஸ்தான் ட்விட்டர் கணக்கை இந்தியாவில் தடை செய்திருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டுக்கு ட்விட்டர் நிர்வாகம் அனுப்பி இருக்கும் நோட்டீஸில், எங்கள் நிறுவனத்தின் கோட்பாடுகளின்படி, தகுதியான சட்டப்பூர்வ கோரிக்கைகளை ஏற்று எந்தவொரு கணக்கின் மீதும் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனை பயன்படுத்தியே பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கை இந்தியாவில் தடை செய்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறது.
ஆகவே, இந்திய பொதுமக்கள் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கைப் பார்க்கவும், கருத்துகளை பதிவு செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு செய்வது கடந்த 6 மாதங்களில் இது 2-வது முறையாகும். எனினும், ட்விட்டர் நிறுவனத்தின் தரப்பிலோ, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பிலோ, ட்விட்டர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பற்றி உறுதியான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.