பாகிஸ்தானில் 1,000 பேர் பலி!

பாகிஸ்தானில் 1,000 பேர் பலி!

Share it if you like it

பாகிஸ்தானில் பெய்து வரும் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி, 1.000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகிலுள்ள பல்வேறு நாடுகள், நிகழாண்டு கடுமையான இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் கடும் வறட்சியையும், வெப்பத்தையும் சந்தித்து வரும் நிலையில், ஆசிய நாடுகள் பலவும் கடுமையான மழை வெள்ள பாதிப்பை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அஸ்ஸாம் உள்ளிட்ட வடமாநிலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானோ வரலாறு காணாத வெள்ள பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் அந்தளவுக்கு உயிர்ச்சேதம் இல்லாத நிலையில், பாகிஸ்தானிலோ இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டில் மொத்தமுள்ள 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த ஜூலை மாதம் இறுதியில் தொடங்கிய பருவமழை, இதுவரை விடவில்லை. மேலும், எந்தாண்டும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு வரலாறு காணாத அளவில் கடும் சீற்றத்துடன் மழை பெய்து வருகிறது. இதனால், பலுசிஸ்தான், கைபர் பக்துன்கா, சிந்து ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக, கராச்சி மிக மோசமான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. இந்த பருவமழை பாதிப்பில் சிக்கி இதுவரை 1,033 பேர் உயிரிழந்திருப்பதாக, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 119 பேரி பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 347 பேரும், பலுசிஸ்தானில் 238 பேரும், கைபர் மாகாணத்தில் 226 பேரும் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 8.09 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள், 3,451 கி.மீ. சாலைகள், 149 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்திருக்கின்றன. தவிர, 9.49 லட்சம் வீடுகள் சேதமடைந்திருப்பதோடு, சுமார் 7 லட்சம் கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் பதிவாகி இருக்கின்றன. இதன் காரணமாக, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஷ் ஷெரிப், தனது பிரிட்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டு, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். மேலும், பாகிஸ்தானுக்கு உதவுமாறு சர்வதேச நாடுகள், அமைப்புகளுக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.


Share it if you like it