பாக்.கில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பலாத்காரம்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

பாக்.கில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பலாத்காரம்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

Share it if you like it

பாகிஸ்தான் நாட்டில் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்நாட்டில் ஆணவக் கொலைகளும் அதிகரித்து காணப்படுகிறது.

பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் ‘சமா டி.வி.’ என்கிற தனியார் தொலைக்காட்சி நிறுவனம், பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைக்கான அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஒரு புலனாய்வு விசாரணையை நடத்தியது. இந்த ஆய்வில்தான், பாகிஸ்தான் நாட்டில் 2017 முதல் 2021-ம் ஆண்டு காலகட்டம் வரை 21,900 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. 2017-ம் ஆண்டில் 3,327 வழக்குகள், 2018-ல் 4,456 வழக்குகள், 2019-ல் 4,573 வழக்குகள், 2020-ல் 4,478 வழக்குகள், 2021-ல் 5,169 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதன்படி, 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் என நாளொன்றுக்கு சராசரியாக 12 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

அதேபோல, நடப்பாண்டில் மே மாதம் 57 வழக்குகள், ஜூன் மாதம் 91, ஜூலையில் 86, ஆகஸ்ட் மாதம் 71 வழக்குகள் என மொத்தம் 305 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்த மொத்த வழக்குகளில் 2,856 வழக்குகளில் மட்டுமே போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளிலும் 4 சதவிகித வழக்குகள் மட்டுமே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. அதேசமயம், மேற்கண்ட குற்றங்கள் நிரூபணமாகி தண்டனை பெற்றவர்கள் வெறும் 0.2 சதவிகிதம் மட்டுமே. காரணம், புகார் அளித்தால் தங்கள் மீது பழிவாங்கும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் என்கிற பயம் பலருக்கும் உள்ளதாலும், குற்றச்சம்பவங்களை அதிகாரிகளிடம் புகார் செய்வதிலிருந்து பெண்கள் தடுக்கப்படுகின்றனர்.

2020 ஐ.நா. அறிக்கையின்படி, நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கை நடைமுறையில் உள்ள 75 நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல், பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 1,957 ஆணவக் கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. மேலும், பாலின பாகுபாட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் 2-வது மோசமான நாடு என்று உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பாலின பாகுபாடு நீடிக்கும் 146 நாடுகள் பட்டியலில் 145-வது இடத்துக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டிருக்கிறது. முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it