பாக். மாஜி பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை!

பாக். மாஜி பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை!

Share it if you like it

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனக்கு வழங்கப்பட்ட அரசு பரிசுப் பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், ஓய்வு பெற்ற பிறகு 1996-ம் ஆண்டு தெஹ்ரீக் இ இன்சாப் என்கிற கட்சியை தொடங்கினார். இக்கட்சி 2018-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, தலைவர் இம்ரான் கான் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். எனினும், இவரது ஆட்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இம்ரான் கானுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் திடீரென போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து நடந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்தது. இதனால், இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான் கான் பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில்தான், இம்ரான் கான் தவறான பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு பரிசுப் பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான் கானின் வழக்கறிஞர் அலி ஜாபர், 2018 – 19-ம் ஆண்டு பரிசுப் பொருட்களை விற்றதாக ஒப்புக்கொண்டார். பொதுவாகவே, அரசு அதிகாரிகளால் பெறப்பட்ட பரிசுகள், தோஷகானாவில் உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும், அவற்றின் மதிப்பையும் மதிப்பிட வேண்டும். இதன் பிறகு, குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்துவிட்டு, விரும்பினால் பரிசுப் பொருட்களை எடுத்து செல்ல முடியும்.

ஆனால், இம்ரான் கான் பதவி விலகிய பிறகும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அரசு கருவூலத்தில் இருந்து தோஷ்கானாவிற்கு பணம் செலுத்தாமல் சில பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றிருக்கிறார். இவற்றின் விவரங்களையும் வெளியிட மறுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, தனக்கு வழங்கப்பட்ட அரசு பரிசுப் பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இதன் அடிப்படையில்தான், இம்ரான் கானை பொதுப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி, இம்ரான் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.


Share it if you like it