சொத்தே சேர்க்காதவர்… மோடியை புகழ்ந்த இம்ரான்கான்!

சொத்தே சேர்க்காதவர்… மோடியை புகழ்ந்த இம்ரான்கான்!

Share it if you like it

பாரத பிரதமர் மோடி சொத்தே சேர்க்காதவர் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 1996-ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் என்ற கட்சியைத் தொடங்கினார். 2002 நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி.யாக வெற்றிபெற்று அரசியலில் அடியொடுத்து வைத்தார். 2018 தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களை பெற்று, சுயேட்சைகள் ஆதரவுடன் பிரதமரானார். ஆனால், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி காரணமாக, இவரது அரசுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வியடைந்து பிரதமர் பதவியை இழந்தார்.

இதையடுத்து, புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றிருக்கிறார். இவர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பாகிஸ்தான் நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நிலவி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதனால், இலங்கைக்கு ஏற்பட்ட நிலை பாகிஸ்தானுக்கும் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இந்த சூழலில், பாகிஸ்தானில் சமீபத்தில் பருவமழை கொட்டித் தீர்த்தது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. இது நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசை, இம்ரான் கான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நடந்த அவரது கட்சியின் பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கையை பாராட்டிப் பேசினார். மேலும், வெளியுறவுக் கொள்கை தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதையும் போட்டுக் காட்டினார். இந்த சூழலில், தற்போது இம்ரான் கான் புதிதாக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பேசும் இம்ரான் கான், “பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்கும் ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரர் நவாஸ் ஷெரீப்பிற்கு வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் இருக்கின்றன. இந்த சொத்துகளின் மதிப்பு பல மில்லியன். உலகில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இந்தளவுக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் இல்லை. நமது அண்டை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடுகளில் சொத்துக்களே இல்லை” என்று பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.


Share it if you like it