பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம்: இந்த நாடுதான் பட்டினி குறியீடில் இந்தியாவுக்கு கீழாம்!

பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம்: இந்த நாடுதான் பட்டினி குறியீடில் இந்தியாவுக்கு கீழாம்!

Share it if you like it

உலக பட்டினி குறியீடில் இந்தியா 107-வது இடத்திலும், பாகிஸ்தான் 99-வது இடத்திலும் இருப்பதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மாவு வாங்கப் போன 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவமும் பாகிஸ்தானில் அரங்கேறி இருக்கிறது.

சமீப காலமாகவே, பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வெங்காயத்தின் விலை 415 சதவீதமும், தேயிலை விலை 64 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, பாகிஸ்தானின் அத்தியாவசிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால், கோதுமை மாவின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. கராச்சியில் கோதுமை மாவு கிலோ 140 முதல் 160வரை விற்கப்படுகிறது. இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மாவு மூட்டை 1,500 ரூபாய்க்கும், 20 கிலோ மூட்டை 2,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பஞ்சாப் மாகாணத்தில் மில் உரிமையாளர்களால் மாவு விலை கிலோ 160 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கைபர் பக்துன்க்வாவில் விலையை அரசு கட்டுப்படுத்தத் தவறியதால் 20 கிலோ மாவு மூட்டை 3,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நெருக்கடி காரணமாக கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் கோதுமை மாவு வாங்க பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவு பொட்டலங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. இதனை வாங்க மக்கள் முண்டியடித்துக் கொள்கிறார்கள். அந்த வகையில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் உலக பட்டினி குறியீடு குறித்த பட்டியல் வெளியானது. இப்பட்டியலில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பதாகவும், பாகிஸ்தான் 99-வது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைவிட வேடிக்கை என்னவென்றால், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வங்கதேசம் 84-வது இடத்தில் இருப்பதாகவும், சமீபத்தில் திவாலான இலங்கை பட்டினி குறியீடு பட்டியலில் 64 -வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததுதான். இந்த பட்டினி குறியீடு வெளியானபோதே பெரும் சர்ச்சை கிளம்பியது. மேற்கண்ட பட்டியல் சர்வதேச சக்திகளின் அழுத்தத்தால் இந்தியாவின் வளர்ச்சியையும், மாண்பையும் குறைக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதை மெய்ப்பிக்கும் வகையில், சமீபத்தில் இலங்கை நாடு திவாலானது. தற்போது பாகிஸ்தான் உணவு பஞ்சத்தால் திண்டாடி வருகிறது.


Share it if you like it