தி.மு.க. எய்ம்ஸ் விவகாரத்தை கிளப்புவது ஏன் தெரியுமா? மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ‘நச்’ பதில்!

தி.மு.க. எய்ம்ஸ் விவகாரத்தை கிளப்புவது ஏன் தெரியுமா? மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ‘நச்’ பதில்!

Share it if you like it

நாடாளுமன்றத்தில் எய்ம்ஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு, தரமான பதிலடி கொடுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தி.மு.க.வினர் எய்ம்ஸ் விவகாரத்தை கிளப்புவதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது கேள்வி நேரம் தொடங்கி இருக்கிறது. இந்த கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில், நேற்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பணி தாமதம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு, தி.மு.க. அரசுதான் காரணம் என்பதை விளக்கமாக எடுத்துக் கூறி, தரமான பதிலடி கொடுத்திருந்தார் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

இந்த நிலையில், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவரும், அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு, நேற்றைய கேள்வி நேரத்தின்போது, மதுரை எய்ம்ஸ் தொடர்பாக கேள்வி எழுப்ப முற்பட்டார். ஆனால், இந்த விவகாரம் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டு விட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம்பிரகாஷ் பிர்லா கூறினார். எனினும், பொதுவாக 2 கேள்விகளை கேட்கிறேன் என்று கூறிய பாலு, “இந்தியாவில் உள்கட்டமைப்பு இல்லாமல் எத்தனை மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது? எத்தனை மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, அவை இன்னும் செயல்படாமல் இருக்கின்றன?” என்று கேட்டார். அப்போது தயாநிதி மாறன், “மதுரை எய்ம்ஸ் பற்றிய கேள்வி இது” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, சபாநாயகர் ஓம்பிர்லா மீண்டும், “இது விவாதிக்கப்பட்ட விஷயம்” என்று தெரிவித்தார். எனினும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிலளிக்க முன்வந்தார். அப்போது, “எந்த விஷயத்திலும் அரசியல் நடக்கலாம். இங்கு பிரதானமாக மதுரை எய்ம்ஸ் பற்றியதாகவே இவர்களது கேள்விகள் இருக்கின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி செயல்படத் தொடங்கி விட்டது. உள்கட்டமைப்பு மட்டுமே நிறுவப்படவில்லை. ஆனால், எந்த காரணமும் இல்லாமல் அரசியல் பிரச்னையை தி.மு.க.வினர் உருவாக்கி வருகிறார்கள் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசு உரிய நேரத்தில் நிலம் வழங்காததால் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த முடியவில்லை.

மதுரை எய்ம்ஸ், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (ஜைகா) நிதியுதவி அளித்த திட்டம். ஆனால், அந்நிறுவனத்தினர் 2 ஆண்டுகளாக மதுரைக்கு வர முடியாத நிலை இருந்தது. இதன் காரணமாக திட்டம் தாமதமானதோடு, செலவும் அதிகரித்தது. மதுரை எய்ம்ஸ் உள்கட்டமைப்புக்காக 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் மாநில அரசுக்கு தெரிவித்து விட்டோம். ஆனாலும், தி.மு.க.வினர் அரசியல் செய்ய நினைத்தால், அதற்கு தீர்வு இல்லை” என்றார். எனினும், அமைச்சர் சரியான தகவலை தரவில்லை என்று தி.மு.க. எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.

இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “தி.மு.க.வினர் ஏன் இப்படி செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தமிழ்நாட்டில் உள்ள சில மருத்துவக் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆகவே, அக்கல்லூரிகளுக்கு எதிராக நான் கடுமையான நடவடிக்கை எடுத்தேன். இதன் எதிர்வினையாகவே இங்கு தி.மு.க.வினர் அரசியல் செய்கிறார்கள். ஆனாலும், இதுபோன்ற சட்ட விரோத செயல்களை மோடி அரசு அனுமதிக்காது. தவறிழைக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கை தொடரும்” என்று ஆவேசமாகக் கூறினார். இதற்கு தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “மோடி சொன்னதை செய்பவர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பணிகள் நடந்து வருகின்றன. கட்டமைப்பு இல்லை என்பதற்காக அங்கு கல்லூரியே செயல்படவில்லை என்று கூறக்கூடாது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி இயங்க ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். மதுரையில் உள்கட்டமைப்பு வசதிகள் நிறுவுவது மட்டுமே தாமதமாகியுள்ளது. நல்லவிதமாக மருத்துவ கல்லூரியை கட்டி முடிப்போம்” என்று கூறினார்.


Share it if you like it