நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளில் மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பதில் அளித்தார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடியின சமூகத்தின் பெருமையை உயர்த்தியுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக இருப்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கமளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகளுக்குப் பின் பழங்குடி மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் பெருமையும் தன்னம்பிக்கையும் கிடைத்துள்ளது. இதற்காக நாடு அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். மக்களவையில் சுமார் 87 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி பாஜக தலைமையிலான மத்திய அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் எதிர்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார். தன் அரசுக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் மறைமுகமாக தக்க பதிலடி கொடுத்தார்.
நாட்டில் உள்ள 140 கோடி மக்கள் அவர் மீதும், அவரது அரசு மீதும் வைத்துள்ள நம்பிக்கையானது மற்றவர்களின் துஷ்பிரயோகமோ அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளோ துளைக்க முடியாத ஒரு பாதுகாப்புக் கவசமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் கூறினார். ஆணவத்தால் பீடிக்கப்பட்டவர்கள், மோடியை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலமும் தங்களின் விரக்தியிலிருந்து மீள்வதாக நினைக்கிறார்கள். மோடியின் மீதான நாட்டின் நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளாலோ அல்லது தொலைக்காட்சியில் ஒளிரும் முகங்களாலோ உருவாக்கப்படவில்லை. தேசம் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எதிர்க்கட்சிகளால் புரிந்து கொள்ள முடியாது என எதிர்க்கட்சிகளை பிரதமர் விமர்சித்தார்.
தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மக்களுக்காகவே செலவிட்டதாக கூறிய பிரதமர் மோடி இது அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடிய அரசாங்கம் என்று தெரிவித்தார். கொரோனா மற்றும் போர் அச்சத்திற்கு இடையே நாட்டை சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். வேலையிழப்பு, பொருளாதார பாதிப்பால் உலக நாடுகள் தள்ளாடும் நிலையில், அந்த பிரச்னையை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உள்ளது. செல்போன் உற்பத்தி, எரிசக்தி துறை என ஒவ்வொரு துறையிலும் இந்தியா வரலாறு படைத்து வருகிறது. மேலும் விண்வெளி, தொழில் நுட்பம், உற்பத்தி என அனைத்து துறைகளிலும் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிப்பதாக பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் இந்தியா மாறியுள்ளது. ஆனால் நாட்டின் வளர்ச்சியை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி அம்பலப்படுத்தினார். காங்கிரஸ் தலைவரின் பெயரைக் குறிப்பிடாமல், “சிலர் தனக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் வாழ்கிறார்கள், ஆனால் இந்த மோடி நாட்டின் 25 கோடி குடும்பங்களுக்காக வாழ்கிறார்” என்று அறிவித்தார். பிரதமர் மோடி பேசிய போது எதிர்க்கட்சியினர் ‘’அதானி, அதானி ‘’ மற்றும் ‘‘ஜேபிசி, ஜேபிசி’’ என்றும் முழங்கினர். ஆனால் இதை கண்டுக்கொள்ளாத பிரதமர் மோடி அவர்களுக்கு நேரடியாக பதிலளிக்காமல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களை குறிப்பிட்டு பேசினார்.
2ஜி ஊழல், இந்தியா – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடந்த ஊழல், நிலக்கரி ஊழல், எரிச்சக்தி தடை என காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்ட பிரதமர் மோடி, 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகள் நாடு பெரும் இழப்பை சந்தித்த தசாப்தம் என குறிப்பிட்டார். ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றுவதில் தான் காங்கிரஸ் சாதனை புரிந்ததாக விமர்சித்தார்.
அதேசமயம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்திற்கு மாறாக, 2020-2030ம் ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிகான நேர்மறையான தசாப்தம் என்றும் அவர் கூறினார்.
‘‘யாராவது அரசுக்கு எதிராக சில பகுப்பாய்வுகளை முன்வைத்து விமர்சிக்க வேண்டும் என்று நான் ஆவலுடன் காத்திருந்தேன். அதனால் நாடு நன்மை அடையும் என எதிர்பார்த்தேன். ஆனால், கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்கு பதிலாக, குற்றச்சாட்டுகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மட்டுமே வீசப்பட்டன’’. “தேர்தலில் தோல்வியடையும் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறுங்கள், தேர்தல் ஆணையத்தைக் குறை கூறுங்கள். உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கவில்லை என்றால், உச்சநீதிமன்றத்தை விமர்சியுங்கள். ஊழல் விசாரணை நடத்தப்பட்டால், புலனாய்வு அமைப்புகளை தவறாக பேசுங்கள். இந்திய ராணுவம் தன் வீரத்தை காட்டினால், அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துங்கள். பொருளாதார முன்னேற்றம் பற்றி பேசும் போது, ரிசர்வ் வங்கியை விமர்சியுங்கள். இவ்வாறு கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஆக்கபூர்வமான விமர்சனம் நிர்பந்தமான விமர்சனமான மாறியுள்ளது.” என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரை சாடினார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தன் நடைப்பயணத்தின் முடிவில் ஜம்மு காஷ்மீரின் லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றியதை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி ‘‘இன்று நீங்கள் அங்கு அமைதியாக செல்லலாம். ஏனென்றால் இன்று ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக திருவிழா கொண்டாடப்படுகிறது’’ என தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாத அச்சுறுத்தல்களை மீறி லால் சவுக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றியதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி “இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. மூவர்ணக் கொடியால் ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் கெடுக்கும் அபாயம் இருப்பதாக ஒரு காலத்தில் கூறிய சிலர் மூவர்ண கொடியுடன் யாத்திரையில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடி உரை நிகழ்த்தியதற்கு முந்தைய தினம் மக்களவையில் பேசிய ராகுல் காந்தி ஹார்வர்டு போன்ற வணிகப் பள்ளிகள் “தனிப்பட்ட தொழில்களை உருவாக்க அரசாங்கத்தின் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது” என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று அதானி விவகாரத்தை குறிப்பிட்டு மத்திய அரசை விமர்சித்திருந்தார். இதற்கு தன் உரையில் பதிலளித்த பிரதமர் மோடி சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைகழகம் ‘இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி’ என்ற தலைப்பில் நடத்திய ஆய்வை குறிப்பிட்டு இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் நிலையை எதிர்க்கட்சிகளுக்கு சுட்டிக்காட்டினார்.
மக்களை கவர்ந்த மோடியின் ஆடை
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் பெற்றது. அதேசமயம் அவர் அணிந்திருந்த நீலநிற அங்கியும் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதற்கு காரணம் அந்த அங்கி சாதாரண நூலால் தைக்கப்பட்டது அல்ல. பிளாஸ்டிக் பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்து அதன் மூலம் தயாரிக்கப்ப்பட்ட நூலால் செய்யப்பட்ட பிரத்யேக துணியால் உருவாக்கப்பட்ட அங்கி இது. பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு 2 தினங்களுக்கு முன் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த அங்கியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தது.
ஒரு முறை பயன்படுத்திய பின்னர் தூக்கியெறியும் ’பெட்’ பாட்டில்களை மறுசுழற்சிக்கு உட்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற ஆடைகள் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரெங்கா பாலிமர் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது போல மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற பசுமை ஆடைகளை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி இந்த நீலநிற அங்கியை நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்தார். இவ்வாறு பிரதமர் மோடியின் ஒவ்வொரு செயலிலும் சமூகத்தின் மீதான அக்கறை வெளிப்படுகிறது. நாட்டு மக்கள் மீதும் தேசத்தின் வளர்ச்சி மீதும் அவர் கொண்ட அக்கறையே அவருக்கு மக்கள் மத்தியில் மதிப்பை பெற்று தந்துள்ளது. இதை எதிர்க்கட்சிகள் வெறும் குற்றச்சாட்டுகள் மூலம் அழிக்க நினைப்பது வீண் முயற்சி.