புரட்சிக் கவி என்னும் காப்பியத்தைப் பாரதிதாசன் 1937 ஆம் ஆண்டு வெளியிட்டார். வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் காவியக் கருத்தில் தமிழ் உணர்வு கொடுத்துப் ‘புரட்சிக் கவி’ என்னும் காப்பியமாகப் பாரதிதாசன் படைத்துள்ளார். வடமொழியில் கதைநாயகனான கவிஞன் அஞ்சும் தன்மை உடையவனாக இருக்கிறான், இறுதியில் இறந்துவிடுகிறான். எனினும், தமிழில் அவன் நெஞ்சுரமிக்க இளைஞன், தன் காதலியின் உதவியாலும், தன் நிகரற்ற பேச்சாற்றலாலும் மக்களைக் கவர்ந்து, மன்னனை எதிர்த்துப் புரட்சிக்கு வித்திட்டுத் தானும் காதலில் வென்று, தன் மக்களுக்கும் குடியாட்சி பெற்றுத்தருகிறான் என்பது இதன் தனிச்சிறப்பு.
மன்னன் ஒருவன் தனது மகள் அமுதவல்லி என்பவளுக்குத் தமிழ்க் கவிதை புனையும் ஆற்றலைக் கற்பிக்க விரும்பினான். அமுதவல்லிக்குத் தமிழ்க் கவிதை கற்பிக்கச் சிறந்தவன், உதாரன் என்பவன் ஆவான் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அவன் இளைஞன்; நல்ல அழகன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். இளமை வாய்ந்த அமுதவல்லியும் இளைஞனான உதாரனும் நேரில் சந்திக்கக் கூடாது என்று மன்னன் கருதினான். எனவே, அமுதவல்லி தொழு நோயாளி என்று உதாரனிடம் தெரிவித்தான். உதாரன், குருடன் என்று அமுதவல்லியிடம் தெரிவித்தான். குருடனை நேரில் பார்ப்பது அபசகுனம்.
எனவே இருவருக்கும் இடையில் ஒரு திரையைக் கட்டித் தொங்க விடுங்கள் என்று தெரிவித்தான். அதன்படி அமுதவல்லிக்கும் உதாரனுக்கும் இடையில் ஒரு திரை கட்டித் தொங்க விடப்பட்டது. திரைக்கு இந்தப்பக்கம் இருந்து உதாரன் கவி புனையும் திறனைக் கற்பித்தான். திரைக்கு அந்தப் பக்கம் இருந்து அமுதவல்லி கற்றாள். ஒரு நாள் பாடம் கற்பிப்பதற்கு உதாரன் வந்தான். அங்கே இருந்த சோலையின் அருகில் நின்றான். வானத்தில் நிலவு வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட உதாரனின் கவிதை உள்ளம் கவிதை பாடத் தொடங்கியது.
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான்
சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல் மாறிக் குளிர் அடைந்த ஒளிப்பிழம்போ
(பாரதிதாசன் கவிதைகள், புரட்சிக்கவி ப,20) என்று நிலவின் அழகை வருணித்துப் பாடினான். இந்த இடத்தில் பாரதிதாசன் பாட்டாளி மக்கள் பசிக்கு பானையாற வெண்சோறு கண்டால் பெறுகின்ற இன்பத்தை அந்த வெண்ணிலவைக் கண்ட இன்பத்தேடு ஒப்பிட்டுப் பாடுகிறார்.
நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்தமக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!
உதாரன் பாடிய பாடல் முழுவதையும் கேட்டுக் கொண்டிருந்தாள் அமுதவல்லி. உதாரன் கண் இல்லாதவனாக இருக்க முடியாது என்பதை அவள் புரிந்து கொண்டாள். எதன் மூலம் அவள் இந்த முடிவுக்கு வந்தாள். நிலவைப் பார்க்கும் புதிய கோணமும், பார்வையும் கற்பனையே என்றாலும் கண் பார்வை இல்லாத ஒருவனால் இப்படிப் பாட இயலுமா? என்று கருதிய அமுதவல்லி திரைக்கு வெளியே வந்தாள். இளைஞனான உதாரனை இருவிழிகளுடன் கண்டாள். உதாரனுக்கு எதிரில் வந்து நின்ற அமுதவல்லியை உதாரனும் கண்டான்.
என்ன வியப்பிது? வானிலே – இருந்
திட்டதொர் மாமதி மங்கையாய்
என் எதிரே வந்து வாய்த்ததோ? – புவிக்கு
ஏது இதுபோல் ஒரு தண்ஒளி!
மின்னல் குலத்தில் விளைந்ததோ? – வான்
வில்லின் குலத்தில் பிறந்ததோ?
கன்னல் தமிழ்க் கவிவாணரின் உளக்
கற்பனையே உருப்பெற்றதோ!
பொன்னின் உருக்கில் பொலிந்ததோ? – ஒரு
பூங்கொடியோ? மலர்க்கூட்டமோ?
என்று நினைத்த உதாரன்தான் நீ
யார்?
(பா.க, புரட்சிக்கவி, ப. 22) என்று கேட்டான். அவள் நான் அமுதவல்லி என்று பதில் சொன்னாள். உதாரன் பார்வை அற்றவன் இல்லை என்பதை அமுதவல்லி உணர்ந்தாள். அமுதவல்லி தொழு நோயாளி இல்லை என்பதை உதாரனும் அறிந்தான். ஏமாற்றப்பட்டதை இருவரும் உணர்ந்தார்கள். அமுதவல்லியும் உதாரனும் நேருக்கு நேர் பார்த்த நாள் முதல் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டார்கள். இந்தச் செய்தியை மன்னனிடம் தோழியர் தெரிவித்தார்கள். மன்னன் கோபம் கொண்டான்; வாளில் நஞ்சு தடவி வைக்கச் சொன்னான்; உதாரனை அவைக்கு அழைத்து வரச் சொன்னான்; அவைக்கு வந்த உதாரனிடம்,
ஆள் பிடித்தால் பிடி ஒன்று இருப்பாய்
என்ன ஆணவமோ உனக்கு?
மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை,
வெல்லத் தகுந்தவனோ? – இல்லை
(பா.க. புரட்சிக்கவி. ப.27) என்று மன்னன் கூறினான். இப்பாடலில் உதாரனின் உருவத்தைப் பார்த்து அவனை எடைபோடும் மன்னனின் அறியாமையைப் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.
மாமயில் கண்டு மகிழ்ந்து ஆடும் முகில்
வார்க்கும் மழைநாடா – குற்றம்
ஆம் என்று உரைத்தால் குற்றமே! குற்றம்
அன்று எனில் அவ்விதமே!
(பா.க. புரட்சிக்கவி. ப.27) என்று பதில் கூறினான் உதாரன். அதைக் கேட்ட மன்னன் உடனே, கொலையாளர்களை அழைத்தான். ‘உதாரனின் தலையை வெட்டுங்கள்’ என்று ஆணையிட்டான் அப்போது அமுதவல்லி அங்கே விரைந்து வந்தாள்.
ஒருவனும் ஒருத்தியுமாய் – மனம்
உவந்திடில் பிழை என உரைப்பது உண்டோ?
அரசு என ஒரு சாதி – அதற்கு
அயல் என வேறு ஒரு சாதி உண்டோ?
(பா.க. புரட்சிக்கவி. ப.27) என்று மன்னனைப் பார்த்துக் கேட்டாள். அமுதவல்லிக்கு மன்னன் பதில் சொல்ல விரும்பவில்லை. அருகில் நின்ற காவலர்களை அழைத்து அமுதவல்லியைச் சிறையில் அடையுங்கள் என்றான். உதாரனைக் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்ல மன்னன் ஆணையிட்டான். அப்போது அமைச்சர்களில் ஒருவன் எழுந்து ‘அமுதவல்லியைத் தண்டிக்க வேண்டாம் மன்னா’ என்றான். அதைக் கேட்ட அமுதவல்லி,
சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும்
தவிர்வது எனில் இருவருமே தவிர்தல் வேண்டும்!
ஓதுக இவ்விரண்டில் ஒன்று மன்னவன்வாய்
உயிர் எமக்கு வெல்லம் அல்ல! என்றாள்
(பா.க. புரட்சிக்கவி ப. 30) மன்னன் உடனே காவலர்களைப் பார்த்து, அமுதவல்லி, உதாரன் இருவரையும் கொலைக்களத்திற்கு இழுத்துச் சென்று வெட்டுங்கள் என்றான். உதாரன், அமுதவல்லி இருவரும் இழுத்துச் செல்லப்பட்டார்கள். அலைகடல்போல் மக்கள் கொலைக் களத்தில் கூடினார்கள். கொலையாளர்கள், உதாரனையும் அமுதவல்லியையும் பார்த்து, ‘இறுதியாக ஏதேனும் பேச வேண்டும் என்றால் பேசுங்கள்’ என்றனர்.
அப்போது பொதுமக்களைப் பார்த்து உதாரன் முழங்கினான். “பாழ் நிலமாகக் கிடந்த இந்தப் பூமியை மக்கள் வாழ்நிலமாக மாற்றியவர்கள் யார்? சிற்றூர்களையும் வயல்களையும் வாய்க்கால்களையும் உருவாக்கியவர்கள் யார்? கல்லைப் பிளந்து மலையைப் பிளந்து சுரங்கங்கள் வெட்டி வேண்டிய கருவிகளைச் செய்து தந்தது யாருடைய கைகள்? பொன்னையும், முத்தையும், மணியையும் எடுப்பதற்கு அடக்கிய மூச்சு எவரின் மூச்சு? நீர் என்றும் நெருப்பு என்றும் பார்க்காமல் சேறு என்றும் சினப்பாம்பு என்றும் பார்க்காமல் உழைத்தவர்கள் யார்? பசியையும் நோயையும் பொருட்படுத்தாமல் உழைத்து உழைத்து நல்ல வருவாய் தரும் நாடாக இந்த நாட்டை மாற்றியவர்கள் யார்? அவர்கள் எல்லோரும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாது.
ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன்
புலி வேஷம் போடுகின்றான்! பொது மக்கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?
(பா.க. புரட்சிக்கவி ப.33) என்னும் வரிகளில் மன்னனின் சர்வாதிகாரப் போக்கை உதாரன் கூறுவது போல் பாரதிதாசன் அழகாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டு என்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்
(பா.க. புரட்சிக்கவி ப.33) என்று நாடு என்பது மக்களை மையமாகக் கொண்டது. அந்த நாடு ஒரு மன்னனுக்காக மட்டும் என்ற நிலை வந்தால் நாடு என்ற அமைப்பே தேவை இல்லை என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
உதாரன் தொடர்ந்து உரையாற்றுகின்றான் :
தமிழறிந்ததால் வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவி என்று எனை அவளும் காதலித்தாள்!
அமுது என்று சொல்லும் இந்தத் தமிழ் என் ஆவி
அழிவதற்குக் காரணமாய் இருந்தது என்று
சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என்
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ?
உமை ஒன்று வேண்டுகின்றேன். மாசில்லாத
உயர் தமிழை உயிர் என்று போற்றுமின்கள்!
(பா.க. புரட்சிக்கவி ப.33) என்னும் வரிகளில் உதாரன் தனது இறுதி மூச்சில் கூடத் தமிழ் மொழிக்குப் பழி வந்துவிடக் கூடாது என்று கருதியதைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். உதாரனின் உரையைக் கேட்டதும் பொது மக்கள் பொங்கி எழுந்தார்கள். கொலையாளர்கள் அஞ்சி ஓடினார்கள். மன்னனும் மக்கள் புரட்சிக்கு அஞ்சி ஓடி விட்டான். மக்களாட்சி மலர்ந்தது. உதாரனின் இந்தப் பேச்சு ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்தில் வருகின்ற மார்க் ஆண்டனியின் பேச்சை ஒத்திருப்பதைக் காணலாம்.
கட்டுரையாசிரியர் – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்