தமிழக வரலாற்றில் முதல் முறையாக… அரசியல் அழுத்தத்தால் வி.ஏ.ஓ. ராஜினாமா… திராவிட மாடல்!

தமிழக வரலாற்றில் முதல் முறையாக… அரசியல் அழுத்தத்தால் வி.ஏ.ஓ. ராஜினாமா… திராவிட மாடல்!

Share it if you like it

அரசியல் அழுத்தம் காரணமாக என்னால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை என்று உருக்கமாக பதிவிட்டு, வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் அருப்புக்கோட்டை வி.ஏ.ஓ. பிரிதிவிராஜ் சாஸ்தா. இது அரசியல் வட்டாரதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க. ஆட்சியில் வருவாய்த் துறையில் பணிபுரிவது என்பது கத்தியின் மேல் நடப்பதுபோலவே இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தூத்துக்குடி மாவட்டத்தில் வி.ஏ.ஓ. ஒருவர் மணல் மாஃபியாக்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சேலத்தில் நேற்று மணல் மாஃபியாக்களின் கொலை முயற்சியிலிருந்து வி.ஏ.ஓ. ஒருவர் தப்பி வந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இந்த சூழலில், அருப்புக்கோட்டை வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வரும் பிரிதிவிராஜ் சாஸ்தா என்பவர், அரசியல் அழுத்தம் காரணமாக தனது வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து பிரிதிவிராஜ் சாஸ்தா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில், “அனைவருக்கும் வணக்கம். நான் துரை பிரிதிவிராஜ் சாஸ்தா. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரு கிராம நிர்வாக அலுவலராக வாழ்ந்து வந்தேன். உசுரக் கொடுத்தாச்சும் உன்ன ஆளாக்குவேன் என்று அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் சொல்வது இயல்பு. உண்மையிலேயே தன் உயிரைக் கொடுத்துத்தான் என்னை ஆளாக்கினார் என் தந்தை. ஏனென்றால், அரசு ஊழியராக இருந்த அவர் இறப்புக்கு பிறகு, கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணியை அரசாங்கம் எனக்கு வழங்கியது.

கருணையில் வந்தவன் என்ற நினைவு ஒவ்வொரு நாளும் எனக்குள் நிறைந்து இருப்பதால், கருணை நிறைந்தவன் என்று மக்கள் ஒவ்வொருவரும் சொல்லும் படியாகவே என் பணியை நான் அமைத்துக் கொண்டேன். 2011-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்த நான், அன்று முதல் இன்று வரை ஒரு பைசா கூட லஞ்சமாகவோ, அன்பளிப்பாகவோ பெற்றதில்லை என்பதை கர்வத்தோடு கூறிக் கொள்கிறேன். ஒரு நேர்மையான அரசு பணியில் இருப்பது என்பது இந்த காலகட்டத்தில் எவ்வளவு கடினம் என்று அனைவருக்கும் தெரியும்.

சட்டவிரோத செயல்களுக்கு துணை போகமாட்டேன் என்றும், மக்களுக்காக உழைப்பேன் என்றும், அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும், ஒரு காலகட்டத்தில் புற அழுத்தம் காரணமாக தங்கள் கொள்கைகளை தாங்களே கரைத்துக் கொண்டு, பணமே குறி என்று மாறி விடுகிறார்கள். அரசியல் அழுத்தம், அதிகாரிகளின் அழுத்தம், அதைவிட இந்த சமூகத்தில் கொலை, கொள்ளை செய்பவர்களின் அழுத்தத்திற்குக் கூட அடிபணிந்து, தங்களின் தடம் மாறி போகும் அரசு ஊழியர்களுக்கு இடையே, எதுவாகினும் உயிர் போகினும், நேர்மை கைவிடேன் என்ற நெஞ்சுரத்தோடு வாழும் நேர்மையாளர்கள் என்ற சிறுபான்மை கூட்டத்தில் நானும் ஒருவனாய் இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

எத்தனையோ அச்சுறுத்தல்கள், எத்தனையோ மிரட்டல்கள், எத்தனையோ அழுத்தங்கள் வந்த போதிலும், மக்களின் வரிப்பணம் வாங்கி தின்பவன், மக்களுக்காகவே உழைக்க வேண்டிய கடமை கொண்ட ஒரு அரசு ஊழியன் என்ற கர்வத்தில், அத்தனை அழுத்தங்களையும் புறந்தள்ளி பயணித்தேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. ஒரு அரசு ஊழியனாய், கிராம நிர்வாக அலுவலராய், என் கிராமத்தில் கடைக்கோடி கிராம மக்களின் வீடு வரை தேடிச் சென்று, அவர்களுக்காக மிக நேர்மையாய் உழைத்தேன் என்ற நிம்மதியும், திருப்தியும் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் பயணிக்கும்.

பணமும், நிலமும், பதவியுமே வாழ்வின் அதிமுக்கிய தேவை என்று கருதுபவர்கள் எந்த தவறையும் செய்யும் துணிவுக்கு சென்று விடுகிறார்கள். அந்த ஒரு குறிப்பிட்ட தவறானவர்களால்தான், இந்த சமூகத்தின் அத்தனை விதிகளுக்கும் கட்டுப்பட்டு வாழும் மக்களுக்கு எந்த நன்மையும் சென்று சேர்வதில்லை. ஒரு கிராம நிர்வாக அலுவலராய் விதிகளுக்கு உட்பட்டு அதிகாரத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன். ஆனாலும், எந்த ஒரு மாற்றத்தையும் இந்த கட்டமைப்பில் என்னால் செய்ய முடியவில்லை. ஆகவே, நண்பர்களே நான் உயிராய் நேசித்த இந்த அரசு பணியை என் தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா செய்கிறேன் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அரசு ஊழியனாக என் பணியின் கடைசி நாளில் கூட என் தலையை நான் தடவிப் பார்த்தேன். கொம்பு முளைத்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் அங்கே இல்லை. நண்பர்களே மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த அரசாங்கத்தில் மக்களுக்கு சேர வேண்டிய உதவியை அரசிடம் இருந்து பெற்று மக்களிடம் கொண்டு சேர்ப்பதுவே அரசு பணி. ஆனால், கொம்பு முளைத்து விட்டதாய் திரியும் பலருக்கு இது உரைப்பதே இல்லை. உரைக்கும் நாள் வந்து சேரட்டும். அந்த நன்னாளில் நானும் ஒரு நேர்மையான அரசு ஊழியனாய் இருந்தேன் என்று கடைசி பெருமூச்சை விட்டபடி உயிர் பிரிய காத்திருக்கிறேன். என்னை நேசித்த.. நேசிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it

One thought on “தமிழக வரலாற்றில் முதல் முறையாக… அரசியல் அழுத்தத்தால் வி.ஏ.ஓ. ராஜினாமா… திராவிட மாடல்!

Comments are closed.