பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது!

Share it if you like it

பாரத பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்’ விருதை அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கி கவுரவித்திருக்கிறார்.

பிரான்ஸ் நாட்டில் இன்று பாஸ்டில் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் முப்படைகளைச் சேர்ந்த ஒரு ராணுவக் குழு பங்கேற்கும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு நேற்று காலை விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். பாரிசில் உள்ள லா சீன் மியூசிகேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அங்கு இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றினார்.

தொடர்ந்து, பிரான்சில் உள்ள எலிசி அரண்மனைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை அதிபர் இம்மானுவல் மேக்ரான், அவரது மனைவி பிரிகர் மேக்ரான் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார். தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இதன் மூலம் இவ்விருதை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் 2023 பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானால் வழங்கப்பட்டது. இந்த ஒருமைப்பட்ட மரியாதைக்கு அதிபர் இம்மானுவேல் மக்ரானுக்கு இந்திய மக்கள் சார்பால் பிரதமர் நன்றி தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தனது ட்விட்டர்  பக்கத்தில், “இந்தியா – பிரான்ஸ் கூட்டாண்மையின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு அன்பான செயல். பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரான்ஸின் மிக உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர் வழங்கப்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே இவ்விருது தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்லஸ், முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூட்ரோஸ் பூட்ரோஸ் – காலி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it