பிரதமர் மோடிக்கு வரப்பெற்ற பரிசுப் பொருட்கள் 22 கோடி ரூபாய் ஏலம் போயிருக்கின்றன. இந்த பணம் கங்கையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கபப்ட்டிருக்கிறது.
பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றே பிறகு, நட்புறவை வளர்ப்பதற்கும், தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவ்வாறு மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், அந்தந்த நாட்டு அரசு மோடிக்கு பரிசுப் பொருட்களை வழங்கி கவுரப்படுத்தி வரவேற்பது வழக்கம். அந்த பரிசுப் பொருட்கள் பிரதமர் மோடிக்கு தொடர்புடையதாகவோ அல்லது அந்த குறிப்பிட்ட நாடுகளின் கலாசாரம் தொடர்புடையதாகவோ இருக்கும்.
அந்த வகையில், 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற மோடிக்கு, 2018-ம் ஆண்டுவரை, அதாவது நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கும் அலுவல் ரீதியாக சுற்றுப்பயணம் செய்திருந்தார். அந்த காலகட்டத்தில் வெளிநாடுகள் பலவும் வழங்கிய பரிசு பொருட்கள் ஏராளமாக குவிந்து கிடந்தன. இந்த பரிசுப் பொருட்களை தேசிய நவீன கலைக்கூடம் மூலம் ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கங்கை நதியை சுத்தம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்தார்.
அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக புதுடெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்த ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் பலரும் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த பொருட்களை ஏலம் எடுத்தனர். இதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக கிடைத்த வெள்ளித்தட்டு 30,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இதற்கு அடுத்தபடியாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி வணங்கும் புகைப்படம் 22,000 ரூபாய்க்கு ஏலம் போனது. காஸியாபாத்தைச் சேர்ந்த அவ்யான்ஸ் குப்தா என்ற 10 வயது சிறுவன், ஹனுமன் சிலையை 3,800 ரூபாய்க்கு ஏலம் எடுத்தான்.
அந்த வகையில், முதல் கட்டமாக 1,805 பொருட்களில் 240 பொருட்களும், 2-வது கட்டமாக 2,772 பொருட்களில் 612 பொருட்களும், 3-வது கட்டமாக 1,348 பொருட்களும் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தின் மூலம் மொத்தம் 22.5 கோடி றூபாய் கிடைத்தது. அதாவது, முதல் ஏலத்தில் ரூ.3.1 கோடியும், 2-வது ஏலத்தில் ரூ.3.6 கோடியும் 3-வது ஏலத்தில் அதிகமாக ரூ.15.8 கோடியும் கிடைத்தது. இந்த ஏலம் மூலம் கிடைத்த தொகை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.