விபத்துகள், இறப்புகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடுவது தொடர்பாக, அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முக்கிய அறிவுரைகளை வழங்கி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கினார். இதுகுறித்த புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியானது. இது மிகவும் வருத்தத்தை அளிப்பதாக இருந்தது என்றும், இதுபோன்ற வேறு சில குற்றச் செய்திகளும் வெறுக்கத்தக்கதாகவும், மனதை வேதனைக்கு உள்ளாக்குவதாகவும் இருப்பதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதற்கு உதாரணமாக சில நிகழ்வுகளையும் எடுத்துக் கூறி இருக்கிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் வகுப்பறையில் 5 வயது சிறுவன் சுயநினைவை இழக்கும் வரை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கியதை அப்படியே காட்டியது. பஞ்சாபி பாடகர் ஒருவரின் இறந்த உடலை மங்கலாக இல்லாமல் காட்டியது என மிக நீண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஆகவே, செய்திகள் வெளியிடுவதற்கான சட்டத்தின்படி, நிரல் குறியீட்டை பின்பற்ற வேண்டும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.
மேலும், இது தொடர்பாக அனைத்து தனியார் தொலைகாட்சி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றையும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பி இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில், “தொலைக்காட்சிகளில் தனிநபர்களின் இறந்த உடல்கள், ரத்தம் சிதறிக் கிடப்பது, காயமடைந்த நபர்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் இரக்கமற்ற முறையில் அடிக்கப்படுவது ஆகியவை தொடர்பாக காட்டப்படுகின்றன. இத்தகைய கொடூரமான பதிவுகளை காட்சிப்படுத்தும்போது, அத்தகைய காட்சிகளை மாற்றியமைத்தல், எடிட் செய்தல் உள்ளிட்டவை பயன்படுத்தி காட்சிப்படுத்துதல் வேண்டும். தவிர, விபத்துகள் மற்றும் வன்முறை சம்பவங்களை காட்சிப்படுத்தும்போது, பார்வையாளர்கள் மனவருத்தம் அடையாத வகையில் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி இருக்கிறது.