தி.மு.க. நிர்வாகி பொய் வழக்கு: பெண் தற்கொலை!

தி.மு.க. நிர்வாகி பொய் வழக்கு: பெண் தற்கொலை!

Share it if you like it

தி.மு.க. நிர்வாகி தன் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாகக் கூறி, கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். விவசாயியான இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருக்கும் குமார் என்பவருக்கும் இடையே நடைப்பாதை பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த 20-ம் தேதி கீரமங்கலம் போலீஸார் கோகிலா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். எனினும், போலீஸ் ஸ்டேஷனில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில்தான், போலீஸார் பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கோகிலா நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கடிதத்தில், “தி.மு.க. கட்சியின் அராஜகம். கட்சிப் பவரை குமார் எங்களிடம் காண்பித்து விட்டார். என் சாவுக்கு குமார் மற்றும் அவரது மனைவி புகனேஸ்வரிதான் காரணம். போலீஸ் ஸ்டேஷனுக்கு கையெழுத்து போடச் செல்லும் போதெல்லாம் போலீஸார் என்னை மிரட்டுகின்றனர். நடைப்பாதை தொடர்பான வழக்கில், கணவனையும் இணைத்து விட்டதால், பயந்து போய் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கோகிலாவின் உறவினர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், போலீஸார் அலட்சியம் காட்டுவதாகவும், கோகிலா தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, கீரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர். மேலும், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி – பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி மற்றும் வருவாயத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

தி.மு.க. நிர்வாகி ஒருவரால், பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தி.மு.க.வினரின் அராஜகம் அதிகரித்திருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


Share it if you like it