தனக்கு ஆடம்பர இருக்கை போடவில்லை என்று கூறி, குடியரசு தினவிழாவை தி.மு.க. எம்.பி. அப்துல்லா புறக்கணித்த விவகாரம் நடநிலையாளர்களையும், அரசியல் விமர்சகர்களையும், பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா. புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர், சமூக வலைத்தளங்களில் கம்பு சத்துவதில் வல்லவர். சரியான ஆடம்பர பிரியர் என்று அவரது கட்சிக்காரர்களே கூறும் அளவுக்கு நடந்துகொள்பவர். எங்கு சென்றாலும் தனக்கே முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அற்ப புத்தியைக் கொண்டவர். இந்த சூழலில், நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று காலை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த வகையில், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திலும் குடியரசு தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில்தான் தனக்கு ஷோபா செட் ஒதுக்கவில்லை என்று சொல்லி விழாவை புறக்கணித்து விட்டுச் சென்றிருக்கிறார் அப்துல்லா.
அதாவது, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், அரசு நடைமுறை விதிகளின்படி கலெக்டர், எஸ்.பி., எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கை ஒதுக்க வேண்டும். தவிர, பார்வையாளர்களுக்கும் இருக்கை ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி, கலெக்டர் கவிதா ராமு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக எம்.பி. அப்துல்லா இன்று காலை வந்தார். பார்வையாளர்கள் பகுதியில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தனக்கு ஆடம்பர இருக்கை (ஷோபா செட்) ஒதுக்கவில்லை என்று கூறி, முறுக்கிக் கொண்டு விழாவை புறக்கணித்து விட்டுச் சென்றிருக்கிறார் அப்துல்லா.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தனக்கு அவசர வேலை இருந்ததால் சென்றதாகக் கூறியிருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்றிருக்கும் ஒருவர், தனக்கு இருக்கை ஒதுக்கப்படா விட்டாலும், குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், அப்துல்லாவோ தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதை மறந்துவிட்டு, கேவலம் ஒரு ஆடம்பர இருக்கைக்காக விழாவை புறக்கணித்து விட்டுச் சென்றது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அரசு விழாவை விட முக்கியமான வேலை என்ன இருக்கிறது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அப்துல்லாவின் செயலைக் கண்டு பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். தவிர, அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் அப்துல்லாவின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல, நெட்டிசன்களும் அப்துல்லாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.