மதுபோதையில் தள்ளாட்டம்… விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்?!

மதுபோதையில் தள்ளாட்டம்… விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்?!

Share it if you like it

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், மதுபோதையில் தள்ளாடியதால் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை ஆளும் ஆம் ஆத்மி கட்சியோ திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் இருந்து வருகிறார். இவர், கடந்த செப்டம்பர் 11-ம் தேதி ஜெர்மனி நாட்டிற்குச் சென்றார். அங்கு முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். இந்த சூழலில், டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முதல் தேசியக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் 20 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1,500 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ஜெர்மனியிலிருந்து லுப்தான்ஸா விமானத்தில் நேற்று புறப்பட்டார். ஆனால், அவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததால், நிற்கக்கூட முடியாமல் தள்ளாடியதாகவும், சக பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாகவும், இதன் காரணமாக அவர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதனால் விமானமும் 4 மணி நேரம் தாமதமாகச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரதான எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தனது ட்விட்டர் பக்கத்தில், “லுப்தான்சா விமானத்தில் நன்றாக குடித்துவிட்டு போதையில் நடக்கக் கூட முடியாமல் பகவந்த் மான் இருந்திருக்கிறார். இதன் காரணமாக, அவர் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டிருக்கிறார். இதனால், விமானம் 4 மணி நேரம் தாமதமாக சென்றிருக்கிறது. இதுகுறித்து சக பயணிகள் கூறிய தகவல் ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. மேலும், இதனால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கூட்டத்தில் பகவந்த் மான் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதிர்ச்சியூட்டும் வகையில், இச்சம்பவத்தில் பஞ்சாப் அரசும், ஆம் ஆத்மி கட்சியும் அமைதி காத்து வருகிறது. இந்த செய்திகள் உலகம் முழுவதிலுமுள்ள பஞ்சாப் மாநில மக்களை அவமதிப்புக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கி இருக்கிறது. ஆகவே, இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் மாநில அரசும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தெளிவுப்படுத்த வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் பஞ்சாபி மற்றும் தேசப் பெருமை சம்பந்தப்பட்டிருப்பதால், இந்திய அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அவர் இறக்கிவிடப்பட்டிருந்தால், இந்திய அரசு ஜெர்மனியிடம் இப்பிரச்னையை எழுப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் செயல் பற்றி காங்கிரஸ் கட்சியும் ட்விட்டரில் விமர்சனம் செய்திருக்கிறது. அதில், லுஃப்தான்சா விமானத்தில் பயணம் செய்த டெல்லி பயணி ஒருவர், “பகவந்த் மான் அதிகப்படியான மதுவை உட்கொண்டதால் அவர் கால்கள் நிலையாக இருக்கவில்லை. அவருடன் வந்த அவரது மனைவி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் துணையுடனே நின்றார்” என்று முதல்வர் பகவந்த் மான் குடிபோதையில் இருந்ததாகக் கூறிய செய்தியை மேற்கோள் காட்டி, “பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அதிக மதுபோதையில் இருந்ததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டிருக்கிறார். இது மிகப்பெரிய அவமானம்” என்று தெரிவித்திருக்கிறது. ஆனால், இத்தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளித்திருக்கிறது. இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், “சுக்பீர் சிங் பாதல் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. திட்டமிட்டபடி பகவந்த் சிங் 18-ம் தேதி டெல்லி வந்திறங்கினார். வீடியோ கான்பரன்ஸிங் மூலம் தேசிய மாநாட்டில் பங்கேற்றார். எதிர்க்கட்சியினர் கூறுவது போல அப்படியொரு சம்பவம் ஜெர்மனில் நடக்கவில்லை” என்றார்.


Share it if you like it