விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா, விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று காலை விருதுநகர் அய்யனார் நகரில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
நேற்று முன்தினம் தீ விபத்தால் சேதமடைந்த குடிசை வீடுகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து பல்வேறு கிராமப்புறங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சந்திரகிரிபுரம், சீனியாபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தபோது தெலுங்கில் பேசி ராதிகா வாக்கு சேகரித்தார்.
அப்போது, மத்தியில் 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத நல்ல ஆட்சியைக் கொடுத்தவர் மோடி. தமிழக மக்களும் அவரது வெற்றியில் பயன்பெற வேண்டும். அதிமுகவினருக்கு யார் கூட்டணியில் உள்ளார்கள் என்று தெரியாது. திமுக கூட்டணி எப்படி உள்ளது என்று உங்களுக்கே தெரியும்.
அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று கூறி இதுவரை எதுவுமே செய்யவில்லை. கேஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பேன் என்றார்கள்.
இதுவரை குறைத்தார்களா? ரேஷன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை அதிகமாக வழங்கப்படும் என்றார்கள், உளுந்தம் பருப்பு கொடுப்போம் என்றார்கள். இதுவரை கொடுக்கவில்லை. நீங்கள் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.
எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது நடிகர் சரத்குமார், பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.