52 வயதாகியும் எனக்கு சொந்த வீடு இல்லை: கிண்டலுக்கு உள்ளான ராகுல் காந்தி பேச்சு!

52 வயதாகியும் எனக்கு சொந்த வீடு இல்லை: கிண்டலுக்கு உள்ளான ராகுல் காந்தி பேச்சு!

Share it if you like it

எனக்கு 52 வயதாகிறது. ஆனால், சொந்த வீடுகூட இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது கடும் விமர்சனத்துக்கும், கேலி, கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு, சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்பூரில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில், அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். நிறைவு நாளான நேற்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி பேசுகையில், “1997 தேர்தலுக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன். ஒரு நாள் நாங்கள் தங்கியிருந்த வீட்டை எனது குடும்பத்தினர் காலி செய்து கொண்டிருந்தனர். ஏன் காலி செய்கிறீர்கள் என்று நான் அம்மாவிடம் கேட்டதற்கு, இது நமது வீடு அல்ல, அரசு வீடு. ஆகவே, நாம் சென்றாக வேண்டும் என்று அம்மா சொன்னார். அதுவரை அது எங்கள் வீடு என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

அம்மாவின் இந்த பதிலைக் கேட்டதும் நிலைகுலைந்து போய் விட்டேன். அடுத்து எங்கு செல்கிறோம் என்று கேட்டேன். அப்போது, அம்மாவின் பதில், தெரியவில்லை என்றுதான் வந்தது. தற்போது எனக்கு 52 வயதாகிறது, இன்னும் எனக்கென ஒரு வீடு இல்லை. அலகாபாத்தில் நாங்கள் வைத்திருக்கும் குடும்ப வீடு எங்களுடையது அல்ல. நான் துக்ளக் லேனில் உள்ள 12-ம் எண் வீட்டில் தங்குகிறேன். அதுவும் என் வீடல்ல. ஆகவே, நான் பாரத் ஜோடோ யாத்ராவை தொடங்கும்போது, என் பொறுப்பு என்ன என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அப்போது, என் மனதில் ஒரு யோசனை தோன்றியது. இந்த யாத்திரைதான் நமது வீடு, அலுவலகம். ஏழைகள், பணக்காரர்கள் என அனைவருக்கும் இந்த வீட்டின் கதவுகள் திறந்திருக்கும். இது ஒரு சிறிய யோசனைதான். ஆனால், அதன் ஆழத்தை பின்னர் புரிந்துகொண்டேன். யாத்திரை இல்லமானது” என்று கூறினார்.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்தைத்தான் பா.ஜ.க.வினர் உட்பட பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்துவருகின்றனர். காரணம், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவில் தொடங்கி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி வரை பிரதமராக இருந்த பாரம்பரிய குடும்பம் நேரு குடும்பம். ராஜிவ் காந்தி மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி சோனியா காந்தி பிரதமராக இல்லாவிட்டாலும், பிரதமர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில்தான் இருந்தார். தவிர, நீண்ட காலமாகவே காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக ராகுல் குடும்பத்தினர்தான் இருந்து வந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்திருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க, தனக்கு 52 வயதாகியும் சொந்த வீடு இல்லை என்று ராகுல் காந்தி கூறியிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது என்று பா.ஜ.க.வினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it