ராஜாஜி
(ஒத்துழையாமை, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம் போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி, பலவித விழிப்புணர்வு போராட்டங்களில் பங்கெடுத்து, சிறை சென்றார்)
“அரசியல் சாணக்கியர்” என்று பலரால் அழைக்கப்பட்ட “ராஜாஜி என்னும் ராஜகோபாலாச்சாரி” பிறந்தது 1878 ஆம் ஆண்டு, டிசம்பர் 10 ஆம் நாள்.
அப்போதைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, தொரப்பள்ளியில் பிறந்தார். இவரது தந்தை சக்கரவர்த்தி ஐயங்கார், தாயார் சிங்காரம்மாள் ஆவர். சமஸ்கிருத பண்டிதரான அவர், தமது பிள்ளையின் படிப்பைக் கருத்தில் கொண்டு, ஓசூருக்கு வர, ராஜாஜியின் பள்ளிப் படிப்பு ஓசூரில் துவங்கியது.
படிப்பில் மிகவும் சூட்டிகையான மாணவராக இருந்தார். தொடர்ந்து, தனது ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்டு, உலக விஷயங்களைத் தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினார், ராஜாஜி. அதோடு மட்டுமல்லாது, சமுதாயத்தில் நிலவி வந்த ஏற்றத் தாழ்வுகளையும், கூர்ந்து கவனித்து வந்தார். பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர், பெங்களூரில் தனது பட்டப் படிப்பைத் துவங்கினார், ராஜாஜி.
அங்கு பேராசிரியர் டேய்ட், ராஜாஜியின் ஆங்கிலப் புலமை வளர, பெரும் காரணமாக, அமைந்தார். பட்டப் படிப்பை முடித்த பின்னர், சட்டம் படிக்க, சென்னை மாகாண கல்லூரியில் சேர்ந்தார், ராஜாஜி.
ஆங்கில அறிஞர்கள் பலரின் நூல்களைப் படித்ததோடு மகாபாரதம், கீதை, பைபிள் என ஆன்மிக விஷயங்களையும் கற்று உணர்ந்தார்.
சட்டப் படிப்பை முடித்தவுடன், சிறந்த முறையில், தனது வழக்கறிஞர் தொழிலை, சேலத்தில் தொடங்கி நடத்தி வந்தார். சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்திருந்த அவர், தனது ஞாபக சக்தியால், பல வழக்குகளைச் சிறப்பாக வாதிட்டு வென்றார். அவருக்கு, அலமேலு மங்கம்மாள் என்பவருடன் திருமணம் நடந்தது.
அந்தக் காலகட்டத்தில், காந்திஜி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்க, வழக்கறிஞர்கள் பலரும் தங்கள் தொழிலைத் துறந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர், ராஜாஜியும் அதனையே செய்தார்.
ஒத்துழையாமை, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம் போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி, பலவித விழிப்புணர்வு போராட்டங்களில் பங்கெடுத்து, சிறை சென்றார்.
காங்கிரஸ் கொள்கைகளில் வேறுபட்டு, சிறிது காலம் விலகி இருந்தவர், உப்புச் சத்தியாகிரகத்தின் போது மீண்டும் காந்திஜியுடன் இணைந்து, போராடிச் சிறைச் சென்றார்.
சென்னை மாகாண முதல் மந்திரியாக நியமிக்கப் பட்டார். நாட்டில் முதன் முறையாக, “மதுவிலக்கை” சேலம் ஜில்லாவில் அமலுக்கு கொண்டு வந்தார், ராஜாஜி.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரிகள் பதவி விலகிய போது, ராஜாஜியும் பதவி விலகினார். பின்னர், மவுண்ட் பேட்டன் நோய் வாய்ப்பட்டு இருந்த போது, ராஜாஜிக்கு கவர்னர் ஜெனரல் பதவி வழங்கப் பட்டது.
பாகிஸ்தான் கொள்கைகளில், மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த காரணத்தினால் காந்திஜிக்கும், ராஜாஜிக்கும் மோதல்கள் நிகழ்ந்து கொண்டு இருந்தன.
ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகி, ஒத்த கருத்துக் கொண்டிருந்த சிலருடன் இணைந்து, “சுதந்திராக் கட்சி”யை உருவாக்கினார்.
மீண்டும் சென்னை முதல்வராக, பட்டேலும், நேருவும் ராஜாஜியை கொண்டு வந்தார்கள். இடையே சத்தியமூர்த்தியுடன் ராஜாஜிக்கு, பிணக்கு ஏற்பட்டது. இந்தக் காரணத்தினால், சத்தியமூர்த்தியை குருவாகக் கொண்டு பணியாற்றிய காமராஜருக்கும், ராஜாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்து வந்தனர். “கல்வித் துறை சீரமமைப்பு” என்று ராஜாஜி கொண்டு வந்த மாற்றங்களினால் ஆட்சி இழக்க, தேர்தலில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் முதல்வரானார்.
ஆன்மிக நாட்டம் கொண்ட ராஜாஜிக்கும், நாத்திக கருத்துக் கொண்ட பெரியாருக்கும் மோதல்கள் நடந்துக் கொண்டிருந்தன.
எந்த விஷயத்துக்கும், அவர் ஆற்றிய எதிர்வினை அவரைச் சிறந்த ஆட்சியாளராக, பிடிவாதக்காரராக, சீர்திருத்தவாதியாக, அரசியல் அறிஞராக, துணிவு மிக்கவராக, பல பரிமாணங்களில் காட்டியது. தனக்குச் சரியெனப் பட்டதைத் துணிந்து செய்தார். தவறென உணர்ந்தால், திருத்திக் கொள்வதிலும் அவர் தவறவில்லை.
கொள்கை, கருத்து முரண்பாடுகள் தானே தவிர, தனிப்பட்ட முறையில் அனைவரிடமும் சிறந்த மரியாதையுடனும், நட்புடனும் பழகி வந்தார் ராஜாஜி. அவர் இறந்த போது, காமராஜர் கண்ணீர் விட்டு அழுதார்.
அரசியல் மட்டுமல்லாது, இலக்கியத்திலும் சிறந்த ஆளுமை கொண்டு இருந்தார். ராஜாஜி எழுதிய “சக்கரவர்த்தித் திருமகன்”, “ராமாயணம்”, “மகாபாரதம்” இரண்டும் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தன.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பல நூல்களையும் எழுதி உள்ளார். தமிழில் அருமையான நடையில், தனது படைப்புகளை உருவாக்கினார். அவரின் பாடலான ‘குறை ஒன்றும் இல்லை ..’ என்ற பாடலை, எப்போது கேட்டாலும் மனமிளகும்.
முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்ற ஒரு சிலரில், ராஜாஜியும் அடக்கம். உள்துறை அமைச்சர், கவர்னர் ஜெனரல், முதல் மந்திரி, ஆளுநர் என இந்திய அரசியலில் பல பதவிகள் வகித்த போதும், இறுதி நாட்களில் சென்னை தி. நகரில், சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த அவர், தனது 94 வது வயதில்,1972 ஆம் ஆண்டு, டிசம்பர் 25 அன்று, மறைந்தார்.
ராஜேஷ்