தஞ்சாவூர் என்றவுடன், நமது அனைவரின் நினைவிற்கும் வருவது, பிரகதீஸ்வரர் கோவிலும், அதை கட்டிய ராஜராஜ சோழனும். தஞ்சாவூர் கோவிலின் சிறப்பு அம்சங்கள் பல உள்ளன. கற்களே இல்லாத, காவிரி சமவெளிப் பகுதியில், கற்களைக் கொண்டு, இப்படி ஒரு பிரம்மாண்டமான கோவிலைக் கட்டியது, பெரும் சாதனையாக கருதப் படுகிறது. இந்த பிரம்மாண்டமான கோவிலை, திரும்பவும் யாராலும், நவீன தொழில் நுட்பத்துடன் கட்ட முடியுமா? என்பது கேள்விக் குறியே?
அந்த காலத்திலேயே, “கிரேன்” இல்லாத நாட்களிலே, பல மீட்டர் தூரம் உயரத்திற்கு, கற்கள் கொண்டு செல்லப் பட்டு, கோவில் கட்டப் பட்டு உள்ளது. கிரேன் போன்ற நவீன தொழில் நுட்பத்தின் உதவி இல்லாமல், இவ்வளவு பெரிய கோவில் எப்படி கட்டப் பட்டது என்பது, விந்தையிலும் விந்தையே!
உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக, “தஞ்சைப் பெரிய கோவில்” உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் ஆகியும், இன்னும் கோவில் நிலைத்து நீடித்து நிற்பதற்கு முக்கிய காரணமே, ராஜராஜ சோழனின் அர்ப்பணிப்பும், பக்தியுமே என்றால், அது மிகையல்ல…
கலசத்திற்கு கீழே, 40 டன் எடையுடன், விமானத்தின் உச்சியில் உள்ள கல், எட்டு இணைப்புகளால் ஆன, “பிரம்மாந்திரக் கல்”. கோயில் அமைந்து உள்ள இடம், “சுக்கான் பாறை” என்ற இடமாகும். இந்த இடத்தில், குழி தோண்டி மணலை நிரப்பி, அதன் மீது கோயில் கட்டப் பட்டு உள்ளது. பூகம்பம் ஏற்படும் போது மணல் அசைந்து கொடுக்க, கோயில் எந்தவித சேதமும் இல்லாமல், அப்படியே நீடித்து, நிலைத்து நிற்கும். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போன்ற நுட்பத்தின் வெளிப்பாடு, அதனால் தான், இதை `ஆர்க்கிடெக் மார்வெல்’ (Architecture Marvelous) என்கிறார்கள், விஷயம் அறிந்த கட்டிட வல்லுநர்கள்.
சமூக நீதியும், சமத்துவமும்:
தஞ்சை பெரிய கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்ட, அனைவருடைய பெயரையும் கல்வெட்டில் பதிவு செய்து உள்ளார், ராஜராஜ சோழன். இதன் மூலம், சமூக நீதியையும், சமத்துவத்தையும் எந்த அளவுக்கு, அவர் போற்றி பாதுகாத்தார் என்பது, வெளிப் படையாகவே தெரிகிறது.
தென் கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜராஜ சோழன்:
இலங்கை, தெற்கு ஆசியா என கடல் கடந்து, வெற்றி கொடி நாட்டி உள்ளார், ராஜராஜ சோழன். அவர் மகன் ராஜேந்திர சோழன், அவர் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே, இணை அரசராக பொறுப்பு ஏற்று, திறமையுடன் அரசாண்டார். தந்தையும், மகனும் அரசு நிர்வாகத்தை, மக்கள் புகழும் வகையில், சிறப்பாக கையாண்டனர்.
நிர்வாகத் திறன்:
தற்போதைய நிலையில் உள்ளது போலவே, நிலம் வைத்து இருக்கும் உரிமையாளர்களின் நிலத்தை அளந்து, அதற்கு ஏற்றவாறு வரி வசூல் செய்யப் பட்டது. பரவி இருந்த தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட ராஜ்ஜியத்திற்கு, ஆட்களை நியமித்து, அனைவரையும் பொதுவாக நிர்வகித்து வந்தார். தற்போது உள்ள படி பார்த்தால், பிரதமர் நாட்டை ஆள்கிறார். அதற்கு அடுத்தபடியாக, முதல்வர் மாநிலத்தை ஆள்கிறார்.
ராஜராஜ சோழன் சென்ற இடம் எல்லாம், இந்து சமய திருக்கோவிலை வானுயர்ந்த அளவு எழுப்பினார். தனக்கு மிகவும் பிடித்த சிவாலயங்களை எழுப்பியது போலவே, விஷ்ணு ஆலயம் கட்டவும், அதிக நிதி உதவிகள் செய்தார்.
இராஜராஜ சோழன் நினைத்து இருந்தால், தான் ஆட்சி புரிந்த தெற்கு ஆசியா முழுவதையும் தனது ஆளுகைக்கு உட்படுத்தி, “தனி தேசம்” என அறிவித்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், “ஒன்றுபட்ட தேசமே, நமது பாரம்பரியம்” என்பதில் உறுதிபட இருந்தார்.
சில ஆண்டு காலங்களாகவே, சில தேசப் பிரிவினைவாதிகள் கூறி வருவது போல, “இந்திய தேசத்தில் இருந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும்” என, அவர் நினைக்கவில்லை. அவ்வாறு நினைத்து இருந்தால், உடனே செயல் படுத்தக் கூடிய அளவில், அவருடைய ஆட்சியும், ஆளுகையும இருந்ததாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மன்னரைப் பற்றி அவதூறு கருத்து:
பார் போற்றும் ராஜராஜ சோழனைப் பற்றி, தமிழ் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித், “ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலம், இருண்ட காலம் எனவும், அவர் ஆட்சியில் தான் பட்டியலின மக்களின் நிலம் அபகரிப்பு செய்யப் பட்டது எனவும்”, அவதூறாகப் பேசினார்.
உலகமே கொண்டாடும் மன்னரை, எப்படி அவ்வாறு அவதூறு செய்யலாம் எனக் கொதித்து எழுந்த தமிழக பக்தர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்காக வழக்கும் பதிவு செய்யப் பட்டு, விசாரிக்கப் பட்டது.
அகிலமே போற்றிக் கொண்டாடும், ஒரு தமிழ் மன்னரைக் குறித்து, இன்னொரு தமிழரே அவதூறு செய்வதைக் கண்டு, மக்கள் அனைவரும் கோபம் கொண்டனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், “சத்ரபதி சிவாஜி” எப்படி போற்றி வணங்கப் படுகின்றாரோ, அது போலவே, தமிழகத்தில் போற்றி வணங்கப் பட வேண்டிய ராஜராஜ சோழன், சிலரால், அவதூறு செய்யப் படுவது, மிகவும் வருந்தத்தக்கதே, என தமிழ் ஆர்வலர்கள் நினைத்து, வருந்தி வருகின்றனர்.
ராஜேந்திரச் சோழனை கவுரவித்த மகாராஷ்டிரா:
2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 23 ஆம் தேதி, மத்திய அரசின் கப்பல் கட்டும் நிறுவனமான “மஸ்கான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ்” (Mazgon Docks Ship) நிறுவனத்திற்கு, ராஜராஜ சோழனின் வாரிசும், வலிமையான கப்பல் படையை அமைத்து, இலங்கை, மாலத்தீவு போன்ற தெற்காசிய நாடுகளில் வெற்றி கொடி நாட்டிய, ராஜேந்திர சோழன் திருவுருவப் படத்தை, அன்றைய மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்த பாரதீய ஜனதா அரசின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அர்ப்பணித்தார்.
அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், சோழ மன்னரைப் போற்றி புகழ்ந்தார். “இந்திய பெருங்கடலின் அமைதி தூதுவர்” எனஅன்றைய பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கூறினார்.
சதயப் பெருவிழா:
அகிலம் போற்றும் ஆட்சி செய்த ராஜராஜ சோழனின் பிறந்த நாள் வருடந் தோறும், அவர் பிறந்த “ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரம்” அன்று, வெகு விமரிசையாக கொண்டாடப் படும். தஞ்சை பெருவூடையார் கோவிலை தரிசிக்க பெரும் அளவில், பக்தர்கள் திரண்டு வருவார்கள், அந்த வாரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டு இருக்கும்.
கொரோனா பரவுதல் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலேயே, அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப் பட்டு வந்தனர். வார இறுதி நாட்களில், தமிழகத்தில் கோவில்கள் மூடப் பட்டு இருந்தது. இந்து சமய பக்தர்களின் போராட்டத்தால், அந்த உத்தரவு, மாற்றம் செய்யப் பட்டது.
சிவ லிங்கத்திற்கு, 216 அடி உயரத்தில் விமானம் எழுப்பி, தனது பக்தியை காலம் கடந்தும் நிற்கச் செய்த ராஜராஜ சோழனின் பிறந்த நாள் நிகழ்ச்சியில், இறை மறுப்பாளர்கள் பங்கேற்பது, இந்து சமய பக்தர்களுக்கு, மிகுந்த வேதனையும், துயரத்தையும் தருவதாக தெரிவிக்கின்றனர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதன் மேல் பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர்களே முன்னெடுத்து செய்ய வேண்டும்.
சில இயக்கங்கள் “உரிமை மீட்புக் குழு” என்ற பெயரில், இறை வழிபாட்டை தடுக்க பல முயற்சிகள் செய்கின்றன. பல நூறு ஆண்டுகளாக, மிகப்பெரிய கோவில்கள் நிறைய உள்ள சோழ மண்டலத்தை, இறை நம்பிக்கை அற்ற இடமாக மாற்ற, இந்த சக்திகள் வேலை செய்கின்றனவோ? என்ற ஐயம், பொது மக்கள் மனதில் எழுந்து உள்ளது.
மற்ற சமய நிகழ்ச்சிகளில், அந்த சமயத்தில் உள்ளவர்களே நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்து சமய நிகழ்ச்சி எனில், இறை மறுப்பு கொள்கை கொண்டவர்கள், நிகழ்ச்சிகளை நடத்தி வருவது, மிகுந்த துயரத்தை தருவதாக பக்தர்கள், தங்களுடையக் கவலையை தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சைப் பெரியக் கோவில் பல்லாண்டு வாழ்கவே..!
மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழ் பல்லாண்டு வாழ்கவே.!!
- அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
Excellent article . The great Raja Raja Chozhan.