பழைய பட்ஜெட்டை படித்த முதல்வர்: ஒரே அசிங்கமா போச்சு குமாரு… கலாய்க்கும் நெட்டிசன்கள்!

பழைய பட்ஜெட்டை படித்த முதல்வர்: ஒரே அசிங்கமா போச்சு குமாரு… கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் இன்று நடந்த மாநில பட்ஜெட் தாக்கலின்போது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் புதிய பட்ஜெட்டுக்கு பதிலாக பழைய பட்ஜெட்டை படித்ததால், அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை வைத்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராக இருந்து வருகிறார். இந்த சூழலில், நிகழாண்டுக்கான அம்மாநில பட்ஜெட் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி, முதல்வர் அசோக் கெலாட் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை படிக்கத் தொடங்கினார். இதில், வேடிக்கை என்னவென்றால், சுமார் 10 நிமிடங்களாக அவர் கடந்தாண்டு பட்ஜெட்டை படித்ததுதான். இதனால் அவையில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனே, அசோக் கெலாட்டின் அருகில் அமர்ந்திருந்த காங்கிரஸ் அமைச்சர்கள், அவரை தடுத்து நிறுத்தினர். இதன் பிறகுதான், தான் படித்தது பழைய பட்ஜெட் என்பது முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தெரியவந்தது.

இதனிடையே, முதல்வர் அசோக் கெலாட் படித்தது பழைய பட்ஜெட் என்பது தெரிந்தவுடன் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூச்சலிட்டனர். மேலும், அவையில் கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவை 30 நிமிடங்க்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் பா.ஜ.க.வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே, “சுமார் 8 நிமிடங்களுக்கு முதல்வர் பழைய பட்ஜெட்டை படித்திருக்கிறார். நான் முதல்வராக இருந்தபோது பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு எல்லாவற்றையும் அடிக்கடி சரிபார்த்துக் கொள்வேன். பழைய பட்ஜெட்டை படிக்கும் முதல்வரின் கையில் இருக்கும் மாநிலம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

மற்றொரு பா.ஜ.க. தலைவரான குலாப் சந்த் கத்தாரியா, “இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. பட்ஜெட் அறிக்கை கசிந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். எனினும், இதற்கு விளக்கம் அளித்திருக்கும் முதல்வர் அசோக் கெலாட், “அவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பட்ஜெட் ஆவணத்துக்கும், நான் வைத்திருக்கும் பட்ஜெட் ஆவணத்துக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தால், அதை நீங்கள் சுட்டிக்காட்டலாம். எனது பட்ஜெட் ஆவணத்தில் தவறுதலாக வேறு ஒரு பக்கம் மட்டும் சேர்க்கப்பட்டு விட்டது. இதனால் பட்ஜெட் எப்படி கசிந்திருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். இதன் பிறகு அவை மீண்டும் கூடியது. அப்போது, முதல்வர் அசோக் கெலாட் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், தன்னால் நேர்ந்த தவறுக்கும் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்த சூழலில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை வைத்து ட்ரோல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். பலரும் ஒரே அசிங்கமா போச்சு குமாரு என்கிற சினிமா பட டயலாக்கை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

Image

Share it if you like it