நுபுர் ஷர்மாவை கொல்ல வந்த பாகிஸ்தான் ஆசாமி கைது!

நுபுர் ஷர்மாவை கொல்ல வந்த பாகிஸ்தான் ஆசாமி கைது!

Share it if you like it

பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து வந்த ஆசாமியை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபி பற்றி பேசிய கருத்து சர்ச்சையானது. இதனால், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கொலை மிரட்டல்கள் வந்தன. மேலும், நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்ஹையா லாலை, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். அதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மருந்துக்கடைக்காரர் உமேஷ் கோஹ்லேவும் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, ஹிந்துக்களை பாதுகாக்க விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஹெல்ப்லைன் நம்பர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் இந்துமால்கோட் எல்லை புறக்காவல் நிலையத்திற்கு அருகே பாகிஸ்தானைச் சேர்ந்த நபரை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்திருக்கிறார்கள். அவனது பெயர் ரிஸ்வான் அஷ்ரப் என்பது தெரியவந்திருக்கிறது. அவனிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் நாட்டின் வடக்கு பஞ்சாப் பகுதியிலுள்ள மண்டி பஹாவுதீன் நகரைச் சேர்ந்தவன் என்பதும், முகமது நபிக்கு எதிராக கருத்துத் தெரிவித்த நுபுர் ஷர்மாவை கொலை செய்ய வந்ததும் தெரியவந்தது. மேலும், கொலைத் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு அஜாமீர் தர்காவுக்கு செல்ல முடிவு செய்திருந்ததாகவும் கூறியிருக்கிறான். அவனிடமிருந்து 11 அங்குலம் நீளமுள்ள கத்தி, மதப் புத்தகங்கள், துணிகள், உணவு உள்ளிட்டவற்றை எல்லை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

பின்னர், ரிஸ்வானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபற்றி சம்மந்தப்பட்ட புலனாய்வு அமைப்புக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, புலனாய்வு பணியகம், உளவுத்துறை அமைப்பான ரா மற்றும் மிலிட்டரி இன்டெலிஜென்ஸ் ஆகியவற்றின் கூட்டுக் குழு ரிஸ்வான் அஷ்ரபிடம் விசாரணை நடத்தி வருகிறது.


Share it if you like it