பி.டி.ஆர். சொல்வது அப்பட்டமான பொய்: கவர்னர் அதிரடி!

பி.டி.ஆர். சொல்வது அப்பட்டமான பொய்: கவர்னர் அதிரடி!

Share it if you like it

கவர்னர் மாளிகை நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், ராஜ் பவன் என்கிற பெயரை லோக் பவன் என்று மாற்ற நினைக்கிறேன் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தி.மு.க. தலைமையிலான தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என். ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொது நிகழ்வில் பேசுவது, திராவிட மாடலை விமர்சிப்பது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை மாணவர்களிடம் கூறுவது என ரவுண்டு கட்டி அடித்து விளையாடி வருகிறார் கவர்னர் ரவி. சட்டமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த உரையில், திராவிட மாடல், பெரியார், அண்ணா போன்ற வார்த்தைகளை தவிர்த்து விட்டார். இதனால், கவர்னர் மீது தி.மு.க. கடும் ஆத்திரத்தில் இருந்து வருகிறது.

இதையடுத்து, தமிழக சட்டமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கவர்னர் மாளிகைக்கு தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் கொடுக்கப்படக்கூடிய நிதியானது 50 லட்சம் ரூபாய் என்பதில் இருந்து, திடீரென 2019-ம் ஆண்டு 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும், அந்த 5 கோடி ரூபாயில் 4 கோடி ரூபாய் தனிப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், 5 கோடி ரூபாய் அரசு பணத்தை எப்படி தனியார் நிறுவனத்திற்கு வழங்கினார்கள் என்றும், கவர்னர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட பணம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதுதானா என்பதை விளக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி, ஒரு ஆங்கில செய்தித்தாளுக்கு பேட்டியளித்திருக்கிறார். அப்போது அவரிடம், கவர்னர் மாளிகை நிதியில் முறைகேடு நடந்திருப்பதான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கவர்னர் ரவி, கவர்னர் மாளிகையின் செலவு குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை நிதியமைச்சர் பி.டி.ஆர். கூறியிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், கவர்னர் மாளிகையை ராஜ் பவன் என்று அழைப்பதற்கு கவர்னர் என்பது ராஜா பதவி அல்ல. ஆகவே, கவர்னர் மாளிகைக்கு ராஜ் பவன் என்று வைக்கப்பட்டிருக்கும் பெயரை மக்கள் இல்லம் என்று அர்த்தம் தரக்கூடிய லோக் பவன் என்று மாற்றலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it