சூப்பர் ஸ்டார் ரஜினியின் தத்து தந்தை… வாரிக் கொடுத்த வள்ளல் ‘பாலம்’ கல்யாணசுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தத்து தந்தை… வாரிக் கொடுத்த வள்ளல் ‘பாலம்’ கல்யாணசுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது!

Share it if you like it

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தால் தந்தையாக தத்தெடுக்கப்பட்டவரும், வாரிக் கொடுத்த வள்ளல் என்று பெயர் பெற்றவரும், அமெரிக்காவின் மேன் ஆஃப் தி மில்லினியம் விருது பெற்றவருமான சமூக சேவையை மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்ட பாலம் கல்யாணசுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்திருக்கிறது மத்திய அரசு.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவிலும் அமைந்திருக்கும் களக்காடு பஞ்சாயத்திற்குட்பட்ட ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர்தான் கல்யாணசுந்தரம். தனது தாயாரின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து திருமணமே செய்து கொள்ளாமல் சமூக சேவையை மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக 1998-ம் ஆண்டு ‘பாலம்’ என்ற அமைப்பைத் தொடங்கி ஏழைகளுக்கு பாலமாக இருந்து வருகிறார். இதனால், கல்யாணசுந்தரம் என்கிற பெயர் பாலம் கல்யாணசுந்தரம் என்று மாறிவிட்டது. தனது சமூக சேவைக்காக ஏற்கெனவே பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் கல்யாணசுந்தரம், தற்போது இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

தகவலறிந்த நாம், பாலம் கல்யாணசுந்தரத்தை சந்தித்து பேட்டி கண்டோம். “நான் வசதி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு 1 வயதாக இருக்கும்போது எனது தந்தையார் இறந்து விட்டார். நானும், எனது அண்ணனும் எங்களது தாயாரின் வளர்ப்பில்தான் வளர்ந்தோம். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது எங்களது தாயார் எங்களுக்கு 3 அறிவுரைகளை வழங்கினார். அதாவது, நீங்கள் என்றைக்கும் கொடுக்கும் கைகளாகவே இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் இந்த 3 விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என்று சொல்லி, அந்த 3 அறிவுரைகளை வழங்கினார்.

அதில் முதலாவது, எக்காரணம் கொண்டும் பேராசைப்படக் கூடாது. அதாவது, நீ விரும்பியதை அடைய ஆசைப்படு. ஆனால், பேராசைப் படாதே என்றார். இரண்டாவது, நீ சம்பாதிக்கும் பணத்தில் 10-ல் 1 பங்கை ஏழைகளுக்கு தானமாகக் கொடு. மூன்றாவதாக, தினமும் ஏதேனும் ஒரு உயிருக்காவது உதவி செய். அது மனிதராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விலங்குகளாக இருந்தாலும் சரி, செடி கொடிகளாக இருந்தாலும் சரி என்று சொன்னார். எனது தாயார் கூறியது எனது மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. இதனால், சிறுவயதிலேயே பிறருக்கு உதவி செய்வதைத் தொடங்கி விட்டேன்.

50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எனது பூர்வீக சொத்து, நான் பணியாற்றி சம்பாதித்த 30 லட்சம் ரூபாய், பணி ஓய்வுபெற்ற பிறகு கிடைத்த பணிக் கொடை என அனைத்தையும் ஏழைகளுக்காக கொடுத்து விட்டடேன். எனது சமூக சேவையை பாராட்டி 1999-ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் ‘Man of the Millennium Award’ (கடந்த 1,000 ஆண்டுகளில் உலகம் இப்படியொரு மனிதரை கண்டிருக்காது) என்னும் விருதை அளித்து சிறப்பித்தது. (இந்த விருது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அளிக்கப்படும்) இந்த விருதுடன் 6.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 30 கோடி ரூபாய்) அமெரிக்கா வழங்கியது. இந்த பணத்தை குழந்தைகள் நலனுக்காக வழங்கி விட்டேன். சமூக சேவைதான் எனது உயிர் மூச்சு. எனது சுயசரிதையை வைத்து அமிதாப் பச்சன் சினிமா எடுக்கப் போகிறார். தமிழில் ரஜினி நடிக்கிறார். இதில் கிடைக்கும் பணத்தையும் ஏழைகளுக்காக செலவிடுவேன்” என்கிறார் 83 வயதாகும் பாலம் கல்யாணசுந்தரம் என்கிற மகான்.

https://www.facebook.com/watch/?v=1782712252110380


Share it if you like it