தி.மு.க. உட்கட்சி மோதல்: கவுன்சிலரை கத்தியால் குத்திய எம்.எல்.ஏ. மகன்?!

தி.மு.க. உட்கட்சி மோதல்: கவுன்சிலரை கத்தியால் குத்திய எம்.எல்.ஏ. மகன்?!

Share it if you like it

பிளக்ஸ் பேனர் வைத்த தகராறில், தி.மு.க. கவுன்சிலரை அக்கட்சியின் எம்.எல்.ஏ. மகன் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி கவுன்சிலர்களாக இருப்பவர்கள் பாக்கியராஜ், ஜீவரெத்தினம். இவர்களில் ஜீவானந்தம் பரமக்குடி வடக்கு நகர தி.மு.க. செயலாளராகவும் இருக்கிறார். இருவரும், கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளராக தேர்வு செய்யப்பட்ட காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கத்தை வரவேற்றும், வாழ்த்துத் தெரிவித்தும் நகரின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தனர். இந்த பிளக்ஸ்களில் பரமக்குடி எம்.எல்.ஏ.வான செ.முருகேசனின் போட்டோ இடம்பெறவில்லை. இதுகுறித்து எம்.எல்.ஏ. தரப்பைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர், கவுன்சிலர் பாக்கியராஜிடம் கேட்டிருக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து, எம்.எல்.ஏ. முருகேசனுக்கு போன் செய்த பாக்கியராஜ், நீங்கள்தான் என்னை மிரட்டச் சொன்னீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு, எனது படத்தை போடாததால் எனது மகன் கேட்டிருப்பான் என்று எம்.எல்.ஏ. பதிலளிக்க, நீங்கள் பெரிய ரவுடி என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று பாக்கியராஜ் கிண்டலாக கேட்கவே, இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, பரமக்குடியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதிலும், எம்.எல்.ஏ. தரப்பினருக்கும், பாக்கியராஜ் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று பரமக்குடி ஐந்துமுனை பகுதியிலுள்ள ஜீவரெத்தினம் வீட்டில், பாக்கியராஜ், ஜீவரெத்தினம் உள்ளிட்ட சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த எம்.எல்.ஏ. தரப்பினர், இருவரிடமும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாக்குவாதம் முற்றிய நிலையில், யாரோ பாக்கியராஜின் இடுப்பில் கத்தியால் குத்தி இருக்கிறார்கள். இதில், காயமடைந்த அவரை பரமக்குடி அரசு மருத்துமவனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். பின்னர், தன்னை எம்.எல்.ஏ. மகன் துரைமுருகன் உள்ளிட்டோர் கத்தியால் குத்தியதாக பாக்கியராஜ் போலீஸில் புகார் அளித்தார். இதனடிப்படையில், பரமக்குடி டவுன் போலீஸார் துரைமுருகன், காமன்கோட்டையைச் சேர்ந்த அருண், காட்டுப்பரமக்குடியைச் சேர்ந்த பிரசாத், உரப்புளியைச் சேர்ந்த சம்பத், சத்திரக்குடியைச் சேர்ந்த விக்கி மற்றும் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே, பாக்கியராஜ் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து, அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இது ஒருபுறம் இருக்க, ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பினரும், மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தரப்பினரும் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், தற்போது எம்.எல்.ஏ. தரப்பினருக்கும், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே நடந்த மோதல் தி.மு.க. நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it