மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரம் : சேலையால் முகத்தை மூடி கண்ணீர் விட்டு அழுது கவர்னரிடம் முறையிட்ட பெண்கள் !

மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரம் : சேலையால் முகத்தை மூடி கண்ணீர் விட்டு அழுது கவர்னரிடம் முறையிட்ட பெண்கள் !

Share it if you like it

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பலரது நிலங்களை அபகரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மேற்கு வங்காள மாநிலத்தில் பற்றி எரியத் தொடங்கி உள்ளது.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் அந்த கிராமத்திற்கு சென்று போராடும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தங்கள் அடையாளத்தை காட்ட விரும்பாத வெண்கள், சேலையால் முகத்தை மூடிக்கொண்டு, கண்ணீர் விட்டு அழுதபடி கவர்னரிடம் முறையிட்டதுடன், தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அவர், இந்த சம்பவம் குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகானை உடனடியாக கைது செய்ய கூறி, பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனை தொடர்ந்து, சூழலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மேற்கு வங்காளத்தில் காட்டு தர்பார் நடக்கிறது. பழங்குடியினத்தைச் சேர்ந்த எங்கள் சகோதரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்படுகிறார்கள். முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதுபற்றி வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார். மேற்கு வங்காளத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லை. மாறாக அராஜக ஆட்சியாளர் மம்தா பானர்ஜியின் சட்டமே உள்ளது.

எனவே, மம்தா பானர்ஜி தனது பதவியில் நீடிக்க உரிமை இல்லை. நீங்கள் ராஜினாமா செய்யவில்லை என்றால், மக்களால் தூக்கி எறியப்படுவீர்கள், அது நிச்சயம். இவ்வாறு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறினார்.

மேலும் அப்பகுதியில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகளால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் ஷேக் ஷாஜகான் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின்போது, ஷாஜகானின் உதவியாளர் ஷிபோபிரசாத் ஹஸ்ராவின் வீடு மற்றும் கோழிப்பண்ணை சேதப்படுத்தப்பட்டதாகவும், மேலும் சில கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தெரிவிக்கையில், மக்கள் அரசாங்கத்தையும், காவல்துறையையும் நம்பவில்லை, அதனால்தான் அவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கிறார்கள். மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறுகையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பல ஆண்டுகளாக நில அபகரிப்பு, சிறுமிகளைக் கடத்தல் போன்ற கொடுமைகளுக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறையால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை, அவர்கள் டிஎம்சி குண்டர்களைக் கொண்டு வந்து கிராம மக்களை கைது செய்தனர். டிஎம்சி குண்டர்கள் கிராம மக்களைத் தாக்கினர், அவர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர். இதற்கு ஏதாவது செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன், அங்குள்ள மக்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர்” என்று மஜும்தார் கூறினார்.


Share it if you like it