பவன் குமார் ராய் ஐபிஎஸ் – வெளியுறவுத் துறை அதிகாரி

பவன் குமார் ராய் ஐபிஎஸ் – வெளியுறவுத் துறை அதிகாரி

Share it if you like it

சமீபத்தில் கனடாவில் ஹர்தீப் சிங் நிசார் என்னும் இந்திய சீக்கிய வம்சாவழி சார்ந்த நபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கனடாவின் தேசிய குடியுரிமை பெற்று கனடாவில் வாழ்ந்து வந்தவர். பெரும் தொழில் அதிபர். கனடாவை மையமாகக் கொண்டு இயங்கிய அரசியல் பின்புலம் உள்ளவர். பாரதத்தின் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக இருந்தவர். கடந்த காலங்களில் பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பிரிவினை கோரி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத செயல்களுக்கும் நாடு முழுவதும் தலை தூக்கிய பல்வேறு பிரிவினைவாத பின்னணியிலும் இந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஹர்திப் சிங் நிசார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுடில்லியில் வேளாண் திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் விவசாயிகள் போர்வையில் பல மாதங்கள் முற்றுகையிட்டு நடந்த போராட்டம் கலவரம் செங்கோட்டையில் தேசியக்கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம் என்று பல்வேறு விஷயங்களில் பின்னணியில் இருந்தவராக குற்றம் சாட்டப்பட்டது.

பாரதத்திற்கு உள்ளேயும் பாரதத்திற்கு வெளியே இருக்கும் ராஜ்ய தூதரகங்கள் வழிபாட்டுத் தலங்கள் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் என்று பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை குறி வைத்து நடத்தி பாரதத்திற்கு பெரும் அவமதிப்பையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பில் ஒரு முக்கிய தலைவனாக இருந்தவர். சமீபத்தில் கனடாவில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கொலை வழக்கு விசாரணை கனடா நாட்டு உளவுத்துறை மற்றும் அரசின் கண்காணிப்பில் நடந்து வருகிறது. இதில் கனடா நாட்டு பிரதமர் சமீபமாக அவர்களின் நாடாளுமன்றத்தில் வைத்து இந்திய உளவுத்துறை மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் பவன்குமார் ராய் ஐபிஎஸ் என்னும் பாரதத்தின் தூதரை நேரடியாக கனடா அரசு குற்றம் சாட்டுகிறது. கனடா நாட்டில் இருக்கும் பாரதத்தின் தூதரகத்தில் தூதரக அதிகாரியாக இருந்த பவன்குமார் ராய் என்பவர் தான் ஹர்திக் சிங் நிசாரின் கொலையில் முக்கிய மூலையாக செயல்பட்டதாக கனடா நாடு அவர் மீது நேரடியாக குற்றம் சாட்டி அவரை கனடா நாட்டில் இருந்து வெளியேற்றியது. ராஜ்ய பரிபாலனங்களில் நடைமுறை அடிப்படையில் அவரை கைது செய்ய முடியாத காரணத்தால் நாட்டை விட்டு வெளியேற்றி பாரதத்திற்கு நாடு கடத்தியது. பதிலுக்கு பாரதமும் இங்கிருக்கும் ஒரு குறிப்பிட்ட கனடிய தூதரக அதிகாரியை அழைத்து விசாரணை நடத்தி அவரை உடனடியாக அடுத்த விமானத்தில் ஏற்றி நாடு கடத்தியதன் மூலம் கனடாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

கனடா நாட்டு அரசால் ஹர்திப் சிங் நிசார் கொலையில் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பவன் குமார் ஐபிஎஸ் 1997 ல் ஐபிஎஸ் முடித்து இந்திய உளவுத்துறையில் இணைந்தவர். பஞ்சாப் – ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிகாரப்பூர்வமான பொறுப்புகளிலும் மாறு வேடங்களிலும் பணிபுரிந்தவர் . காலிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணித்து அரிய தகவல்களை திரட்டி கொண்டிருந்தவர். ஆரம்ப காலங்களில் இவருக்கு போதுமான முக்கியத்துவமோ மேலதிக உளவுத்துறை பணி வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை.

ஆனால் 2014 ல் மோடி அரசு பொறுப்பிற்கு வந்த பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். நாடு முழுவதிலும் இருந்து கடந்த காலங்களில் திறமையாகவும் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயல்பட்ட பல்வேறு உளவுத்துறை அதிகாரிகளில் பணியில் இருப்பவர்கள் ஓய்வு பெற்றவர்கள் என்று அத்தனை பேரையும் தேடிப் பிடித்து முக்கிய பணிகளில் பணியமர்த்தப்பட்டார்கள். அந்த வகையில் கடந்த காலங்களில் பாகிஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து பாரதத்திற்காக உளவு பணிகளை முன்னெடுத்த அஜித் தோவலுக்கு பவன் குமார் ஐபிஎஸ் இன் சாத்தூர்யமும் துணிச்சலும் பரிச்சயப்பட்டது.

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பில் ஆஜித் தோவல் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு முன்பிருந்தே பெரும் அனுபவம் கொண்டவர் என்றால் 97 ல் பணியாற்ற தொடங்கிய நாள் முதல் நேரடியான களப்பணியின் மூலம் காலிஸ்தான் பயங்கரவாதத்தின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக கணித்தவர் பவன் குமார் ராய். அந்த வகையில் இருவரும் இணைந்த கைகளாக காலிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்கொண்டவர்கள். அவ்வகையில் காலிஸ்தான் பயங்கரவாதத்தின் அதிகாரப்பூர்வமான அரசியல் லாபி செய்யும் சர்வதேச மையமாக விளங்கும் கனடாவிற்கு இந்த பவன்குமார் ராய் ஐபிஎஸ் தூதரக அதிகாரியாக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தான் தற்போது கனடாவின் குற்றச்சாட்டு பதற்றத்தின் பிண்ணனி.

காரணம் ராஜ்ய தூதரகங்கள் என்பது ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் அந்தந்த நாடுகளின் ஒரு ராஜ்ஜிய பரிபாலனம் மட்டுமல்ல. அது ஒரு தேசத்தின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு என்று பல்வேறு முக்கிய பணிகளையும் மேற்கொள்ளும் ஒரு ரசகிய மையம் என்பது சர்வதேச அரசியலை அறிந்தவர்கள் அனைவரும் அறிவார்கள். தூதரகங்கள் என்றால் விசா கொடுப்பது நிராகரிப்பது உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் பணிகளை மட்டும் தான் செய்யும் என்று நினைத்தால் அவர்கள் இன்னும் சர்வதேச அரசியலை அரிச்சுவடி கூட அறியாதவர்கள் என்று அர்த்தம்.

எதிரி நாடுகளில் இருந்தாலும் இந்த தூதரகங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் பாதுகாப்புகள் நிறைந்த ராஜ்ய பரிபாலன வளாகங்களாக செயல்படும் .அந்த வகையில் இந்த தூதரகங்கள் சாதுர்யமாக செயல்படும் பட்சத்தில் அந்தந்த தேசங்கள் அதன் வெற்றி பலனை அறுவடை செய்யும். அவர்கள் ஏதேனும் ஒரு புள்ளியில் சொதப்பினாலும் சர்வதேச அரங்கில் சம்பந்தப்பட்ட தேசம் பெருத்த பின்னடைவை அவமதிப்பை எதிர்கொள்ள நேரிடும். அந்த வகையில் எல்லா நாடுகளுக்கும் இந்த ராஜ்ய உறவுகளை முன்னெடுக்கும் அதிகாரிகளும் அவர்கள் சார்ந்த பணி வளாகங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதில் எந்த நாடு சமரசம் செய்து கொள்ளாது.

ஆனால் இந்த விஷயங்களில் கூட கடந்த கால ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டியதும் திறமையான அதிகாரிகளை பணி அமர்த்தாமல் விட்டதன் காரணம் தான் சர்வதேச அளவில் பாரதம் பெறும் பின்னடைவை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது .ஆனால் மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு இந்த ராஜ்ஜிய பரிபாலன்களின் முக்கியத்துவம் உணர்ந்து அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததன் பலன் தான் தினமும் வலிய வந்து பாரதத்திற்கு அறிவுரை வழங்கி வந்த நாடுகள் என்று பாரதத்தின் நியாயத்தை புரிந்து கொண்டு பல்வேறு விஷயங்களை அமைதி காப்பதும் சில விஷயங்களில் நேரடியாக ஆதரவு கொடுப்பதுமான மாற்றத்தின் பின்னணி.

அந்த வகையில் பவன் குமார் ராய் என்னும் இந்த ஐபிஎஸ் அதிகாரி உளவுத்துறை பின்னணி கொண்டவராக இருந்த போதிலும் என்னுடைய ராஜ்ஜியம் தூதரகத்தின் பாரத தூதுவராக 2018 முதல் கனடாவில் தங்கி பணிபுரிந்து வருகிறார். கடந்த காலங்களில் காலிஸ்தான் பயங்கரவாதத்தின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக அறிந்திருந்தவர். அவர்களின் சர்வதேச சங்கிலி அவர்களின் தொடர்புகள் பின்னணிகள் வெளிநாடுகளில் அவர்களுக்கு இருக்கும் சர்வதேச அமைப்புகளின் ஆதரவு பின்னணி என்று அனைத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருந்தவர் என்ற வகையில் கனடா நாடு இவர் மீது பெரும் வன்மத்தோடு இருப்பது யூகிக்க முடிகிறது. வெளிநாடுகளில் தூதரக அதிகாரியாக பணி புரிய போய் கொலை குற்றம் சாட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பவன் குமார் ராய் ஐபிஎஸ் தனது கடந்த கால துணிச்சலான உளவு பணிக்காக இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கிறார்.

எந்த ஒரு நாடும் வெளிநாடுகளில் தூதராக நியமிக்கும் நபரை யாரை எந்த நாட்டிற்கு எந்த பதவிக்கு அமர்த்த வேண்டும்? என்பதை சுயமாக முடிவெடுக்கும் . அதில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நாடும் தலையிடவோ கருத்து தெரிவிக்கவும் முடியாது. ஆனால் ஏதேனும் குற்றச்சாட்டுகள் சந்தேகங்கள் எழும் பட்சத்தில் சம்மன் அனுப்பி அழைத்து வைத்து விசாரணை நடத்த முடியும். திருப்தி இல்லாத பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து தங்களது தேசத்தில் நீடிப்பதை விரும்பாத பட்சத்தில் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடியும். வேறு வழியில்லாத நிலையில் இன்று அதைத்தான் கனடா அரசு பவன் குமார் விவகாரத்தில் செய்திருக்கிறது.

பதிலுக்கு உங்களின் தேசத்தின் இறையாண்மைக்கும் உளவுத்துறை பின்னணிக்கும் சற்றும் குறைந்ததல்ல பாரதத்தின் இறையாண்மையும் உளவுத்துறை பின்னணியும் என்று கனடாவிற்கு சொல்லாமல் சொல்லும் விதமாக ஒரு குறிப்பிட்ட கனடா அதிகாரியை அடுத்த சில மணி நேரங்களில் கனடாவிற்கு நாடு கடத்தியதன் மூலம் கனடா அரசுக்கும் உளவுத்துறைக்கும் பாரதம் ஒரு உச்சகட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. காரணம் கடந்த காலங்களில் பெருமளவில் தலை தூக்கிய காலிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகள் வேளாண் திருத்த சட்ட எதிர்ப்பு மசோதா என்ற பெயரில் நடத்தப்பட்ட கலவரம் போராட்டம் மல்யுத்த வீரர்களை முன்வைத்து தொடங்கப்பட்ட பெரும் போராட்ட சதி பஞ்சாப் மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட போது பிரதமர் வாகனம் போராட்டக்காரர்களால் வழிமறிக்கப்பட்டு அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்ட விவகாரம் என்று பல்வேறு விவகாரங்களில் இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளும் அவர்கள் சார்ந்த அமைப்புகளும் பின்னணியில் இருந்ததை ஆதாரப்பூர்வமாக இந்திய உளவுத்துறை கைவசம் வைத்திருக்கிறது . இந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பிற்கு கனடா நாட்டு உளவுத்துறையும் அதன் தற்போதைய ஆட்சியாளர்களும் முழு ஒத்துழைப்பும் நல்லுறவும் இருப்பதன் அதற்குரிய பண பரிமாற்றம் தொடங்கி அத்தனை ஆவணங்களையும் பாரதத்தின் ராஜியம் தன் கைவசம் வைத்திருக்கிறது. ஆனாலும் இத்தனை காலம் மௌனம் காத்த பாரதம் இன்று கனடா வலிய வந்து பகிரங்கமாக குற்றம் சாட்டுவதால் தனது ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது.

அந்த நிலையில் இருந்த பாரதம் இன்று சுயமாக எழுந்து நிற்பதும் ஒரு வலுவான உளவுத்துறை உள்நாட்டு பாதுகாப்பு. எந்த நிலைக்கும் போய் வல்லரசு நாடுகளையும் எதிர்கொள்ள தயாராகும் வலுவான வெளியுறவுத்துறை உங்களின் தேசத்தின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் சரி என்றால் என் தேசத்தின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் நாங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் எங்களுக்கு சரியே என்று முகத்திற்கு நேராக பேசும் தேசத்தின் இறையாண்மை என்று வல்லரசு நாடுகளுக்கும் சவால் விடும் நிலையில் எழுந்து நிற்பது எரிச்சலாக தான் இருக்கும்.

இன்று ஒரு பவன் குமார் ராய் நாடு கடத்தப்பட்டு இருக்கலாம். ஆனால் இன்னும் பல ஆயிரம் பவன் குமார் ராய் கள் உலகம் முழுவதும் இருப்பார்கள். பல ஆயிரம் ஆஜித் தோவல் கள் பாரதம் முழுவதும் இருப்பார்கள். அவர்களில் பலர் தமிழகத்தில் கூட இருக்கலாம். நமது நண்பர்கள் உறவினர்கள் சக அலுவலக ஊழியர்கள் என்று கூட அருகில் இருந்து கண்காணிக்கலாம். தற்போது தமிழகத்தில் ஒன்றியம் பேசிய பலரும் மத்திய அரசு என்று அலறுவதையும் அடுத்த குறி நானாக கூட இருக்கலாம் என்று கதறுவதையும் அதன் பிண்ணணியையும் உணர்ந்தவர்களுக்கு இந்த வலைப்பின்னல் ஆழம் புரியும். அந்த வகையில் தேசத்தின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் இல்லாத இரும்பு கரம் ஒன்று பாரபட்சமின்றி செயல்படுவதை உணர்ந்து பாரதம் நிம்மதியாக உணர்கிறது.

அந்த வகையில் குற்றச்சாட்டு தூதரக எதிர்ப்பு என்று அத்தனையும் கடந்து பாரதம் உலகிற்கு ஒரு பாடம் சொல்கிறது. கடந்த காலங்களில் பாரதத்தின் பொருளாதாரத்தை சுரண்டி பயங்கரவாத செயலை செய்து விட்டு உள்நாட்டில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி வெளிநாடுகளில் போய் சொகுசாக வாழ முடிந்தது. பாரதத்தின் பிரதமர்களை கூட கொன்றுவிட்டு வெளிநாடுகளில் நாயக பிம்பத்தோடு வாழ முடிந்தது. ஆனால் இனி அப்படி இல்லை. பாரதத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் ஊறு விளைவிக்கும் யாரும் உலகின் எந்த மூலையிலும் வாழவே முடியாது என்ற எச்சரிக்கையை பாரதம் விடுக்கிறது.


Share it if you like it