மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு – ஒரு பார்வை
கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு சமீபத்தில் முஸ்லிம்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பின் கீழ் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. அதற்கு பதிலாக முஸ்லிம்களை பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் இணைத்தது. முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டை ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு தலா 2 சதவீதமாக பிரித்து கொடுத்தது.
கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு முஸ்லிம்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உத்தரவை மே 9ம் தேதி வரை அமல்படுத்த தடை விதித்தது.
கர்நாடகத்தில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில் கர்நாடகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக தலைவர்களான மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் மதம் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது என மக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் போன்ற சில கட்சிகள் சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக அரசியலமைப்புக்கு எதிரான செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இட ஒதுக்கீடு தொடர்பாக கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசின் எடுத்துள்ள முடிவு வரும் தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில் நம் நாட்டில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு சரியா, தவறா என்ற விவாதங்கள் அதிகளவில் எழுந்துள்ளன.
பாரதத்தில் இடஒதுக்கீடு என்பது சமூகத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு நியாயமான மற்றும் சம வாய்ப்புகளை வழங்க உருவாக்கப்பட்டது.
நமது நாட்டில் இருக்கும் இடஒதுக்கீடு முறையானது சமூகத்தின் சிறுபான்மை பிரிவினருக்கு அதாவது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சலுகைகளை வழங்குகிறது. இவை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வழங்கப்படுகிறது.
நமது அரசியலமைப்பு சட்டம் 15(1) பொறுத்த வரையில், அரசு மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடுக்கிறது. உச்சநீதிமன்றம் சில வழக்குகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதித்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உறுதியாக தெரிவித்துள்ளது.
மத அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவது சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். அது நாட்டு மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும். கல்வி, நிதி நிலை, வேலை வாய்ப்புகள், பிற மதங்கள் போன்ற வாழ்க்கையின் மற்ற அம்சங்களைப் பொருட்படுத்தாமல் ஒரு குறிப்பிட்ட மதம் அனுகூலத்தைப் பெறுவதைப் பார்க்கும்போது, மற்ற மதங்கள் ஆபத்தில் இருப்பதாக உணரும். இது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும்.
காங்கிரஸ் போன்ற சில கட்சியினர் அரசியல் லாபத்திற்காக நாட்டில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை ஆதரித்தாலும் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் நம் மக்களிடையே மத அடிப்படையிலான பாகுபாட்டை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை என்பதால், அது அரசியலமைப்புக்கு முரணாக நிற்கும்.
எந்த நாட்டிலும் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் மூலம் வரும் மிகப்பெரிய பிரச்சனை மத மாற்றம். இது சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்கும்.
மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறிப்பிட்ட சில மதத்தினரை தாழ்வாக உணர வைத்து பிற மதங்களுக்கு மாறுவதை ஒரே தீர்வாக மாற்றும் சூழல் ஏற்படும். இது சமுதாயத்தில் நிலையற்றத்தன்மையை உருவாக்கும்.
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய மற்றொரு பிரச்சனை என்னவென்றால், அது நிதி அல்லது கல்வி அல்லது வேலைவாய்ப்பு நிலையை கருத்தில் கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சலுகைகள் மற்றும் இட ஒதுக்கீடுகளை வழங்கும்.
இதனால் உண்மையில் யாருக்கு உதவி தேவை அல்லது தேவையில்லை என்பதில் கவனம் செலுத்தப்படாமல் எந்த மதத்தினர் என்பதில் கவனம் செல்லும். அது அநீதியான பக்கச்சார்பான நிலையை உருவாக்கும். உதாரணமாக, எல்லா மதங்களிலும் வறுமை உள்ளது, வறுமைக்கு மதம் தெரியாது. எனவே, வறுமையை மட்டும் காரணம் காட்டி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அநீதியாகும்.
ஒருவேளை எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பின் தங்கியிருப்பது அரசாங்கத்துக்கு உறுதியாக தெரியவந்தால் அப்போது அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்க மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு பற்றி ஆலோசிக்கலாம். இதனால் சமூகத்தில் தாழ்வு மனப்பான்மையை உணரும் எந்த மதமும், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் பலனடையும்.
அந்த சூழ்நிலையிலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு சமூகத்தில் எதிர்ப்புகள் எழும். ஆனால் அது ஒரு சமூகத்தை மேம்படுத்தும் என்றால் அதை அமல்படுத்தலாம்.
அதேசமயம் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒரு தனிப்பட்ட பிரிவினரின் சுயநலத்துக்காக பயன்படுத்தப்பட்டால் அதை கடுமையாக எதிர்ப்பதில் தவறில்லை. இந்த விவகாரத்தில் நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி நடப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.