குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து போராடிய ரோஜாப்பூத் துரை | Freedom75 | சுதந்திரம்75

குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து போராடிய ரோஜாப்பூத் துரை | Freedom75 | சுதந்திரம்75

Share it if you like it

ரோஜாப்பூத் துரை என அழைக்கப்பட்டஜார்ஜ் ஜோசப்

(5 சூன் 1887 – 5 மார்ச்  1938)

         ஜார்ஜ் ஜோசப் தமிழகத்தை மையமாகக் கொண்டு போராடிய    கேரளாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்; வழக்குரைஞர்; 1937-ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்; இதழாசிரியர்; காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் முன்னின்றவர். கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில், தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கிறித்துவர்.

        ஆங்கில அரசு குற்றப் பரம்பரைச் சட்டத்தை செயல் படுத்திய போது, அது தொடர்பாக பலரின் வழக்கைத் தானே முன் வந்து நடத்தி, வெற்றி கண்டவர். கேரளாவில் பிறந்தாலும், தமிழகத்தை மையமாகக் கொண்டு, தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப் படுத்திக் கொண்டவர்.

        1887ம் ஆண்டு, கேரளாவின் திருவிதாங்கூர் பகுதியின் செங்கானூரில் சிரியன் மரபு வழிக் கிறித்தவப் பிரிவில் (ஆர்த்தோடக்ஸ்) பிறந்தவர். பின்னர் கத்தோலிக்க கிறிஸ்தவ சபைக்கு மாறினார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்னர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கேரளத்திற்கு திரும்பிய போது, ஆங்கிலேய அரசாங்கம் பல உயர் பதவிகளைத் தர இருந்த நிலையில், தந்தையாரின் வற்புறுத்தலையும் மீறி, அந்தப் பதவிகளை ஏற்க மறுத்தார். அவரின் திருமணமும் ஆங்கில அரசில் உயர் பதவி வகித்த குடும்பத்தில் நடந்தேறியது. அப்போதும் அவர் ஆங்கிலேயர் தந்த பதவிகளை ஏற்க மறுத்தார்.

       கிறிஸ்தவராகப் பிறந்தாலும், காந்தியின் எதிர்ப்பையும் மீறி, வைக்கம் போராட்டத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவர். மதுரையில் நடைபெற்ற பல வழக்குகளின் போது, குறுக்கு விசாரணைகளில் சிறந்து விளங்கினார்.

வழக்குரைஞர் பணி   :

      1918களில் மதுரைப் பகுதிகளில், ஆங்கிலேயர் குறி வைத்து, குற்றப் பரம்பரைச் சட்டத்தைச் செயல்படுத்தி, மக்களை கொடுமைப் படுத்தி வந்தனர். வழக்கின் கொடுமைகளைச் சம்பந்தப் பட்டவர்களே சரிவர உணர முடியாத காலத்தில், ஜார்ஜ் ஜோசப் எதிர்ப்பு தெரிவித்து, பலரின் வழக்கைத் தானே முன் வந்து நடத்தி, வெற்றிக் கண்டார்.

    எப்போதும் தனது சட்டையில் ரோஜாப்பூவை ஜார்ஜ் இடம் பெறச் செய்திருந்த நிலையில், மக்கள் அவரை “ரோஜாப்பூத் துரை” என்று செல்லமாக அழைத்து வந்துள்ளனர்.

     தொழிலாளர்களின் பிரச்சினைகளில், மிகவும் அக்கறை காட்டினார். 1918 ஆம் ஆண்டில், சிதறிக் கிடந்த தொழிலார்களை ஒன்று திரட்டி, அவர்களுக்காகத் தொழிற்சங்கம் ஏற்படுத்தினார். 1919 ஆம் வருடத்தில், இராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டுக்கு, வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருந்து, ஜார்ஜ் ஜோசப் செயல் பட்டார். தொழிலாளர்களின் மீது, அதிக அக்கறை கொண்டதால், மதுரை தொழிலாளர் சங்கத்தின் மூலம் கூலி உயர்வு, வேலை நேரக் குறைப்பு ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டதுடன், பல வழக்கினையும் நடத்தியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போடப் பட்ட பொய் வழக்கினை எதிர்த்து வாதாடி வெற்றி பெற்றார். அந்நாளில், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையைக் காண அதிகளவில் தொழிலாளர்கள் கூடிய நிலையில், காவலர்கள் கூட்டத்தைக் கலைப்பதாகக் கூறி, 2 தொழிலாளர்களைத் துப்பாக்கி சூட்டின் மூலம் கொன்றனர்.

விடுதலைப் போரில் பங்கு:

    இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, , ஜார்ஜ் ஜோசப், 1917ல் போராட்டத்தில் ஈடுபட்டவர். அந்தக் காலத்தில் அரசியல் போராட்டங்கள் வலிமையடையாமலும், தீவிரமான அரசியல் இயக்கங்கள் நேரடியாகச் சுதந்திரம் பெற போதுமான அளவில் நடவடிக்கைகள் எடுக்காத காலகட்டத்தில், இந்தியர்களின் பிரச்சினைகளை இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக, இந்திய தலைவர்களைக் கொண்ட குழுவொன்று, இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டது. அந்தக் குழுவில் இடம் பெற்ற மூன்று உறுப்பினர்கள் – சேலம் பி.வி.நரசிம்மையர், மாஞ்சேரி ராமையா, மதுரை ஜார்ஜ் ஜோசப் ஆகியோராவர்.

     இவர்கள் இங்கிலாந்துக்குப் பயணம் புறப்பட்டுக் கப்பலில் சென்றனர். ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் இவர்களது வரவை விரும்பவில்லை, தடை செய்தது. ஜிப்ரால்டர் வரை கப்பல் போய்ச் சேர்ந்த போதும், இங்கிலாந்துக்குச் செல்ல முடியாமல், இவர்கள் இந்தியா திரும்ப நேர்ந்தது.

  மகாத்மா காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கம்,  ஜார்ஜ் ஜோசப்பை பெரிதும் கவர்ந்தது. அதில் முழுவதுமாக ஈடுபடலானார். ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதற்காக, பெரும் வருவாய் ஈட்டித் தந்து கொண்டிருந்த, தனது வழக்குரைஞர் தொழிலை உதறித் தள்ளினார்.

      மகாத்மா அறிவித்த எல்லா போராட்டங்களிலும் ஜார்ஜ் ஜோசப் தான் முன்னணியில் இருந்தார். கேரளம், தமிழ்நாடு என இரு மாநிலங்களின் போராட்டக் களத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திய நிலையில் தான், காந்தியின் நட்பும், தோழமையும் ஜார்ஜ் ஜோசப்புக்குக் கிட்டியது.

      1919 ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற ரௌலட் சட்ட எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில், தமிழில் வ. உ. சி யும், தெலுங்கில் ஹரிலோத்தமராவும் பேச, ஆங்கிலத்தில் ஜார்ஜ் ஜோசப் பேசினார். 1920 களில் கிலாபத் இயக்கத்தில் இந்தியா முழுதும் சிறுபான்மைத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பணியைச் செய்து, மிகப்பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டினார்.

இதழாசிரியர் பணி:

     ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு அலகாபாத் நகரத்திலிருந்து “தி இண்டிபென்டன்ட்” எனும் பெயரில், ஒரு இதழ் நடத்தினார். அதற்கு ஜார்ஜ் ஜோசப், சில காலம் ஆசிரியராக இருந்தார்.அப்போது அந்தப் பத்திரிகையில் வெளியான கட்டுரைகளுக்காக, இவரிடம் மன்னிப்புக் கேட்குமாறு கூறப்பட்டது. தான் எழுதிய கட்டுரைக்காக, மன்னிப்பு கேட்க மறுத்ததால், அலகாபாத்தில் கைது செய்யப் பட்டு, 18 மாதம் சிறை தண்டனையை அனுபவித்தார். இவரது சிறை தண்டனை, ‘நைனிடால்’ எனும் இடத்தில் கழிந்தது. சிறையில் இவருடன் இருந்த முக்கியமான தலைவர்களில், ஜவஹர்லால் நேருவும் ஒருவர்.

       சிறையிலிருந்து விடுதலையான பின்பு, மகாத்மா காந்தி நடத்தி வந்த “யங் இந்தியா” எனும் பத்திரிகைக்கு ஆசிரியரானார். அந்தப் பத்திரிகை வாயிலாக, இவர் எழுதிய கட்டுரைகளின் மூலம், பல தேச பக்தர்களை உருவாக்கினார். உலகத் தலைவர்கள் பலருடன், கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அவர்களில் ராம்சே மக்டனால்டு, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆகியோரும் அடங்குவர்.

      மேலும் தி சவுத் இந்தியன் மெயில், சத்தியார் கிரதி என்ற கையெழுத்து இதழ் , தேசபக்தன் போன்ற பல சுதந்திர போராட்ட கால இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் இருந்தார்.

     1938-ஆம் ஆண்டு மார்ச் 5 ம் தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனையில் காலமானார்.

    மதுரை புது நல்லமுத்துப் பிள்ளை ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு, மக்களால் அஞ்சலி செலுத்தப் பட்டு வருகிறது. கக்கன் உள்துறை அமைச்சராக இருந்த போது ரோஜாப்பூ துரைக்கு, மார்பளவு சிலையை யானைக்கல் பகுதியில் அமைத்துப் பெருமைப் படுத்தி உள்ளார்.


Share it if you like it