பட்டையை கிளப்பும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்!

பட்டையை கிளப்பும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்!

Share it if you like it

நாடு முழுவதும் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம், வசூலில் வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.

தெலுங்கு திரைப்பட உலகின் புகழ்பெற்ற இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் பிரமாண்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இவரது இயக்கத்தில் கடந்த 25-ம் தேதி வெளியாகி இருக்கும் படம்தான் ஆர்.ஆர்.ஆர். (RRR). அதாவது, ரத்தம் ரணம் ரௌத்திரம் இதன் சுருக்கம்தான் படத்தின் தலைப்பு. தெலுங்கு திரையுலகின் பிரபல கதாநாயகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர்தான் படத்தின் ஹீரோக்கள். ஆலியா பட், ஒலிவியா மோரீஸ், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கான், ரே ஸ்டீவன்சன் என நட்சத்திரப் பட்டாளங்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் இப்படம் தாயாராகி இருக்கிறது.

1920-ம் ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய தெலுங்கு தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மல்லி என்கிற சிறுமி ஒரு பாடல் பாடுகிறார். அச்சிறுமியின் குரல் ஆங்கிலேயர்களுக்கு பிடித்துப்போகவே, பணத்தை அள்ளி எறிந்து விட்டு அச்சிறுமியை கடத்திச் செல்கிறார்கள். அந்த சிறுமியை காப்பாற்றும் கேரக்டரில்தான் ஜூனியர் என்.டி.ஆர். நடித்திருக்கிறார். அதேசமயம், சிறுமியை காப்பாற்ற வரும் காப்பானை கைது செய்வதற்காக ஆங்கிலேய ஆட்சியாளர்களால் ஏவிவிடப்பட்ட போலீஸ் அதிகாரிதான் ராம்சரண். அதாவது, ராம்சரண் ஒரு பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி. இது தெரியாமல் இருவரும் நட்புடன் பழகுகின்றனர்.

ஆனால், ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர, இருவரும் பயங்கரமாக மோதிக்கொள்கிறார்கள். ராம்சரண் நெருப்புடன் வந்து சண்டை போடுவதும், பதிலுக்கு ஜூனியர் என்.டி.ஆர். தீயணைப்பு வாகனத்தின் தண்ணீர் பைப்புடன் வந்து சண்டை போடுவதும் இந்திய சினிமாவில் புதுசு. தெலுங்கு தேசத்தின் அதிலபாத் மாவட்டத்தில்தான் இந்த கதை நடக்கிறது. முதல் காட்சியிலேயே மிருகங்களுடன் மோதி மாஸ் காட்டுகிறார் ஜூனியர் என்.டி.ஆர். ஒரு கட்டத்தில் ஜூனியர் என்.டி.ஆரை கைது செய்து அவரது தோல் பிய்யும் அளவுக்கு சவுக்கடி கொடுத்து மன்னிப்புக் கேள் விட்டு விடுவார்கள் என்று ராம்சரண் கூறுகிறார். அதை மறுத்துவிட்டு, ஜூனியர் என்.டி.ஆர். பாடும் பாடல் சுதந்திர தாகத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஆனால், க்ளைமாக்ஸில் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து ஆங்கிலேயர்களை எப்படியெல்லாம் துவம்சம் செய்கிறார்கள் என்பதுதான் கதை.

இப்படத்தில் ஆங்கிலேய போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ராம்சரண், க்ளைமேக்ஸ் காட்சியில் பகவான் ராமனைப் போல வேடமிட்டு, ராமன பிரானைப்போலவே வில்லில் வித்தை காட்டி எதிரிகளை சிதறடிக்கிறார். அல்லுத் தெறிக்கும் இந்த காட்சியைப் பார்த்துவிட்டு புல்லரித்துப்போன தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ராம்சரண் ரசிகர்கள், ராமபிரானைப் போலவே காவி உடை தரித்து ஆர்.ஆர்.ஆர். படம் திரையிடப்பட்டிருக்கும் தியேட்டருக்கு வந்து, அனைவரும் அல்லு தெறிக்க விட்டனர். இது மட்டுமா காட்சிக்கு காட்சி, பிரமாண்டம்தான். பாகுபலியை விட பிரமாண்டமாக ஒரு படம் எடுக்க முடியுமா? என்கிற கேள்வி நிலவி வந்த நிலையில், என்னால் முடியும் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்தப் படம்தான் இந்திய திரைப்படத்துறை வரலாற்றில் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை ‘பாகுபலி 2’ படம்தான் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. இதை ஓவர் டேக் செய்திருக்கிறது ஆர்.ஆர்.ஆர். திரைப்படம். ஒரே நாளில் 257 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதாாம்.


Share it if you like it