தேசியத்தின் பக்கம் – தமிழ் சினிமாத் துறை!

தேசியத்தின் பக்கம் – தமிழ் சினிமாத் துறை!

Share it if you like it

தேசியத்தின் பக்கம்தமிழ் சினிமாத் துறை!

மிகவும் முக்கியமான கலைகளில் ஒன்று கலைத் துறை. ஆரம்பக் காலங்களில், நாடகத்தின் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் மக்களை மகிழ்வித்தார்கள்.

காலப் போக்கில் நாடகம், சினிமா என உருமாறி, பின்னர் தொலைக் காட்சி, கைப்பேசி என அனைவரும் விரும்பும் வகையில், படக் காட்சிகளை ஒளிபரப்பி, மக்களை மகிழ்வித்து வருகிறது.

சுதந்திரப் போராட்டக் காலங்களில், மேடை நாடகங்கள் மூலமாகவும், சினிமா படக் காட்சிகள் மூலமாகவும், பொது மக்களுக்கு சுதந்திரத் தாகத்தை ஏற்படுத்தினர்.

சங்கரதாஸ் சுவாமிகள், கே.பி. சுந்தராம்பாள், டி.கே. பட்டம்மாள் போன்ற பலரும், மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்துவதில், முக்கியப் பங்கு வகித்தார்கள் என்றால், அது மிகையல்ல.

பக்திப் படங்கள்:

1940 ஆம் ஆண்டு முதல், தமிழ் சினிமா வேகமாக வளர்ந்தது. 1940 ஆம் ஆண்டுகளில், மாயாஜாலக் கதைகளைக் கொண்ட படங்கள் அதிகம் வெளி வந்தன.

1950 ஆம் ஆண்டுகளில், திராவிடக் கருத்துக்களின் தாக்கம், தமிழ் சினிமாவில் அதிகமாக இருந்தன. நாத்திகக் கருத்துக்களை உள்ளடக்கிய சினிமாவை, அதிகம் காண முடிந்தது. இந்து தெய்வங்களை குறி வைத்து தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றது, இந்து மக்களிடையே மிகுந்த மனத் துயரத்தை ஏற்படுத்தியது.

இது போன்ற நிலையை மாற்ற, நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அதன் மூலம் ஏற்பட்ட விளைவுகளால், நிறைய பக்தி படங்கள் எடுக்கப் பட்டன. “திருவிளையாடல்”, “கந்தன் கருணை”, “திருவருட் செல்வர்”, “அகத்தியர்”, “திருமலை தெய்வம்”, “சரஸ்வதி சபதம்” போன்ற படங்கள், மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன், காலம் கடந்தும் நிற்கிறது. அந்த திரைப்படங்கள், இன்றும் பல ஊர் திருவிழாக்களிலும், இதர நிகழ்ச்சிகளிலும் ஒலி-ஒளிபரப்பு செய்யப் பட்டு, மக்களை மகிழ்வித்து வருகின்றது.

அது போன்ற பக்திப் படங்கள், காலம் கடந்தும் வரவேற்புப் பெறுவதுடன், இன்றைய தலைமுறையினரிடமும், வரவேற்புப் பெற்று, அவர்களை தெய்வீகத் தன்மையை நோக்கி, நகர்த்தி வருகின்றது.

தேசபக்திப் படங்கள்:

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் எடுக்கப் பட்ட திரைப் படங்களான, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பலோட்டிய தமிழன்”, “ராஜராஜ சோழன்” போன்ற படங்கள் மக்களிடையே பெரும் ஆதரவு பெற்றதுடன், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நம் கண்முன்னே நிறுத்தியது.

இடைப்பட்ட காலங்களில், சமூக படங்களுடன், பக்திப் படங்களும் நிறைய வெளி வந்தன. இந்து மத நம்பிக்கைகளை போற்றும் வகையில், பிரபல தயாரிப்பாளர்களான ஏ.வி.எம். நிறுவனம், சாண்டோ சின்னப்பா தேவர், இயக்குனர் ஏ.பி. நாகராஜன் போன்றோர் நிறைய படங்களை எடுத்தனர்.

சில நேரங்களில், இந்து மதத்தை விமர்சிக்கும் வகையிலான படங்களும், நாத்திகக் கருத்துகளை உள்ளடக்கிய படங்களும்,  வெளியாகின. எனினும், இந்து மதத்தை போற்றும் படங்களுக்கே, மக்கள் மத்தியில், அதிக வரவேற்பு இருந்தது.

இயக்குனர் மணிரத்னத்தின் படங்கள்:

“ரோஜா”, “பம்பாய்” என தேச ஒற்றுமை உணர்வை சிறப்பிக்கும் வகையில், இயக்குனர் மணிரத்னம், தனது படங்களில் அழகாக காட்டி இருப்பார்.

“ரோஜா” படத்தில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இளம் விஞ்ஞானி கதையுடன், தீவிரவாதிகளின் கோர முகத்தை, மக்கள் கண்முன்னே நிறுத்தி இருப்பார்.

“பம்பாய்” படத்தில், இந்தியர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, எடுத்து இருப்பார்.

“கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில், ஈழத் தமிழர்களின் இன்னல்களை விவரித்து இருப்பார்.

“உயிரே” திரைப்படத்தில், தீவிரவாதிகளின் கோரத் தாண்டவத்தை தோல் உரித்து இருப்பார்.

காஷ்மீர் பைல்ஸ் ஏற்படுத்திய தாக்கம்:

2022 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 11 ஆம் தேதி வெளிவந்த, “காஷ்மீர் பைல்ஸ்” என்ற திரைப்படம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

1990 ஆம் ஆண்டு கால கட்டத்தில், இந்து பண்டிதர்கள், அடித்துத் துன்புறுத்தப் பட்டனர், துரத்தப் பட்டனர், பலர் கொல்லப் பட்டனர்.

பல ஆண்டுகளாகவே, அந்த உண்மை சம்பவங்கள், வெளியே வராமல் இருந்தன. அந்த திரைப்படத்தின் மூலமாக, உலகம் முழுவதும், காஷ்மீர் பண்டிதர்கள் அனுபவித்த இன்னல்கள், மக்கள் மத்தியில் தெரிய வந்தன.

“மதம் மாறு”, வெளியேறு” அல்லது “செத்துப் போ” என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு, இந்துப் பண்டிதர்கள் பல ஆயிரம் பேர், அங்கு வேட்டையாடப் பட்டனர்.

பிரபலமான பல்கலைக்கழகங்களில், மாணவர்கள் எவ்வாறு, மனம் மாற்றப் பட்டு, தேச நலனுக்கு எதிராக, செயல்பட தூண்டப் படுகிறார்கள் என்பதனையும், அந்த படத்தின் காட்சிகள் விவரித்தன.

இந்திய ராணுவத்தினரின் உடை அணிந்துக் கொண்டு, தீவிரவாதிகளால் அப்பாவி எளிய மக்கள் துன்புறுத்தப் பட்டனர். அதன் மூலமாக, காஷ்மீர் மக்களுக்கு இந்திய ராணுவத்தின் மீது, அதிக வெறுப்பு ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்நியர்கள், இந்தியத் திருநாட்டை ஆக்கிரமிக்க துடித்தது போன்ற காட்சிகள், அந்தப் படத்தில் இடம் பெற்று உள்ளது. இவை அனைத்துமே வரலாற்றில் நடந்த உண்மை சம்பவம்.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்த இந்து பண்டிதர்களுக்காக, படத்தை கண்ட அனைவரும் கண்ணீர் சிந்தினர். தங்களது சக மாநிலத்தவர் துரத்தப் பட்ட போது, நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே? என்பதனை நினைத்து, தமிழக மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகினர்.

படம் முடிந்த பின்னரும், தங்களது இருக்கையில் இருந்து வெளியேறாமல், கண்ணீர் சிந்தியபடியே, அழுது கொண்டு இருந்தனர், தமிழக மக்கள்.

இந்தப் படம், ஹிந்தியில் வெளிவந்து இருந்தாலும், படத்தைக் கண்டவர்கள், காஷ்மீர் பண்டிதர்களின் நிலையை உணர்ந்து, மனம் வருந்தினர்.

ஆர்.ஆர்.ஆர்.:

மார்ச் மாதம் 25 ஆம் தேதி, 2022 அன்று பல மொழிகளில் வெளியான “ஆர்.ஆர்.ஆர்” என்ற திரைப்படம்,  இந்திய மக்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

நமது நாட்டில் போற்றப் படும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை பாடலில் வைத்து இருந்ததுடன், அவர்களது பெயரை உச்சரித்து, பெருமைப் படுத்தியது மட்டுமல்லாமல், ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை தோலுரித்துக் காட்டியது.

முக்கிய கதாபாத்திரங்களின் பெயர் “ராம்”, “பீம்”, “சீதை”. பல காட்சிகளில் “காவிக் கொடி” பட்டொளி வீசிப் பறந்தன.

இந்து – முஸ்லீம் மக்கள், எந்த அளவிற்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர் என்பதையும், அந்த படத்தில், காட்சிகளாக விவரிக்கப் பட்டு உள்ளன.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய, நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை, அந்தப் படம் எடுத்துக் கூறியது.

ராமர் வேடமிட்ட கதாநாயகன், இறைவனின் திருநாமத்தை உச்சரித்து, இறைவன் வைத்து இருக்கும் வில் – அம்பை பயன்படுத்தி, எதிரிகளை வேட்டையாடுவதைப் போல காட்சிகள் வைத்ததன் மூலம், நமது நாட்டின் பாரம்பரிய கலாச்சாரங்கள், தற்காலத்தில் வாழும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப் பட்டன.

இயக்குனர் ராஜமவுலி, இதற்கு முன்னர் எடுத்த பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும், இந்து மதக் கடவுளான சிவலிங்கத்தை போற்றிப் புகழ்ந்து பாடும் பாடல்களும், காட்சிகளும் நிறைய இடம் பெற்று இருந்தன.

அந்தப் படமும் மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றதுடன், வசூலில் பலவிதமான சாதனைகளை நிகழ்த்தியது.

இந்து மத அடையாளங்களை திரைப்படங்களில் காட்டுவது, அண்மைக் காலங்களாகவே குறைந்து வருகின்றன. அதற்கு பலவிதமான காரணங்கள் கூறப் பட்டாலும், மக்கள் மத்தியில் எப்போதும் பக்தி, தேச பற்று நிகழ்வுகளுக்கு பெரிய வரவேற்பு இருந்துக் கொண்டே வருகின்றது.

இந்தியா என்றாலே ராமாயணமும், மகாபாரதமுமே அதன் அடையாளங்கள் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

அவ்வாறு இருக்கையில், அந்த இரண்டு இதிகாசங்களை மையமாக வைத்து, பல்வேறு திரைப்படங்கள் நமது நாட்டில் வெளிவந்து இருந்தாலும், மற்றுமொரு புதிய படம் ராமாயணத்தையோ அல்லது மகாபாரதத்தையோ தழுவி எடுக்கப் பட்டு வெளி வந்தாலும், மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

1980 மற்றும் 1990 கால கட்டத்தில், ராமாயணம், மகாபாரதம் பெருந் தொடரை, இந்தியத் தொலைக்காட்சிகளில் அனைவரும் கண்டு களித்தனர். ஹிந்தியில் ஒளிபரப்பிய போதும், எல்லாத் தமிழர்களும் தங்களது வீட்டு தொலைக்காட்சியில், அதனைப் பார்த்தனர் என்பது, வரலாற்றில் நடந்த உண்மை சம்பவம்.

தமிழர்கள் என்றென்றும் தேசியத்தின் பக்கம் என்பது, பல காலக்கட்டங்களிலும் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் நிரூபிக்கப்பட்டு உள்ளன. அழகு தமிழ் மொழியிலும், அது போன்ற பக்தி உணர்வுடன் கூடிய படங்களோ, தேச பக்தி உணர்வு ஊட்டக்கூடிய படங்களோ வெளிவர வேண்டும் என்பதே  நமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது…

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it