ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தடை விதிப்பது எங்களது நோக்கமல்ல: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தடை விதிப்பது எங்களது நோக்கமல்ல: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தடை விதிப்பது எங்களது நோக்கமல்ல. அதேசமயம், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்றுதான் கோருகிறோம் என்று தமிழக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் கடந்தாண்டு விஜயதசமி தினத்தன்று தமிழகம் முழுவதும் அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்குமாறு போலீஸுக்கு உத்தரவிட்டது. எனினும், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களுக்கு மட்டும் அனுமதியளித்த போலீஸ், மீதி 47 இடங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, 3 இடங்களில் மட்டும் அணிவகுப்பை நடத்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மீதி இடங்களுக்கு அனுமதி மறுத்த போலீஸ் மீது கோர்ட் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள் அரங்கில் ஊர்வலத்தை நடத்திக்கொள்ள அனுமதி அளித்தது. ஆனால், தனி நீதிபதியின் இத்தீர்ப்பை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, அணிவகுப்பு நடத்தவும் அனுமதி அளிக்கும்படி போலீஸுக்கு உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல் முகுல் ரோத்தகி, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. அதேசமயம், நிபந்தனையுடன் அணிவகுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Share it if you like it