மும்பையில் நடைபெற்ற ஞானி ரவிதாஸ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத். சந்த் ரவிதாஸ் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆர்.எஸ்.எஸ். தலைவரின் 15 நிமிடங்கள் கொண்ட உரையில், குறிப்பிட்ட 30 வினாடிகள் மட்டும், சில ஊடகங்கள் எடுத்து வெளியிட்டுள்ளன.
சந்த் ரவிதாஸ் தெரிவித்த கருத்து ஒன்றை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மேற்கோள் காட்டினார், ஆனால் அதை ஸ்ரீ மோகன் பாகவத் அவர்களின் சொந்த கருத்து என்று ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன. சந்த் ரவிதாசும் கூட சாஸ்திரங்கள் தவறில்லை , சில அறிஞர்களின் (பண்டிதர்கள்) புரிதல் தவறு என்று தான் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ மோகன் பாகவத் எந்த இடத்திலும் , எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றியும் தவறாக குறிப்பிடவில்லை.
அவரது உரை மராத்தியில் இருந்தது. பிரபல News Agency ஒன்று அதை தவறாக மொழி பெயர்த்து விட்டது. மற்ற ஊடகங்கள் அதை அப்படியே எழுதி விட்டன. முதலில் மொழிபெயர்த்த News Agency, தனது தவறை உணர்ந்து, பழைய கட்டுரையை நீக்கி, சரியான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியதன் தமிழாக்கம் பின் வருமாறு ஞானி ரவிதாஸின் சமுதாய மக்களே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவரது சொந்த குடும்பம் கூட அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் உண்மையை நோக்கிய பயணத்தில் இருந்து ரவிதாஸ் பின்வாங்கவில்லை.
மற்றவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு பதில், அதை நேரடியாக உணர்ந்து தெரிந்துக் கொள்ள எண்ணினார் . அவருக்கு சுவாமி ராமானந்தரின் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் ஞானம் பெற்றார். இறைவன் என்பது உண்மை என அவருக்கு புரிந்தது . இறைவன் எங்கும் வியாபித்து இருக்கிறான். பெயர், உருவங்கள் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். நாம் அனைவரும் ஒன்று. நமக்குள் ஏற்ற – தாழ்வு என்பதே கிடையாது, அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்.
சாஸ்திரத்தை மேற்கோள் காட்டி சில அறிஞர்கள் ஏற்ற – தாழ்வு பாராட்டுகிறார்கள், அது தவறு, சாஸ்திரத்தை அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று ரவிதாஸ் கூறினார். மேல் சாதி , கீழ் சாதி என்ற மாயையில் நாம் சிக்கியுள்ளோம். இதில் இருந்து விடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நமது பாரம்பரியம், வேதங்கள் எந்த வேறுபாட்டையும் போதிக்கவில்லை. இது பற்றி சமுதாயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். உண்மை, தர்மம் மற்றும் கடமை இவற்றை விடக்கூடாது என்று மட்டுமே நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன