ரஷ்ய அதிபர் புடினின் நம்பிக்கைக்குரிய ஆலோசகருக்கு வைத்த குறியில், அவரது மகள் பலியாகி இருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மூளையாக செயல்பட்டு வருபவர் அலெக்சாண்டர் டுகின். போர் தந்திரங்கள், அரசியல் ஆலோசனைகள் உட்பட அனைத்து விஷயங்களிலுமே புடினுக்கு ஆலோசனை வழங்குபவர் இவர்தான் என்கிறார்கள். தற்போது ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நடக்கும் போர், ஏற்கெனவே நடந்த கிரீமியா போர் ஆகியவை அலெக்சாண்டரின் மூளையில் உதித்த யோசனைகள்தானாம். இவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே கேட்டு செய்வாராம் புடின். அந்தளவுக்கு அரசியல் ஞானம் மற்றும் போர் உத்திகளை தெரிந்து வைத்திருப்பவர் இவர் என்கிறார்கள். இதனால், எப்படியாவது அலெக்ஸாண்டரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்பது எதிரிகளின் எண்ணம்.
இந்த நிலையில்தான், அலெக்சாண்டரும், அவரது மகள் டரியா டுகினும், மாஸ்கோவின் புறநகர் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் சென்றிருக்கிறார்கள். பின்னர், நிகழ்ச்சி முடிந்து இருவரும் ஒரே காரில் புறப்படத் தயாராகி இருக்கிறார்கள். அப்போது, திடீரென அலெக்ஸாண்டர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, வேறு காரில் ஏறி இருக்கிறார். இதனால். டரியா டுகின் மட்டும் தனது காரில் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். ஆனால், கார் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், கார் தீப்பிடித்து எரிந்ததில், டரியா டுகின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஷ்யாவில் செயல்படும் சில பயங்கரவாத அமைப்புகள்தான், அலெக்சாண்டரை தீர்த்துக்கட்ட காரில் குண்டு வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்பாவுக்கு வைத்த குறியில், மகள் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.