தனக்கு இளம் வயதில் கிடைத்த சுதந்திரமான சூழலை தனது மகனுக்கும் உருவாக்க முயற்சி செய்து வருவதாக சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
‘சின்ட்டிலேட்டிங் சச்சின்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசினார் :
இளம் வயதில் எனது குடும்பத்தினரிடமிருந்து எனக்கு ஆதரவு கிடைத்தது. அஜித் டெண்டுல்கர் (சகோதரர்) என் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகித்தார். நிதின் டெண்டுல்கர் (சகோதரர்) எனது பிறந்தநாளில் எனக்காக ஓவியம் வரைந்து கொடுப்பார். எனது தாயார் எல்ஐசியில் பணிபுரிந்து கொண்டிருந்தார், அப்பா பேராசிரியராக இருந்தார். அவர்கள் எனக்கு சுதந்திரத்தை வழங்கினர். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கும் சுதந்திரமாக செயல்பட விடவேண்டும் என்று என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு கிடைத்த அந்த சுதந்திரமான சூழலை என் மகனுக்காகவும் உருவாக்க முயற்சிக்கிறேன். நம்மை நாம் பாராட்டினால்தான் மக்களும் நம்மை பாராட்டுவார்கள். விளையாட்டில்தான் கவனம் இருக்க வேண்டும் என்று என் அப்பா என்னிடம் சொன்ன அறிவுரையை இப்போது நான் அர்ஜுனிடம் சொல்கிறேன்.