சேலம் அர்த்தநாரீச வர்மா
சேலத்தில் சுகவனேசுவரர்- லட்சுமி ஆகியோரின் மகனாக 27.7.1874ல் பிறந்தவர். திருச்செங்கோட்டில் உறையும் அர்த்தநாரீசுவரரின் அருளால் பிறந்ததால், அர்த்தநாரீசுவரர் என்றே பெயரிட்டனர்.
வாழ்க்கை முழுவதும், ஒரு சுதந்திரப் போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக, சமூகத் தொண்டினையே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த மாபெரும் தியாகி, சேலம் அர்த்தநாரீச வர்மா
மூதறிஞர் ராஜாஜியால் “இராஜரிஷி” எனப் பட்டம் சூட்டப் பட்டவர்.
திரு. வி. கல்யாண சுந்தரனாரால் ‘மகாகவி பாரதியாருக்கு இணையான தேசபக்தி கவிஞர்’ எனப் புகழப் பட்டவர்.
காந்தியைப் பின்பற்றி, தனது வாழ்நாள் முழுவதும், கதராடை அணிவதையே, கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
மது விலக்கிற்காக அயராது போராடியவர். தனது பள்ளித் தோழரான ராஜாஜியை வற்புறுத்தி, இந்தியாவிலேயே முதன் முதலாக, 1937ல் சேலம் ஜில்லாவில் “மது விலக்கு” கொள்கையை செயலாக்கியவர்.
மகாகவி பாரதியார் இறந்த போது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரைப் பற்றி பேச எல்லோரும் பயந்த நிலையில், மகாகவி பாரதிக்காக இரங்கல் கவிதை எழுதி, சுதேசமித்தரனில் வெளியிட்ட ஒரே வீரர்.
1923 ஆம் ஆண்டு, சித்தரஞ்சன் தாஸ் சேலத்துக்கு வந்த போதும், 1934 ஆம் ஆண்டு, காந்தியடிகள் திருவண்ணாமலைக்கு வந்த போதும் வரவேற்புரை உரை நிகழ்த்தினார்.
இந்திய விடுதலைக்காக 1931 ஆம் ஆண்டில், “வீரபாரதி” எனும் பத்திரிகையை நடத்தியவர். ஆங்கிலேயர்கள் சிறப்பு சட்டம் மூலம் தடை செய்த ஒரே தமிழ் பத்திரிகையும் அதுவே.
சத்திரியன், சத்திரிய சிகாமணி, வீரபாரதி, தமிழ் மன்னன் எனப் பல பத்திரிகைகளை நடத்தியவர்.
மதுவிலக்கு, சிந்து உள்ளிட்ட பல நூல்களையும் எழுதி வெளியிட்டவர், அர்த்தநாரீச வர்மா.
“பாடுபட்ட உழைப்பதொரு தேசம் – அந்தப் பலனை புசிப்பதொரு தேசம்” போன்ற கவிதைகள், கட்டுரைகள் மூலம் மக்கள் மனதில் விடுதலை தாகத்தை ஏற்படுத்தினார்.
தமது 90ஆவது வயதில் 7.12.1964இல் திருவண்ணாமலையில் மறைந்தார் அர்த்தநாரீச வர்மா.
அவரின் மறைவுக்கு மூதறிஞர் ராஜாஜி, கல்கி இதழில் புகழஞ்சலி கட்டுரை எழுதினார்.