சேலத்தில் நடந்த தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசிய மாநகர அவைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவுன்சிலர் ஒருவர் குரல் கொடுக்க, அவரை கட்சி நிர்வாகிகள் சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி நிறைவடைந்த நிலையில், முதல்வரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை விமரிசையாகக் கொண்டாடுவது குறித்து, சேலம் மாநகர மற்றும் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் கலைஞர் மாளிகையில் 27-ம் தேதி மாலை நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சேலம் மாநகராட்சி 43-வது வார்டு கவுன்சிலர் குணசேகரன், ‘சேலம் மாநகர தி.மு.க. அவைத் தலைவர் முருகன், குறிப்பிட்ட ஜாதியை இழிவுப்படுத்தி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் மீது இதுவரை கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட கட்சி நிர்வாகிகள், தலைவர் பிறந்த நாள் விழா தொடர்பான கூட்டத்தில் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கவுன்சிலர் குணசேகரன் பேசுவதாக குற்றம்சாட்டி, அவரை சூழ்ந்துகொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாநகர், மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், தி.மு.க. கவுன்சிலர் குணசேகரனை அமைதிப்படுத்தினார். பின்னர், கூட்டம் தொடர்ந்து நடந்தது.
இதுகுறித்து தி.மு.க. கவுன்சிலர் குணசேகரனிடம் கேட்டதற்கு, ‘‘கடந்த சில வாரங்களுக்கு முன்பு தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மாணிக்கம், பழங்குடியின மக்களை தரம் தாழ்த்தி பேசியதால், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல, சேலம் மாநகர அவைத் தலைவர் முருகன், ஒரு ஜாதியை இழிவுபடுத்தி, தரம் தாழ்த்தி பேசும் ஆடியோ வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக மாநகர மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் கவனத்துக்கு தகவலை கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஏன் என கேள்வி எழுப்பினேன். ஜாதி துவேசத்துடன் பேசிய ஆடியோவை எதிர்க்கட்சியினர் வைரலாக்கினால், தி.மு.க.வுக்குத்தானே களங்கம் ஏற்படும். எனவேதான், பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசினேன். இதற்குப் போய் கட்சி நிர்வாகிகள் என்னை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்’’ என்றார்.
ஜாதி ரீதியாக இழிவாகப் பேசியதை தட்டிக்கேட்ட கவுன்சிலரிடம் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, தி.மு.க.வின் சமூக நீதி இதுதானா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.