நாய் திருட்டு: ரீல் VS ரியல்!

நாய் திருட்டு: ரீல் VS ரியல்!

Share it if you like it

சினிமாவில் காட்டப்படும் ‘ரீல்’ காட்சிகளை ‘ரியல்’ வாழ்க்கையில் செயல்படுத்திய இரு இளைஞர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதுதான் சோகத்திலும் சோகம்.

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி மாதம் 13-ம் தேதி ரிலீஸான படம் ‘நாய் சேகர்’. நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில், நாய்களை திருடி விற்பனை செய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தைப் பார்த்த இளைஞர்கள் இருவர், நிஜத்தில் காஸ்ட்லியான நாய்களாகப் பார்த்து திருடி வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, சின்னதிருப்பதி, சின்னகொல்லப்பட்டி பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் காஸ்ட்லியான நாய்கள் தொடர்ந்து காணாமல் போய் வந்தன. இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்தன. இதையடுத்து, கன்னங்குறிச்சி போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் வளர்த்து வந்த லேபர்டா வகையைச் சேர்ந்த ஜூலி என்கிற பெயர் கொண்ட நாய், கடந்த ஏப்ரல் 16-ம் தேதி திருடு போனது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸில் புகார் செய்திருந்தார் பிரவீன். மேலும், அஸ்தம்பட்டி பகுதியில் திருட்டு போன தனது நாயை கண்டுபிடித்துக் கொடுத்தால் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் சுவர் விளம்பரமும் செய்திருந்தார். அதேசமயம், போலீஸாரும் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், ஏற்காடு அடிவாரம் கொல்லப்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் அதிகளவில் நாய்கள் வளர்க்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த நவீன் (25), சண்முகவேல் (22) ஆகியோரின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு இளைஞர்கள் அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அஸ்தம்பட்டி மற்றும் கன்னங்குறிச்சி பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் உயர்ரக நாய்களை இருவரும் இரவோடு இரவாக கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், திருடப்பட்ட காஸ்ட்லி நாய்களை தங்களது பண்ணையில் இருக்கும் இதர நாய்களுடன் இணை சேர்க்கவிட்டு, அதன் மூலம் ஈனும் குட்டிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த பிரவீனின் ஜூலி என்கிற நாயை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். சினிமாவில் நடப்பதை எல்லாம் நிஜத்தில் செய்ய நினைத்தால் இப்படித்தான்.


Share it if you like it