சேலத்தில் தி.மு.க. பிரமுகரால் தனது நிலம் அபகரிக்கப்படவே, ஆத்திரமடைந்த விவசாயி கோவணத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாயியான இவருக்கு, 90 நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான சுலைமான் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், தனது அடியாட்களுடன் வந்த சுலைமான், விவசாயி விஜயகுமார் நிலத்தில் இருந்த 24 தேக்கு மரங்களை பிடுங்கி எறிந்ததோடு, பொக்லைன் இயந்திரம் மூலம் பயிர்களையும் நாசப்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்.
இதுகுறித்து விஜயகுமார் போலீஸில் புகார் அளித்தும், ஆளும்கட்சி பிரமுகர் என்பதால் சுலைமான மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேசமயம், புகார் அளித்ததை அறிந்த சுலைமான், மீண்டும் அடியாட்களுடன் சென்று விவசாயி விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் அதிருப்தியைடந்த விவசாயி விஜயகுமார், கோவணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்து விட்டுச் சென்றிருக்கிறார். இதுகுறித்து விவசாயி விஜயகுமார் கூறுகையில், “வெள்ளாளகுண்டம் பகுதியில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது நிலத்தை தி.மு.க. பிரமுகரான சுலைமான சட்ட விரோதமாக ஆக்கிரமித்து விட்டார்.
இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில், தனது அடியாட்களுடன் வந்த சுலைமான், எனது நிலத்தில் வளர்த்து வந்த 24 தேக்கு மரங்களையும் வேருடன் பிடுங்கிப் போட்டு விட்டார். மேலும், நிலத்தில் பயிரிட்டப்படிருந்த சோளப் பயிர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்து விட்டார். இதுகுறித்து நான் கேட்டதற்கு, என் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினார். ஆகவே, தி.மு.க. பிரமுகர் சுலைமான் மீது நடவ டிக்கை எடுத்து, எனது நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் கம்பி வேலியை அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.