சிறையில் இருந்த படியே வாதாடி விடுதலை பெற்ற `சேலத்துச் சிங்கம்` விஜயராகவாச்சாரியார்

சிறையில் இருந்த படியே வாதாடி விடுதலை பெற்ற `சேலத்துச் சிங்கம்` விஜயராகவாச்சாரியார்

Share it if you like it

சேலம் விஜயராகவாச்சாரியார்

 செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே பொன் விளைந்த களத்தூர் என்ற ஓர் ஊர். சடகோபாச்சாரியார் – கனகவல்லி ஆகியோரின் மகனாக, 1852 ஜூன் 18 ஆம் நாள் தோன்றியவர், விஜய ராகவாச்சாரியார்.  பின்னாளில் அவர் வாழ்வு சேலம் நகரோடு பின்னிப் பிணைந்ததால், “சேலம் விஜய ராகவாச்சாரியார்” என அழைக்கப் படலானார்.

சமூக மாற்றங்களை முன்னெடுத்துச் சென்ற மாபெரும் சீர்திருத்தவாதி, தேசத்திற்காகச் சிறை சென்ற சுதந்திரத் தியாகி, மாணவர்களைக் கவர்ந்த கல்லூரிப் பேராசிரியர், வாதத் திறமையால் புகழ் பெற்ற வழக்கறிஞர் என இன்னும் பல விதப் பரிமாணம் கொண்டு வாழ்ந்தவர்.

  1871ல், சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார், விஜய ராகவாச்சாரியார். அங்கு பேராசிரியராகப் பணியாற்றிய பூண்டி ரங்கநாத முதலியாரின் கடல் போன்ற தமிழறிவு அவரை பிரமிக்க வைத்தது. அவர் நடத்தும் இலக்கண மற்றும் இலக்கிய வகுப்புக்களுக்கு, ஓடி ஓடிச் செல்வார். ஒரு சொல் விடாமல், அவர் பேசும் அத்தனை பேச்சையும், ஆர்வத்தோடு கேட்பார்.

 ரங்கநாத முதலியார் நடத்தும் பாடங்களைக் கேட்டுக் கேட்டு, விஜய ராகவாச்சாரியாரின் தமிழார்வம், மேலும் வளர்ந்தது. தமிழில் புலமைப் பெற, அந்த ஆர்வமே வழி வகுத்தது.  

 மாநிலக் கல்லூரி மாணவரான அவர், படித்த பின், தான் பயின்ற அந்தக் கல்லூரியிலேயே ஆசிரியராகும் வாய்ப்பைப்  பெற்றார். கொஞ்ச காலம் அங்கு பணி செய்த பிறகு, மங்களூர் அரசுக் கல்லூரியில், பேராசிரியராகப் பணியேற்றார்.

 ஒரு பேராசிரியர் என்ற வகையில், அவரது புகழ் மாணவர்களிடையே கொடி கட்டிப் பறந்தது. மாணவர்கள் அனைவரும், தங்கள் சொந்த சகோதரருக்கும் மேலாக, அவரை அளவு கடந்து நேசித்தனர். ஆனால் அந்தக் கல்லூரி முதல்வராக இருந்த ஆங்கிலேயர், இந்தியர்களை வெறுக்கும் மனப்பான்மை கொண்டவராக இருந்தார். இந்தியர்கள் நாகரிகமில்லாதவர்கள் என்ற கருத்து, அவரிடம் வலுவாக இருந்தது. பிறவியிலேயே வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணமும் அவரிடம் இருந்தது.

இலைமறை காயாக அவர் மறைமுகமாய் இந்தியர்களை இளக்காரம் செய்த போது, கொஞ்சம் பொறுமைக் காத்தார், விஜயராகவாச்சாரியார். ஆனால், பலர் கூடி இருக்கும் போது, வெளிப் படையாகவே இந்தியர்களை இழிவாகப் பேசினார், கல்லூரி முதல்வர். அதைக் கேட்டு சுதந்திர வேட்கை கொண்ட விஜய ராகவாச்சாரியாரின் உள்ளம் கொதித்தது.

இந்தியர்களை இழிவாக நினைக்கும் ஒருவர், முதல்வராக இருக்கும் கல்லூரியில், தாம் பணியாற்ற விரும்பவில்லை என, நேரடியாகவே அவரிடம் அறிவித்தார்.

முகத்திற்கு நேரான இந்தப் பட்டவர்த்தனமான பேச்சைக் கேட்டுத் திகைத்து நின்ற அவரிடம், தம் ராஜினாமாக் கடிதத்தை கொடுத்து விட்டு, தம் பணியை உதறினார்.

சட்டக் கல்வியைத் தானாகவே பயின்று, பேராசிரியர் வேலையை உதறி, சேலத்திலேயே வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

  வழக்குரைஞர் பணியில் ஈடுபட்டவாறே, சேலத்திலேயே வாழலானார். இவ்விதமாகச் சேலம் அவரது ஊராயிற்று. அவர் பெயர் பெற்ற வழக்குரைஞராக விறுவிறுவென வளர்ந்த போது, சேலத்தின் பெயர் அவர் பெயரோடு ஒட்டிக் கொள்ள, அவர் சேலம் விஜய ராகவாச்சாரியார் ஆனார். அந்தப் பெயரிலேயே பொது மக்கள் எல்லோராலும் அவர் அறியப்பட்டார். 

சேலத்தில் 1882 ஆம் ஆண்டு, மதக் கலவரம் ஒன்று வெடித்தது. இரு மதத்தவரிடையே, கடும் மோதல். ஒரு தரப்பினரின் வழிபாட்டு இடத்தின் வெளியே, இன்னொரு தரப்பினர் ஊர்வலம் சென்ற போது வெடித்தக் கலவரம். அதில் ஈடுபட்ட சிலருக்கு விஜய ராகவாச்சாரியார் முன்னெப்போதோ வழக்குரைஞராக இருந்து இருக்கிறார் என்பதைத் தவிர, அவருக்கும் அந்த நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

  ஆனால் அவரது சுதந்திர வேட்கையைப் பொறுக்காத ஆங்கிலேயே அரசு, அவர் தான் கலவரத்தைத் தூண்டியவர் என பொய்க் குற்றம் சாட்டி, அவரைச் சிறையில் அடைத்தது. பத்தாண்டுகள் அந்தமான் சிறையில் இருக்க வேண்டும் என, அவருக்கு தண்டனை வழங்கப் பட்டது.

கொதித்தெழுந்த விஜயராகவாச்சாரியார், சிறையில் இருந்த படியே, உயர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தார். தன் தரப்பு நியாயம் முழுவதையும் தெளிவாக விளக்கி, நீண்ட கடிதம் எழுதினார். அதில் உள்ள நியாயத்தைப் பார்தத நீதிமன்றம், அவரை விசாரித்து, அவர் மேல் எந்தக் குற்றமும் இல்லை எனவிடுதலை செய்தது.

 தன்னோடு தண்டனை பெற்ற மற்றவர்களுக்காகவும் வாதாடினார், விஜயராகவாச்சாரியார். அனைவருமே விடுதலையானார்கள். ஆங்கிலேயரை எதிர்த்து நியாயம் பெற்ற அவர், `சேலத்துச் சிங்கம்` எனப் புகழப் படலானார்.

  விஜயராகவாச்சாரியர் நீதிமன்றத்தில் வாதாடும் போது, அவரது வாதத் திறமையைக் காணவென்றே, மற்ற வழக்கறிஞர்களும், பொது மக்களும், நீதிமன்றத்தில் கூட்டமாகக் கூடுவார்கள். ராஜாஜி, சேலம் விஜயராகவாச்சாரியாரின் ஜூனியர் என்பது குறிப்பிடத் தக்கது.

 விஜய ராகவாச்சாரியார் எப்போதும், ஒரு தேசியவாதியாகவே திகழ்ந்தார். மகாத்மா காந்தியிடம் அவருக்குப் பெரும் மதிப்பிருந்தது. காந்தியம் சார்ந்த சமூக சீர்திருத்தங்களில், அளவற்ற நாட்டம் கொண்டிருந்தார், அவர். மகாத்மா சுட்டிக் காட்டிய நிர்மாணப் பணிகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. அவற்றில் இயன்ற வரை, தம்மை ஈடுபடுத்திக் கொள்ள, அவர் தயங்கவில்லை.

  பெண்களுக்கு, அவர்களின் தந்தையின் சொத்தில், கட்டாயம் பங்குண்டு என்பதும், அவர் கருத்து. இது குறித்தும் அவர் பல மேடைகளில் பிரசாரம் செய்திருக்கிறார். சுவாமி சாரதானந்தரின் இயக்கத்தில் சேர்ந்து, தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடியவர்களில், விஜய ராகவாச்சாரியார் முக்கியமானவர். 

 தீண்டாமை ஒழிப்பை முன்னிறுத்தி நடத்தப் பட்ட இயக்கங்களுக்கு, தாராளமாக நிதியுதவி செய்தார் என்பதும், வரலாற்றில் பதிவாகியுள்ளது. தீண்டாமை ஒழிப்புப் பணியில், அவர் வாழ்நாள் முழுவதும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.  

 92 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்தவர், தென்னிந்தியாவின் தலைவர் எனப் புகழ் பெற்றிருந்தவர், தமது இறுதிக் காலங்களில் அந்தப் பெரிய பொறுப்பை மூதறிஞர் ராஜாஜிக்குத் தாமே விரும்பி அளித்தார்.

 ஜாதி மத வேறுபாடில்லாத, ஒட்டுமொத்தமான சமுதாய முன்னேற்றமே அவரது லட்சியமாக இருந்தது. ஆண் – பெண் சமத்துவத்தையும் அவர் வலியுறுத்த தவறவில்லை. 1944 ஆம் ஆண்டு, ஏப்ரல் 19 ஆம் நாள், முதுமையின் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

 நாட்டுப் பற்று, சமூக மேம்பாடு, நியாயத்திற்காகப் போராடும் துணிச்சல், கடும் நேர்மை ஆகியவற்றின் எடுத்துக் காட்டாக, இன்றளவும் சேலம் விஜயராகவாச்சாரியாரின் பெயர் நிலைத்து நிற்கிறது.


Share it if you like it