சனாதன தர்மத்தின் மூலமான முன்னோர் வழிபாடு – மஹாளய பக்ஷம் எனும் மகோன்னத காலம் – புரட்டாசி மாத சிறப்பு

சனாதன தர்மத்தின் மூலமான முன்னோர் வழிபாடு – மஹாளய பக்ஷம் எனும் மகோன்னத காலம் – புரட்டாசி மாத சிறப்பு

Share it if you like it

ஓம் நமோ நாராயணா

மஹாளய பக்ஷம் எனும் புண்ய காலம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முந்தைய 14 தேய்பிறை திதிகள் அடங்கிய காலமாகும்

ஆவணி மாதத்தின் இறுதியில் பவுர்ணமி வரும் பட்சத்தில் இந்த மஹாளயபட்சம் ஆவணி மாதத்தின் இறுதியில் இருந்து தொடங்கும் .புரட்டாசி மாதத்தில் முதலில் பௌர்ணமி வரும் பட்சத்தில் முழு மஹாளய பக்ஷமும் புரட்டாசி மாதத்திலேயே வரும் . இந்த 14 நாட்களும் விண்ணுலகில் வாழும் நம் முன்னோர்கள் தன் சந்ததிகளின் நலன் கருதி அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டி விண்ணுலகம் நீங்கி மண்ணுலகம் இறங்கி 14 நாட்கள் முழுமையாக பூலோக வாசம் செய்வார்கள் . பதினான்காம் நாளான மஹாளய அமாவாசை அன்று தன் சந்ததிகள் சிரத்தையோடு செய்யும் திதி தர்ப்பணம் சிரார்த்தம் யாவையும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்கி மண்ணுலகம் நீங்கி மீண்டும் விண்ணுலகம் போய் சேர்வார்கள்.

இந்த பதினான்கு நாட்களும் நம் முன்னோர்கள் முன் ஏழு தலைமுறையினர் நம் இல்லம் தோறும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன் காரணமாகவே இந்த மஹாளயபட்சம் வரும் 14 நாட்களும் இல்லமும் உள்ளமும் தூய்மையாக இருந்து அகத்தூய்மை புறத்தூய்மை பேணிக்காத்து தினமும் வீட்டில் நம் முன்னோருக்கு நம்மாலான படையல் வைத்து அவர்களை நினைவுகூர்ந்து வணங்கி வரவேண்டும் என்பது புராணங்களில் கூற்று .இந்தப் பதினான்கு நாட்களில் நாம் வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் கடும் சொற்களைப் பேசாமல் துவேஷம் பேசுதல் புறம் பேசுதல் சாபம் விடுதல் போன்ற பாவச் செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும் . அதுமட்டுமின்றி போதைப்பொருட்கள் புகையிலைப் பொருட்கள் அசைவ உணவு யாவும் தவிர்க்கப்பட வேண்டும் இவை அனைத்தும் நமது மனைக்குள்ளே வராமல் தடுப்பது உத்தமம் இதை உபயோகிப்பவர்களையும் மனைக்குள் அனுமதிக்காமல் இருப்பது அதி உத்தமம் .

இந்த மஹாளய பட்சம் என்னும் புண்ணிய காலத்தில் நாம் இல்லத்தில் நாம் செய்யும் எந்த ஒரு காரியத்தின் பலனும் தானாக நம் முன்னோரை போய்ச் சேரும் என்பது ஐதிகம் . அதனால் இந்த காலகட்டத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் நம் முன்னோருக்கு புண்ணியத்தை பெற்றுத்தரும் அதன் மூலம் நமக்கு அவர்களின் ஆசி கிட்டும் மாறாக நாம் செய்யும் பாப செயல்கள் அவர்களுக்கு பாவத்தை பெற்றுத்தரும் அதன் மூலம் நாம் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் .எனவே தான் நம் முன்னோர் நம் இல்லம் தேடி வரும் இந்த மஹாளயபட்சம் வரும் புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவம் உள்ளிட்ட பல தீய விஷயங்களை தவிர்த்து நம் முன்னோர் முன்னோர் வழிபாடு இறை வழிபாடு என்று பூஜிக்கும் காலமாக வகுத்திருக்கிறார்கள்

இந்தப் பதினான்கு நாட்களும் நாம் நல்லன பேசி நல்லன சிந்தித்து நன்மை தரும் இறைவன் நாமங்களை உச்சரித்து முடிந்த வரையில் வீட்டில் தினமும் பூஜை செய்து முன்னோர்களுக்கு படையல் வைத்து காகம் என்னும் முன்னோரின் பிரதி பிம்பத்திற்கு உணவளித்து பசு என்னும் நடமாடும் தெய்வத்திற்கு உணவும் நீரும் வழங்கி இயன்றவரையில் பறவைகள் விலங்குகள் உள்ளிட்டவற்றிற்கும் உணவளித்து வருவதும் வீட்டிற்கு வரும் கன்னிகைகள் மற்றும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் புஷ்பம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்குவதும் முடிந்தவரையில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வஸ்திர தானம் முதல் கோதானம் பூதானம் வரை வழங்குவது நம் இல்லத்தில் வாசம் செய்யும் நம் முன்னோரின் ஆன்மாவை குளிரச் செய்யும் அதோடு அவர்களின் அளவற்ற அன்பையும் எல்லையற்ற ஆசியையும் நமக்கு பெற்றுத்தரும்

இறுதியாக பதினான்காம் நாளான மஹாளய அமாவாசை வரும் நாளில் சூரியன் அனுக்கிரகம் பெற்றுத்தரும் சூரிய உதய வேளையில் சந்திரன் அனுகிரகம் பெற்றுத்தரும் ஆற்றங்கரை குளக்கரை நதி தீரத்தில் கடல் தீரத்தில் நீராடி சிரத்தையோடு நம் முன்னோருக்கு உரிய பிண்ட படையல் வைத்து திதி தர்ப்பணம் தனை சிரத்தையோடு செய்து அதை முன்னின்று செய்து தரும் புரோகிதருக்கு நம்மாலான தட்சனை என்னும் காணிக்கையை மனமுவந்து வழங்கி அவரின் ஆசியை பெறும்போது இவை யாவற்றின் நற் பலனையும் நம் முன்னோரின் ஆன்மா பெற்றுக் கொள்ளும் அந்த ஆன்மா குளிர்ந்து நம்மை முழுமனதோடு ஆசீர்வதிக்கும்.இந்த முன்னோரின் ஆசியும் அனுக்கிரகமும் நமக்கு முன் ஏழு‌ தலைமுறைகளுக்கும் பின் ஏழு தலைமுறைகளும் மோட்சம் பெறச்செய்யும் முக்தி மார்க்கத்தை தரும் உபாயமாகும் அது நம்மையும் நம் சந்ததிகளையும் மென்மேலும் புண்ணிய பாதையில் இட்டுச் செல்லும் .எனவேதான் ஏதோ காலச் சூழலால் விடுபட்டுப் போன திதி தர்ப்பணங்களை கூட மாளய பட்சத்தில் செய்துவர நமக்கு பலன் உண்டு என்ற அறிவுரையை நமக்கு வேதங்கள் எடுத்துரைக்கிறது

மேலும் அகாலமரணம் துர்மரணம் என்ற வகையில் மரணித்த ஆன்மாக்கள் கூட பூவுலகம் நீங்கி விண்ணுலகம் சேரும் மோக்ஷம் என்னும் பெயர் பெற்றுத் தரவல்லது இந்த புண்ணியமான மஹாளய அமாவாசை திதியும் அந்நாளில் நாம் செய்யும் முன்னோர் தர்ப்பணமும் என்பதை புராணங்கள் வாயிலாக அறியப் பெறுகிறோம். குருஷேத்திர யுத்தத்தில் எண்ணற்ற உயிர்கள் இறந்தபோது அவர்கள் யாவருக்கும் சேர்த்து அடுத்து வந்த மஹாளயய பக்ஷத்தில் பாண்டவர்கள் திதி தர்ப்பணம் செய்ததாக மகாபாரதம் எடுத்தியம்புகிறது அதிலிருந்து இந்த மாளய பட்சத்தில் மகத்துவம் தனை நாம் உணர்ந்து கொள்ளலாம் .அதோடு தீர்த்த கரைகள் என்னும நீர்நிலைகளில் சென்று தர்ப்பணம் செய்ய இயலாத நிலையில் நம்முடைய இல்லம் அல்லது வயல்வெளிகளில் இருக்கும் கிணறுகள் அல்லது ஓடும் நீர் நிலைகளில் கூட இந்த தர்ப்பணத்தை நாம் செய்யலாம்.

தர்ப்பணம் செய்து முடித்து காணிக்கை செலுத்திய பிறகு மீண்டும் நீராடி ஏதேனும் ஒரு ஆலயத்தில் இறைவனை வணங்கி அதன் பிறகு ஏதேனும் ஒரு தானம் குறைந்தபட்சம் அன்னதானம் செய்வது அதி உத்தமம். இல்லத்தில் செய்து வரும் பொழுது வீட்டில் படையல் வைத்து முடிந்தவரையில் நாம் கடைப்பிடிக்கும் ஆச்சார அனுஷ்டானங்களை கடைப்பிடிக்கும் தூய மனிதர்களை அழைத்து அவர்களுக்கு உணவளித்து அதன் பிறகு நாம் உண்டுவர நல்ல பலன் உண்டு

மூத்தோர் குரு ஸ்தானத்தில் இருக்கும் ஆசிரியர்கள் அல்லது அர்ச்சகர் புரோகிதர் போன்றவர்களுக்கு முடிந்த கைங்கரியம் செய்து அவர்களை நமஸ்கரித்து வருவது அந்நாளில் நமக்கு சகல தோஷ நிவாரணியாக இருக்கும். விடுபட்ட திதி தர்ப்பணம் மற்றும் அகால துர் மரணம் அடைந்த ஆன்மாக்களுக்கான திதி தற்பணம் யாவையும் முடிந்தவரையில் முக்தித் தலங்கள் என்னும் ஏழு புண்ணிய தலங்களில் செய்துவருவது அதி உத்தமம் ஆகும்

1– காசி

2–கயா

3– அயோத்தி

4– பிரயாகை

5– ஹரித்வார்

6- காஞ்சிபுரம்

7– இராமேஸ்வரம்

என்னும் தலம் தீர்த்தம் மூர்த்தி எனும் மூன்று பேர்களையும் பெற்று பக்தி தலங்களாக இறைவன் வாழும் புண்ணிய தலங்களாகும் மேற்கண்ட முக்தி தரும் தலங்கள் யாவும் இந்தப் புண்ணிய தலங்களை நாம் ஸ்பரிசிக்க வே பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் முன்னோர் ஆசியும் இறைவன் அனுக்கிரகமும் இருந்தால் மட்டுமே இந்த தலங்களுக்கு நாம் பிரவேசித்து அங்கு நாம் முன்னோருக்கு திதி தர்ப்பணம் செய்யும் பாக்கியம் நமக்கு கிட்டும்

இதனையே நம் முன்னோர் முன்னோர் பாக்கியம் முக்தித் தல சித்தி என்று சொல்லி வைத்தார்கள்

அதி உன்னதமான இந்த மஹாளய பக்ஷம் என்னும் புண்ணிய காலத்தில் நம் இல்லம் தேடி வரும் நம் முன்னோரின் ஆன்மாவை வணங்கி வரவேற்போம்

இல்லமும் உள்ளமும் தூய்மை பேணி நம் முன்னோரின் ஆன்மாவை குளிர செய்வோம். இயன்ற வரையில் 14 நாட்களும் அவர்களுக்கு படையல் வைத்து காகத்துக்கு ஒரு பிடி அன்னம் இட்டு நம் முன்னோரின் ஆத்ம பசியை போக்குவோம் .மாளய அமாவாசை தினத்தில் சிரத்தையுடன் திதி தர்ப்பணம் செய்து நம் முன்னோருக்கு மோட்சம் என்னும் முக்தி யை பெற்றுத் தந்து அவர்களின் ஆசியும் அனுக்கிரகமும் கொண்டு நாமும் நமது சந்ததிகளும் சகல சௌபாக்கியமும் பெற்று வாழ வகை செய்வோம்.

ஒரு நன்மை இன்னொரு நன்மைக்கு இட்டுச்செல்லும் என்பதற்கேற்ப என்று நாம் நம் முன்னோருக்கு செய்யும் சிரார்த்தம் அவர்களுக்கு மோட்சத்தை பெற்றுத் தருவதை போல நம் சந்ததிகள் எதிர்காலத்தில் நமக்கு செய்யும் தர்ப்பணம் நமக்கு மோட்சத்தை தரவல்லது என்பதை உணர்ந்து நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய வாழ்நாள் கடமையான ஸ்ரார்த்தம் என்னும் திதி தர்ப்பணம் தனை முழுமனதோடு ஆத்மார்த்தமாக செய்து நம் முன்னோருக்கும் எதிர்காலத்தில் நமக்கும் முக்தி சேர்க்கும் சனாதனத்தின் வழியில் பயணிப்போம்.

ஓம் நமசிவாய.


Share it if you like it